திருப்பூர் மாவட்டத்திலுள்ள கல்குவாரிகள் முறையான அனுமதியின்றி செயல்படுவதாக விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பிலிருந்து பல்வேறு புகார்கள் எழுந்தன. மேலும், விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாதாந்திரக் கூட்டம், அமைச்சர்கள், ஆட்சியரின் ஆய்வுக்கூட்டங்களில் கனிம வளத்துறை உதவி இயக்குநர் வள்ளல் கலந்துகொள்ளாமலும், விதிமீறும் கல்குவாரிகள்மீது நடவடிக்கை எடுக்காமலும் மெத்தனமாகச் செயல்பட்டுவந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், கனிம வளத்துறை உதவி இயக்குநர் வள்ளலைப் பணியிலிருந்து விடுவித்து ஆட்சியர் வினீத் உத்தரவிட்டிருக்கிறார். திருப்பூர் ஆட்சியராக இருந்த வினீத், இரண்டு நாள்களுக்கு முன்பு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பணியிலிருந்த கடைசி நாளில், கனிம வளத்துறை உதவி இயக்குநர் வள்ளலைப் பணியிலிருந்து விடுவித்து ஆட்சியர் வினீத் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஆட்சியர் வினீத் பிறப்பித்திருக்கும் உத்தரவில், "திருப்பூர் மாவட்டக் கனிம வளத்துறை உதவி இயக்குநராகப் பணியாற்றிவரும் வள்ளல், தனது அலுவலகத்தில் கோமதி என்ற பெண்ணைப் பணிக்கு அமர்த்தியிருக்கிறார். இது அரசு விதிகளுக்குப் புறம்பானது. மேலும், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டங்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள், அமைச்சர், ஆட்சியரின் ஆய்வுக்கூட்டங்கள் எதிலும் கலந்துகொண்டதில்லை.
வள்ளலின் செயல்பாட்டால், மக்கள் மத்தியில் மாவட்ட நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெற அவருக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும், வள்ளல் விளக்கமளிக்கவில்லை. எனவே, தமிழ்நாடு குடிமைப் பணி விதி 17(a)-ன் கீழ், வள்ளல் புதன்கிழமை முதல் (மே17) உதவி இயக்குநர் பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக உதவி புவியியலாளர் சச்சின் ஆனந்த், கனிம வளத்துறை உதவி இயக்குநர் பொறுப்பைக் கூடுதலாக கவனித்துக்கொள்ள நியமிக்கப்படுகிறார்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
from India News https://ift.tt/79nmpcS
0 Comments