காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல்போக்கு நிலவி வருகிறது. பாஜக ஆட்சியில் இருந்தபோது நடந்த ஊழலுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என சச்சின் பைலட் உண்ணாவிரதம் இருந்ததால், இவருக்கும் அசோக் கெலாட்டுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது.
இதன் காரணமாக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த திங்கள் கிழமை அசோக் கெலாட் - சச்சின் பைலட் இருவரையும் அவரின் இல்லத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் நான்கு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காங்கிரஸ் தரப்பு,"தேர்தலில் ஒற்றுமையாகப் செயல்பட அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்" எனத் தெரிவித்தது.
மேலும், அசோக் கெலாட், ``நாங்கள் இணைந்து செயல்பட்டால் ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியமைப்போம்"எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று சச்சின் பைலட்டின் தொகுதியில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய சச்சின் பைலட், ``நான் அரசிடம் முன்வைத்த பிரச்னைகள், குறிப்பாக முந்தைய பா.ஜ.க ஆட்சியில் நடந்த மிகப்பெரிய ஊழல், கொள்ளை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.
வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் இளைஞர்களுக்கு நீதி கிடைப்பதைப் பொருத்தவரை, அதில் எந்த சமரசத்திற்கும் வாய்ப்பில்லை. நேற்று முன்தினம் டெல்லியில் பேச்சு வார்த்தை நடந்தது. எனவே, நாளை என்ன நடக்கிறது என்று பார்ப்போம். கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி ஊழல் நிறைந்தது. 40 சதவிகித கமிஷன் அரசு என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதனை ஏற்று மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்தனர். மக்களைத் திரும்பத் திரும்ப ஏமாற்றியதால் பா.ஜ.க தோற்றுவிட்டது" எனத் தெரிவித்திருக்கிறார்.
from India News https://ift.tt/e0wJTx4
0 Comments