இலவசத்துக்கு எதிராகப் பேசும் மோடி... இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கும் கர்நாடகா பாஜக - என்ன கதை இது?!

‘இலவச கலாசார’த்துக்கு எதிராக பிரதமர் மோடி தொடர்ந்து பேசிவருகிறார். அரசியல் கட்சிகள் வழங்கும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு உ.பி-யில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் திடீரென பேசினார் பிரதமர் மோடி. அப்போது, “இலவச கலாசாரம் நாட்டுக்கு ஆபத்தானது. எனவே, அதற்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இலவச கலாசாரத்தை வளர்ப்பவர்கள் புதிய எக்ஸ்பிரஸ் சாலைகளையோ, புதிய விமான நிலையங்களையோ ஒருபோதும் உருவாக்க மாட்டார்கள். எனவே, இலவச கலாசாரத்தை இந்திய அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி

இதன் மூலம், நம் நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்றுவரும் ‘இலவசங்கள்’ குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி. அந்த உரையில், ‘இலவசங்களால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துவிடும்' என்பது மோடி முன்வைத்த முக்கியக் கருத்தாகப் பார்க்கப்பட்டது. அதன் பிறகு, கர்நாடகா சட்டமன்றத் தேர்தலையொட்டி, பா.ஜ.க தொண்டர்களிடையே சில நாள்களுக்கு முன்பாக காணொளி மூலம் பேசிய பிரதமர் மோடி, இலவசங்களை கடுமையாக விமர்சித்தார்.

ஏனெனில், கர்நாடகாவில் ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கியிருக்கிறது. ‘க்ருஹ லக்‌ஷ்மி’ திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும்; ‘யுவா நிதி’ திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு இரண்டாண்டுகள் வரை மாதம் ரூ.3000 வழங்கப்படும்; வேலையில்லா டிப்ளமோ பயின்றவர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும்; ‘க்ருஹ ஜோதி’ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வழங்கியிருக்கிறது.

ராகுல் காந்தி

மேலும், அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் வை ஃபை ஹாட்ஸ்பாட்கள் அமைக்கப்படும்; ‘அன்ன பாக்யா’ திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, கேழ்வரகு, கம்பு, என சிறுதானியம் 10 கிலோ வழங்கப்படும் என்ப போன்ற வாக்குறுதிகளையும் காங்கிரஸ் கட்சி வழங்கியிருக்கிறது. இந்த வாக்குறுதிகள் கர்நாடகா மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில்தான், கர்நாடகா பா.ஜ.க தொண்டர்களிடையே பேசிய மோடி, இலவசங்களை கடுமையாக விமர்சித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இவ்வாறு இலவசங்கள் வழங்குவதால் மாநிலத்தின் கடன் சுமை அதிகரிக்கும். இப்படியெல்லாம் ஒரு நாடும், மாநில அரசுகளும் செயல்பட முடியாது. நம் நாட்டில் சில அரசியல் கட்சிகள் ஊழலும் அதிகாரமும்தான் அரசியல் என்று மாற்றிவைத்திருக்கின்றன. அதை அடைவதற்கு, சாம, பேத, தான, தண்ட என எல்லாவற்றையும் பயன்படுத்துகின்றன. இந்த அரசியல் கட்சிகள் நாட்டின் எதிர்காலம் பற்றியோ, கர்நாடகாவின் வருங்காலத் தலைமுறையினர் பற்றியோ, அதன் இளைஞர்கள் மற்றும் பெண்கள் பற்றியோ சிந்திப்பதில்லை” என்றார்.

இப்படியெல்லாம் பிரதமர் மோடி இலவசங்களுக்கு எதிராக விளாசித்தள்ளிய ஒரு சில நாள்களிலேயே, பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் இலவச பால், இலவச சிலிண்டர் என இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. இலவசங்களை ஒழிக்க வேண்டும் என்றும், இலவசங்களால் தேசத்துக்கு ஆபத்து என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே, இன்னொருபுறம் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை அளிப்பது இரட்டை வேடம் இல்லையா என்று பிரதமரை நோக்கிய கேள்வி எழுப்புகின்றன எதிர்க் கட்சிகள்.

நரேந்திர மோடி

எப்படியாவது தேர்தலில் ஜெயித்துவிட வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் சாம, பேத, தான, தண்டம் என அனைத்தையும் கையிலெடுக்கின்றன என்று பிரதமர் கூறுவதைப்போலத்தானே, பிரதமர் சார்ந்திருக்கும் பா.ஜ.க-வும் அதே ஆயுதங்களைக் கையிலெடுக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலின்போதும், இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை பா.ஜ.க வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க அரசால் வழங்கப்படும் இலவசங்களால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆபத்து ஏற்படாதா? பா.ஜ.க அரசு இலவசங்களை வழங்கினால், அரசின் கடன் சுமை அதிகரிக்காதா என்று எதிர்க் கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பா.ஜ.க-வின் பதில் என்ன?



from India News https://ift.tt/3v4PX9w

Post a Comment

0 Comments