சசிரேகா, செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க
``முந்தைய தி.மு.க ஆட்சியில் மாநிலத்தின் மொத்த மின்துறை யையும் சிதைத்த காரணத்தால் ஆட்சியை இழந்தார்கள். ஆனால், அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற 10 மாதங்களில் தமிழகம் மின்மிகை மாநிலமாக ஆனது. தற்போது, விடியா அரசின் திறனற்ற நிர்வாகத்தால் மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. `கள்ளச்சாராயம் அல்ல விஷச்சாராயம்’ என்று மக்களை மடைமாற்றுவதுபோல, `மின்வெட்டு அல்ல மின்தடை’ என்று வார்த்தை ஜாலம் காட்டுகிறார் செந்தில் பாலாஜி. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பராமரிப்புப் பணிகள் எதுவும் நடைபெறாமலா மக்களுக்கு 24 மணி நேரமும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது... அல்லது அப்போது அணில்களெல்லாம் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டனவா... ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை மின்துறையில் காட்டுவதில்லை. இவர்களின் நிர்வாகத் திறனின்மையை மறைக்க, சாக்குப் போக்கு சொல்லிக்கொண்டிருக் கிறார்கள். ஏற்கெனவே சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. இதில், மின்வெட்டு காரணமாக மக்கள் ஆங்காங்கே வீதிகளில் வந்து போராடுவதைப் பார்க்கிறோம். தெரு விளக்குகள் எரியாத காரணத்தால் மக்கள் அச்சத்துடனேயே சாலைகளில் நடமாடுகிறார்கள்!’’
சிவ.ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க
``அமைச்சர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். எதிர்க்கட்சியினர், இல்லாத மின்வெட்டு பிரச்னையை பூதாகரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒருசில இடங்களில் உயர் மின்னழுத்தம் காரணமாக மின்தடை ஏற்பட்டபோதும் அவை உடனடியாகச் சரிசெய்யப்பட்டிருக்கின்றன. இதுவரை, மின்னகத்துக்கு வரப்பட்ட 16 லட்சம் புகார்களில், 99 சதவிகிதப் புகார்கள் தீர்த்துவைக்கப்பட்டிருக்கின்றன. ‘தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையின் அளவுக்குத் தலைநகர் சென்னையில் மின் தேவை இருக்கிறது. அதை, தமிழக அரசு சிறப்பாகக் கையாளுகிறது. 12 மாவட்டங்களில் துணை மின் நிலையங்கள், 26 மாவட்டங்களில் புதிதாக திறன் அதிகரிக்கப்பட மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு, இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக கிராமப்புறங்களுக்குத் தடையில்லாத மின்சாரம் வழங்கிவருகிறது’ என ஒன்றிய மின்துறை அமைச்சரே பாராட்டியிருக்கிறார். அ.தி.மு.க ஆட்சியில் பராமரிப்புப் பணிகள் எதையும் மேற்கொள்ளாததால் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. இந்த ஆட்சி பொறுப்பேற்றதும், உடனடியாக அனைத்துப் பிரச்னைகளையும் சரிசெய்து, மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கியிருக்கிறது. எனவே, மின்வெட்டு அதிகரித்திருப்பதாக தி.மு.க அரசைக் குறைசொல்ல அ.தி.மு.க-வினருக்கு எந்த அருகதையும் இல்லை.’’
from India News https://ift.tt/AQv8dk9
0 Comments