தமிழ்நாட்டின் தொழிற்துறை வளர்ச்சிக்கு உதவும் வகையில் முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணமாகச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், அங்கிருந்து தி.மு.க தொண்டர்களுக்கு மடல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அவர். அதில், ``ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருக்கிறேன். உடன்பிறப்புகள் உங்கள் முகத்தை நான் நேரில் பார்த்து 9 நாள்களாகின்றன.
கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை என் தோளில் சுமத்தி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பையும் சுமக்கும்படி கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கு உழைத்தீர்கள். அன்பிற்கினிய தமிழ்நாட்டு மக்களும், நெஞ்சிற்கினிய உடன்பிறப்புகளாகிய நீங்களும் அளித்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு, தமிழ்நாட்டை முன்னேற்றிட எல்லா வகையிலும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
பத்தாண்டுக்கால இருட்டை ஒவ்வொரு பகுதியாக விரட்டி, விடியலைத் தந்து கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. இன்னும் சில பகுதிகளில் இருட்டு ஒளிந்து கொண்டிருக்கிறது. அதையும் விரட்டி, ஒளிமிகுந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே நம் இலக்கு. அதனால்தான் கடந்த இரண்டாண்டுகளில் தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள், முதலீடுகள் தொடர்பான நிகழ்வுகளில் அதிகமாகவும் ஆர்வமாகவும் பங்கேற்று வருகிறேன்.
தொழில்வளம் பெருக வேண்டும், வேலை வாய்ப்புகள் உயர வேண்டும். உற்பத்தி அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார முன்னேற்றம் காண முடியும். அதற்காக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை திராவிட மாடல் அரசுக்கு ஆலோசனை வழங்கும் பொருளாதார வல்லுநர்கள் எடுத்துரைத்திருந்தனர். இந்த நிலையில்தான் கடல் கடந்து, சிங்கப்பூர் - ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணச் சிறகுகளை விரித்தேன்.
9 நாள்கள் வெளிநாட்டுப் பயணமா, இவ்வளவு நாள்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்ததில்லையே என நான் தயங்கினாலும், இந்தப் பயணம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது என்பதால் பயணச் சிறகுகள் விரிந்தன. சிங்கப்பூரிலும் ஜப்பானிலும் நாம் நினைத்தபடி, வெற்றிகரமாக பயணம் அமைந்த நிலையில், தாய்மடியாம் தமிழ்நாட்டை நோக்கிப் பயணிக்க ஆயத்தமாகும் சூழலில், உடன்பிறப்புகளிடம் இந்தப் பயணத்தின் நோக்கத்தையும், பயண நிகழ்வுகளையும், அவை ஏற்படுத்தவிருக்கும் விளைவுகளையும் விளக்கமாகச் சொல்லிட வேண்டும் என்கிற என் மனதின் விருப்பமே இந்தக் கடிதம். ஒரு டைரிபோல இதை எழுதுகிறேன்.
மே 23-செவ்வாய்;
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையத்திலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்படும் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தேன். இந்தப் பயணத்தில் எவ்வளவு முதலீடு கிடைக்கும் என்பதைவிட, 2024 ஜனவரியில் சென்னையில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு சிங்கப்பூர் - ஜப்பான் நாட்டின் நிறுவனங்களை அழைப்பதுதான் பயணத்தின் முதன்மையான நோக்கம் என்பதைத் தெரிவித்தேன்.
கடந்த ஆண்டு துபாய்க்குப் பயணம் செய்தபோது, ஒப்பந்தமான முதலீடுகள் எந்தளவு வந்திருக்கின்றன என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டபோது, எந்தெந்த நிறுவனங்களிலிருந்து எவ்வளவு முதலீடு வந்திருக்கிறது என்ற விவரத்தையும் ஆதாரத்துடன் அவர்களிடம் தெரிவித்தேன். இந்தப் பயணத்தில் என்னுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ், தொழில் - முதலீட்டு ஊக்குவிப்பு - வணிகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
எனக்கான உணவு, என் உடல்நலன் ஆகியவற்றை கவனித்துக்கொள்ளும் பொருட்டு என் துணைவியாரும் உடன்வந்தார். சிங்கப்பூர் விமான நிலையத்தில் சிங்கப்பூர் நேரப்படி இரவு 7 மணிக்கு தரையிறங்கினேன். நல்வரவேற்புடன், நாங்கள் தங்கவேண்டிய ஹோட்டலுக்குப் புறப்பட்டோம். இரவு நேரமானபோதும், சிங்கப்பூர் வாழ் தமிழ்ச் சொந்தங்களும், டி.வி.எஸ் குழுமத்தைச் சேர்ந்த சுதர்சன் சீனிவாசனும் வரவேற்றனர். ஹோட்டல் அறைக்குச் சென்றபிறகும் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் சிங்கப்பூர் பயணத் திட்டம் குறித்த ஆலோசனைகள் நீடித்தன.
மே 24-புதன்;
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக சிங்கப்பூரைச் சேர்ந்த டெமாசெக் நிறுவனத்தின் சேர்மனும் தலைமைச் செயல் அதிகாரியுமான தில்லான் பிள்ளை சந்திரசேகரா, செம்ப்கார்ப் நிறுவனத்தின் சேர்மனும் தலைமைச் செயல் அதிகாரியுமான கிம்யின் வாங், கேபிட்டாலேன்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான திரு.சஞ்சீவ் தாஸ்குப்தா ஆகியோருடனான வெற்றிகரமான சந்திப்புடன் அன்றைய நாள் தொடங்கியது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சென்னையில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அவர்களுக்கு அழைப்பு விடுத்தேன்.
மாலையில் சிங்கப்பூரின் தொழில் - வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரான தமிழர் ஈஸ்வரனைச் சந்தித்து உரையாடினேன். அவர் என் இனிய நண்பர். நான் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளும்போது அவரைச் சந்திப்பதும், அவர் சென்னைக்கு வரும்போது என்னைச் சந்திப்பது வழக்கம். சிங்கப்பூர் அரசு செயல்படுத்தும் திட்டங்களைப்போல தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும் என்பது அவரின் விருப்பம். அவரைச் சந்தித்து உரையாடியபோது, சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டுக்கான தொழில் வாய்ப்புகள் குறித்து ஆலோசித்தோம்.
ஈஸ்வரன் அவர்களுடன் புறப்பட்டு, சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடனான கருத்தரங்கில் பங்கேற்றேன். அதில், தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் ஆகியோர் பேசியபிறகு, முதலீட்டாளர்களுடன் நான் உரையாடினேன். தமிழ்நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள நீண்டகால உறவை எடுத்துக்கூறி, வந்தாரை வாழவைக்கும் சிங்கப்பூர், இனி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் கை கொடுக்கும் என்று நான் நம்புவதாகச் சொன்னபோது அனைவரும் கை தட்டல்களால் வரவேற்றனர்.
முதலீட்டாளர் மாநாட்டுக்கான அழைப்பினை விடுத்து அவர்களிடமிருந்து விடைபெற்றேன். அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர்வாழ் தமிழ் நெஞ்சங்கள் கலாசார-பண்பாட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சரான தமிழர் சண்முகத்தை அந்த விழாவில் சந்தித்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சிங்கப்பூர் பிரதமருக்கு அடுத்த நிலையில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கக்கூடிய தமிழரான சண்முகம், அந்நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறார்.
அவர், தமிழ்நாட்டில் நடைபெறும் நமது திராவிட மாடல் ஆட்சியை எந்தளவு கவனிக்கிறார் என்பதை ‘நான் முதல்வன்’ திட்டத்தில் வழங்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், காலைச் சிற்றுண்டித் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கான மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் பாராட்டிப் பேசியபோது உணரமுடிந்தது. சிங்கைவாழ் தமிழர்களின் உணர்வையும் உழைப்பையும், சிங்கப்பூர் நாட்டின் வளர்ச்சிக்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் என்னுடைய பேச்சில் எடுத்துரைத்தேன்.
தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியில் அவர்கள் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். சிங்கப்பூர் உலகளவில் இன்று உயர்ந்து நிற்கக் காரணமான அதன் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ தமிழர்களின் உழைப்பை மதித்துப் போற்றியதுடன், சிங்கப்பூரின் அரசு நிர்வாக மொழிகளில் ஒன்றாகத் தமிழையும் இடம்பெறச் செய்த மாண்பாளர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பெருமை சேர்க்கும் வகையில் மன்னார்குடியில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டு, அங்கே அவரின் சிலை நிறுவப்படும் என்று அறிவித்தபோது, வரவேற்பும் ஆரவாரமும் நெடுநேரம் நீடித்தன.
சிங்கப்பூரில் வாழும் தமிழர்களில் பலர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அதனால்தான், மன்னார்குடியில் நினைவுச் சின்னம் என அறிவித்தேன்.
மே 25-வியாழன்;
காலைப் பொழுதில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர், மதுரைக்கும் சிங்கப்பூருக்குமிடையே நேரடி விமானச் சேவை போதுமான அளவில் அமைந்தால் இங்குள்ள தமிழர்கள் தாய்த் தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் வந்து பண்பாட்டுப் பெருமையை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
இந்திய ஒன்றிய அரசிடம் இதனை வலியுறுத்தி, விரைவில் உரிய அளவில் விமானச் சேவைக்கு ஏற்பாடு செய்வதாக அவரிடம் தெரிவித்து, அவரையும் முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைத்தேன். சிங்கப்பூரின் முன்னாள் அதிபரான தமிழர் எஸ்.ஆர்.நாதன் அவர்களுக்குத் தமிழ்ப் பாடம் நடத்தியவர் முனைவர் சுப.திண்ணப்பன். சிங்கையில் தமிழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து தொண்டாற்றி வருபவர். அவரது தமிழ்ச் சேவையைப் பாராட்டி அவருக்குச் சிறப்பு செய்தேன். கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டதை அவர் பாராட்டி, தமிழர் பெருமைக்கு இது ஒன்று போதும் என்று மனதாரப் புகழ்ந்தார்.
சிங்கப்பூர் ‘தமிழ் முரசு’ நாளிதழ் அந்த நாட்டுத் தமிழர்களின் குரலாக 1935 முதல் ஒலித்து வருகிறது. திருவாரூரில் பிறந்து, சிங்கப்பூரில் வளர்ந்து, அந்நாட்டு அரசுடன் இணைந்து தொண்டாற்றிய தமிழவேள் கோ.சாரங்கபாணியால் வார ஏடாகத் தொடங்கப்பட்ட இந்த இதழ் இன்று நாளேடாக சிங்கப்பூர்-மலேசியா தமிழர்களிடம் தனி இடம் பிடித்திருக்கிறது. சிங்கப்பூர் பயணம் பற்றி ‘தமிழ் முரசு’ இதழுக்கு ஒரு நேர்காணல் அளித்தேன். சிங்கப்பூர் பயணம் முழுவதுமே சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது.
அந்த உணர்வுடன், சிங்கப்பூரிலிருந்து ஜப்பான் நாட்டின் ஒசாகா நகருக்கு விமானத்தில் புறப்பட்டோம். 7 மணி நேரப் பயணம். வெளிநாட்டில் இருந்தாலும், டி.வி சேனல்கள், சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப், செல்போன் கால்கள் வழியாக தமிழ்நாட்டின் நிலவரத்தை உடனுக்குடன் தெரிந்துகொண்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்கியபடியேதான் இருந்தேன். இரவு 11 மணிக்கு ஜப்பான் நாட்டின் முக்கிய நகரமான ஒசாகாவுக்குச் சென்றடைந்தோம். விமான நிலையத்தில், இந்தியத் தூதரகத்தின் கான்சல் ஜெனரல் நிகிலேஷ் கிரி வரவேற்பளித்தார்.
மே 26 -வெள்ளி;
ஜப்பானின் தொழில் நகரம் ஒசாகா. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி குறித்து இங்குள்ள முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை தங்கம் தென்னரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அங்குள்ள முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஒசாகா பயணத்தில், டைசல் என்ற புகழ்பெற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த நிகழ்வாக, ஒசாகா முதலீட்டாளர்களுடனான கருத்தரங்கம் நடைபெற்றது.
ஜப்பானிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில், உற்பத்தி சார்ந்த துறைகளில் நிறைய முதலீடுகளைச் செய்திருக்கின்றன. அதுபோல உள்கட்டமைப்பு சார்ந்த துறைகளிலும் முதலீடு செய்ய வேண்டும் என அவர்களிடம் தெரிவித்து, உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தேன். முதலீட்டாளர் சந்திப்பு நிறைவடைந்த பிறகு ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜி அவர்களுடனான மரியாதை நிமித்தமான சந்திப்பு நடைபெற்றது.
அதன் பின்னர், ஒசாகாவிலுள்ள கோமாட்சு என்ற பிரமாண்டமான தொழிற்சாலைக்குச் சென்றோம். கட்டமைப்புகளுக்குத் தேவையான நவீன இயந்திரங்களைத் தயாரிக்கும் கோமாட்சு நிறுவனம், கலைஞர் ஆட்சியில் நான் அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டின் ஒரகடத்தில் தனது தொழிற்சாலையை அமைத்தது. 2007-ம் ஆண்டு நான்தான் அதைத் திறந்து வைத்தேன். அதன் தலைமை நிறுவனம்தான் ஒசாகாவில் இருக்கிறது. அதன் இந்திய நிறுவனத்தின் (தமிழ்நாட்டில் உள்ளதன்) தலைவரும் அங்கு வந்திருந்தார். முக்கியப் பொறுப்பில் உள்ள மற்றவர்களும் வந்திருந்தனர்.
நூறாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது கோமாட்சு நிறுவனம். தன்னுடைய நிலத்துக்கேற்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கருவிகளை உருவாக்கத் தொடங்கி, இன்று உலகளவில் பெயர் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு இயந்திரமும் எப்படி தயாரிக்கப்படுகிறது, அதனுடைய உதிரி பாகங்கள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன, எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் பணி எப்படி நடைபெறுகிறது என்பதை எங்களுக்கு விளக்கினர்.
தமிழ்நாட்டில் ஒரகடத்திலுள்ள கோமாட்சு நிறுவனத்தில் மாதந்தோறும் 300-க்கும் அதிகமான இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் முதலீடு செய்ய வேண்டும் என ஒசாகாவிலுள்ள தலைமை நிறுவனத்தாரிடம் தெரிவித்து, முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தேன்.
மே 27- சனிக்கிழமை;
ஒசாகா கோட்டைக்குச் சென்றோம். கோட்டையை சுற்றிப் பார்த்தபிறகு, ஒசாகாவிலுள்ள ‘தி இந்தியன் கிளப்’ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பண்பாட்டு விழாவுக்குச் சென்றோம். ஜப்பான் நாட்டில் பரதநாட்டியக் கலையை முதன் முதலில் கற்றுக் கொண்டவரான அகிமி சகுராய், அதை ஜப்பானிய மாணவியர் பலருக்கும் கற்றுத் தந்திருக்கிறார். அவர்கள் மிகச் சிறப்பாக ஆடினர்.
விழாவுக்கு வந்திருந்த அகிமி சகுராய் அவர்களை வாழ்த்தினேன். இந்தியன் கிளப் நிகழ்வில் குழுமியிருந்தவர்களிடம், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் எடுத்துக்கூறுங்கள் எனத் தெரிவித்தேன். எங்கு சென்றாலும், யாரைச் சந்தித்தாலும் அது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய வாய்ப்பாக அமைய வேண்டும் என்பதே என் முதன்மை நோக்கமாக இருந்தது.
மே 28-ஞாயிறு;
ஒசாகாவிலிருந்து டோக்கியோவுக்கு அதிவேக புல்லட் ரயிலில் பயணித்தோம். ஒசாகா-டோக்கியோ இடைப்பட்ட தூரம், ஏறத்தாழ 500 கிலோ மீட்டர். சென்னைக்கும் கோவைக்கும் உள்ள தொலைவு. புல்லட் ரயில் பயணத்தில் இரண்டரை மணிநேரத்தில் 500 கி.மீ கடந்து டோக்கியோவுக்கு வந்தடைந்தோம். இப்போதுதான் நம்நாட்டில், 5 மணி நேரம் 50 நிமிட நேரப் பயணத்தில் 500 கிலோ மீட்டரைக் கடக்கும் ‘வந்தேபாரத்’ ரயில் அறிமுகமாகியிருக்கிறது. ஜப்பானில் பொதுப் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது, ரயில்தான். பேருந்துகள் குறைவு. எந்த இடத்துக்கும் ரயிலில் பயணிக்கும் வசதி ஜப்பான் மக்களுக்கு வாய்த்திருக்கிறது.
நம் நாட்டில் நிறைவேற்றப்படாத ரயில்வே திட்டங்கள் நிறைய இருக்கின்றன. அதிலும் குறிப்பாக நம் தமிழ்நாட்டுக்கான ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்படுவதையும், அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாக இருப்பதையும் ஒன்றிய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நத்தை வேகத்திலான ரயில்வே திட்டங்கள் வேகம் பெற்று, இந்தியாவிலும் அதிவேக புல்லட் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
டோக்கியோவில் தமிழ்ச் சங்கங்கள் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ஜப்பான் நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்புகளை எடுத்துக்கூறி, டோக்கியோவில் வாழும் தமிழர்கள் கீழடி அருங்காட்சியகத்தையும், விரைவில் அமையவிருக்கும் பொருநை அருங்காட்சியகத்தையும் காண்பதற்குத் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். விழா ஏற்பாட்டாளர்கள், `பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜப்பானுக்கு வந்தது நீங்கள்தான்' என்றனர்.
மே-29 திங்கள்;
ஜப்பானிலுள்ள தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் அரசு நிறுவனமான ‘ஜெட்ரோ’வின் சேர்மனுடனான சந்திப்புடன் காலைப் பொழுது தொடங்கியது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும் நமது அரசின் முயற்சிகளையும் ஜெட்ரோ சேர்மன் பாராட்டினார். ஜப்பான் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் பாலமாக விளங்கும் ஜெட்ரோ நிறுவனத்தை முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைத்தேன். அதன் சேர்மனுடன், டோக்கியோவில் முதலீட்டாளர் கருத்தரங்கத்துக்குச் சென்றேன். ஏறத்தாழ 250 தொழில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பங்கேற்றிருந்தனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசினார். அவர் பேசும் எல்லா இடங்களிலும், `தமிழ்நாட்டில் தொழில்தொடங்க வாருங்கள். அதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ள மாநிலம், தமிழ்நாடு. முதலமைச்சர் அத்தகைய கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார். தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் தொழில்வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பது முதலமைச்சரின் எதிர்பார்ப்பு. அதற்கேற்ற வகையில் முதலீடு செய்யுங்கள்.
பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புத் தரும் தொழில் நிறுவனங்களை நாங்கள் ஊக்குவிக்கத் தயாராக இருக்கிறோம். தமிழ்நாட்டில் நான் காவிரி டெல்டாவைச் சேர்ந்தவன். முதலமைச்சர் டெல்டாவிலிருந்து வந்தவர். அதனால், வேளாண்மை சார்ந்த தொழில் வளர்ச்சிக்கு நீங்கள் முதலீடு செய்து ஊக்குவிக்க வேண்டும். நீண்ட கடற்கரையைக் கொண்டது தமிழ்நாடு. ஆழ்கடல் மீன்பிடி தொடர்பான முதலீடுகளுக்கும் முன்வரவேண்டும்' என்பதை வலியுறுத்தினார்.
டோக்கியோ முதலீட்டாளர் கருத்தரங்கில் நான் பேசுகையில், `உள்கட்டமைப்பு சார்ந்த துறைகளில் உங்கள் முதலீடுகளைச் செய்யுங்கள். அதுபோல ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த துறைகளுக்காக சென்னையில் உங்கள் நிறுவனங்களின் அலுவலகம் அமைய வேண்டும். எங்களிடம் மனித வளம் நிறைய உள்ளது' எனக் கேட்டுக்கொண்டு, முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தேன்.
மேயர்கள் மாநாட்டுக்கு, சென்னை மேயராக ஜப்பானுக்கு வந்திருக்கிறேன். துணை முதலமைச்சராக இருந்தபோது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்காக வந்திருக்கிறேன். அப்போது ஜப்பான் செய்த நிதியுதவிதான், பாதுகாப்பான குடிநீரைப் பல மாவட்ட மக்களுக்கு வழங்கியது. அவர்கள் இன்னமும் உங்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறார்கள். அதுபோலவே, சென்னையின் பொதுப் போக்குவரத்தில் முக்கியப் பங்காற்றும் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறியதிலும் ஜப்பானின் உதவியை மறக்க முடியாது.
`ஜப்பானுக்கு நான் வந்தபோதெல்லாம், நான் என்ன கேட்டேனோ அதை ஜப்பான் நிறைவேற்றியிருக்கிறது' என்றேன். திங்கள் மாலையில் ஜப்பான் தொழில்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் நேரடிச் சந்திப்பு நடைபெற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
மே 30- செவ்வாய்;
காலையில் என்.இ.சி. எனப்படும் எதிர்காலத் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளின் முன்னணி நிறுவனத்தைப் பார்வையிடச் சென்றோம். அந்தமான் தீவுகள் உட்பட உலகின் பல நாடுகளிலும் கடலுக்கடியில் கேபிள் பதிக்கும் தொழில்நுட்பத்தையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
புதிய தொழில்நுட்பங்கள் எந்தளவில் பயன்படுத்தப்படுகின்றன, எதிர்காலத்தில் அவை எந்தெந்த வகையில் உதவும் என்பதை என்.இ.சி. நிறுவனத்தினர் விளக்கிக் கூறினர். இந்தியாவில் ஐ.ஐ.டி உள்ளிட்ட நிறுவனங்கள் ஜப்பானின் என்.இ.சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பங்கேற்றிருக்கும் மாணவர்களுக்கு இத்தகைய திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க என்.இ.சி முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.
இந்தியாவிலுள்ள தங்கள் அலுவலகத்துடன் இது குறித்துப் பேசி, நல்ல முடிவைத் தெரிவிப்பதாக என்.இ.சி நிறுவனத்தினர் கூறினர். மாலையில் ஓம்ரான் என்ற நிறுவனத்துடன் சந்திப்பு நடந்தது. மருத்துவப் பரிசோதனைகள் சார்ந்த கருவிகள் தயாரிக்கும் நிறுவனமான ஓம்ரான், இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாட்டில்தான் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களின் ஆதரவுடன்தான் கழகம் ஒவ்வொரு உயரத்தையும் எட்டுகிறது. அதனால்தான், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகவும் அதனடிப்படையிலான பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் மேற்கொண்ட பயணத்தை விரிவான கடிதமாக எழுதியிருக்கிறேன்.
தமிழ்நாட்டின்மீதும் – தமிழ்நாடு அரசின்மீதும் - தமிழ்நாட்டு மக்களின்மீதும் மிகப்பெரிய நம்பிக்கையை ஜப்பான், சிங்கப்பூர் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டில் ஜனவரி 2024-ல் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வருக... வருக என அனைவரையும் அழைத்து, `கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சி போலன்றி, தமிழ்நாடு மாறியிருக்கிறது.
தமிழ்நாடு அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது' என்ற நம்பிக்கையை தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திய மனமகிழ்வுடன், வெற்றிகரமாக சென்னைக்குத் திரும்புகிறேன். உடன்பிறப்புகளின் முகம் காண உங்களில் ஒருவனான நான் ஆவலுடன் இருக்கிறேன். நமக்கான பணிகள் காத்திருக்கின்றன. கலைஞரின் நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம். அவர் உருவாக்கிய நவீனத் தமிழ்நாட்டை, முதன்மை மாநிலமாக உயர்த்திக் காட்டுவோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
from India News https://ift.tt/0DM8XPR
0 Comments