Tamil News Live Today: ஏப்ரல் 8-ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி... பங்கேற்கும் நிகழ்ச்சிகள், சுற்றுப்பயண விவரங்கள்!

பிரதமர் மோடி சென்னை வருகை... பயண விவரங்கள்!  

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான பிரதமர் மோடி வரும் 8-ம் தேதி சென்னை வருகிறார். அவரின் சென்னை பயண விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி, தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு பிற்பகல் 2.45 மணிக்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில், கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விமான முனையத்தைப் பார்வையிடுகிறார்.

சென்னை விமான நிலையம்

தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம், ‘ஐஎன்எஸ் அடையாறு' கப்பல் படைத் தளத்துக்குச் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று, சென்னை - கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையைக் தொடங்கிவைக்கிறார்.

பிரதமர் மோடி

தொடர்ந்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மடத்துக்குச் செல்கிறார். பின்னர், கார் மூலம் ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பிரதமர், அங்கிருந்து விமானப் படை ஹெலிகாப்டரில், பல்லாவரத்தில் உள்ள ராணுவ மைதானத்துக்குச் செல்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன முனையத்தை திறந்து வைக்கிறார். மேலும், தாம்பரம்-செங்கோட்டை இடையிலான விரைவு ரயில் சேவையைத் தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து ரூ.294 கோடியில் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார்.

பின்னர், அங்கிருந்து சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி இரவு 8.45 மணியளவில் தனி விமானத்தில் புறப்பட்டு, கர்நாடகா மாநிலம் மைசூரு செல்கிறார்.

பிரதமர் மோடி

தொடர்ந்து மறுநாள் அதாவது ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணி அளவில் மைசூரில் இருந்து முதுமலைக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தர இருக்கிறார். அங்கு அவர் ஆஸ்கர் விருது பெற்ற ஆவண குறும்படத்தில் இடம்பெற்ற யானையையும், அதை வளர்த்த தம்பதியான பொம்மன், பெள்ளியையும் சந்தித்து பேசுகிறார். மேலும் புலிகள் பராமரிப்பு தொடர்பான திட்டங்களையும் பிரதமர் மோடி ஆய்வு செய்கிறார். பின்னர், பிற்பகல் 12.30 மணி வரை அவர் நீலகிரி பகுதியில் இருப்பார் என தற்போதைய தகவல்கள் கூறுகின்றனர்.

பிரதமர் மோடியின் வருகை தொடர்ந்து சென்னை மற்றும் நீலகிரியில் போலீஸ் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. சென்னையில் பிரதமர் மோடி வருகையினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், இயன்றவரை பிரதமர் மோடியின் பயணங்கள் ஹெலிகாப்டர் வழியாக திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



from India News https://ift.tt/pGrMawZ

Post a Comment

0 Comments