சிசிடிவி கேமராக்கள் இல்லை, பயோ மெட்ரிக் வருகைப் பதிவேட்டில் குறைபாடு போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிலுள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படுகிறது என்று சமீபத்தில் வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னையிலுள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சியிலுள்ள அரசு கி.ஆ.பெ.விசுவநாதன் மருத்துவக் கல்லூரி, தருமபுரியிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தைத் திரும்பப் பெறுவதாக, இந்த மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் சமீபத்தில் கடிதம் எழுதியது.
உள்கட்டமைப்புக் குறைபாடுகளைக் காரணம் காட்டி, மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்வதால், அந்த மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், புதிதாகச் சேரவிருக்கும் மாணவர்களும், நோயாளிகளும் பாதிக்கப்படுவார்கள் என்று அரசியல் கட்சிகள் கண்டன அறிக்கை வெளியிட்டன.
“சிறு சிறு குறைபாடுகளுக்காக மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்வது ஏற்புடையதல்ல. நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, அரசியல் ஆதாயத்துக்காக இதைச் செய்கிறார்கள். தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பைக் குறைசொல்லும் விதமாக இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது” என்று தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார்.
இந்த நிலையில், ‘போதுமான அடிப்படை வசதிகள் இல்லை... விதிமுறைகளைப் பின்பற்றவில்லை’ என்ற காரணங்களுக்காக சுமார் 150 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படவிருக்கிறது என்கிற மற்றோர் அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
“குஜராத், அஸ்ஸாம், புதுச்சேரி, தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரா, திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்ககிலுள்ள மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவக் கவுன்சில கண்காணிப்பில் இருக்கின்றன. ஏற்கெனவே, 40 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழந்திருக்கின்றன. அந்தக் கல்லூரிகளில், விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன... முழுமையான அடிப்படை வசதிகள் உறுதிசெய்யப்பட்டிருக்கின்றன என்பதைக் காண்பிக்க வேண்டும்” என்று சுகாதாரத்துறை வட்டாரம் கூறியிருக்கிறது.
விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றாலோ, போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லையென்றாலோ, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரித்திருந்தார். அதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் ஆய்வு நடத்தியது.
அப்போது, பல மருத்துவக் கல்லூரிகளில் சி.சி.டிவி கேமராக்கள் இல்லை... சி.சி.டிவி கேமராக்கள் இருந்தாலும், அவை சரிவர இயங்குவதில்லை... பயோமெட்ரிக் சரிவர செயல்படுவதில்லை... பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டில் பணியாளர்களின் ஆதார் எண்கள் இணைக்கப்படவில்லை போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டன. பல மருத்துவக் கல்லூரிகளில் பணியிடங்கள் காலியாக இருந்தன. இவை ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தைத் திரும்பப்பெற முடிவுசெய்யப்பட்டிருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை வட்டாரம் கூறியிருக்கிறது.
150 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டால், அது பல சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பாக, தற்போது அங்கு படித்துவரும் ஆயிரக்கணக்கான மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். புதிதாக மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த முடியாது. நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள்.
மத்திய அரசு தரப்பில், மருத்துவக் கல்லூரிகளின் தரம் குறித்து கேள்விகள் எழுகிறது. அதனை சரி செய்தால் தான் தரமான மருத்துவ மருத்துவ கல்வியை உறுதி செய்ய முடியும் என்கிறார்கள்.
இது குறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் நாம் பேசியபோது, “சிறு சிறு குறைபாடுகளுக்காக மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தையே ரத்துசெய்வது மிகவும் தவறானது, கடும் கண்டனத்துக்குரியது” என்றார்.
மேலும் அவர், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை. அங்கு பேராசிரியர்கள் உட்பட யாரும் கிடையாது. ஒரு செங்கல் மட்டுமே இருக்கிறது. ஆனால், மாணவர்கள் சேர்க்கை நடத்தி, ராமநாதபுரத்தில் ஒரு வாடகைக் கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும்? கட்டடமே கட்டாமல் மத்திய அரசு மருத்துவக் கல்லூரியை நடத்தலாம்... ஆனால், 1938-ம் ஆண்டு கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரியில் சிசிடிவி இல்லை என்று சொல்லி அங்கீகாரத்தை ரத்து செய்வதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது” என்று ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறினார்.!
from India News https://ift.tt/itBGf6v
0 Comments