தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கான இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான நேர்க்காணல் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளருக்கான பதவி கேட்டு நானூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுகூட்டத்தை முடித்து விட்டு மாலை 5.45 மணிக்கு உதயநிதி நேர்காணலுக்கு வந்தார்.
கலைஞர் அறிவாலயம் வந்ததும், உள்ளே சென்ற அவருக்கு நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் புத்தகம் கொடுத்து வரவேற்றனர். மாநகர செயலாளரான மேயர் சண்.இராமநாதனை அழைத்த உதயநிதி, நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்திருப்பதாக தட்டி கொடுத்தார். இளைஞரணி நிர்வாகிகள் மட்டும் உள்ளே இருக்க வேண்டும் என்றதால் சீனியர்களான எம்.பி. பழநிமாணிக்கம், எம்.எல்.ஏக்கள் துரை.சந்திரசேகரன், நீலமேகம், அண்ணாதுரை உள்ளிட்டோர் வெளியே வந்தனர்.
நேர்காணலில் கலந்து கொண்ட பலரும் தாங்கள் செய்த கட்சி பணிகளுக்கான ஆதரமாக பெரிய போட்டோ ஆல்பத்தை எடுத்து வந்திருந்தனர். உதயநிதி ஒவ்வொருவராக அழைத்து நேர்காணல் செய்தார். கட்சியில் எத்தனை வருடங்களாக இருக்கிறீர்கள், கட்சி நடத்தும் கூட்டம், போராட்டம் உள்ளிட்டவையில் தவறாமல் கலந்து கொண்டீர்களா, தேர்தல் பணி செய்திருக்கிறீர்களா என்றெல்லாம் கேட்டார்.
சிலர், நாங்கள் அனைத்து கூட்டத்துக்கும் வந்துவிடுவோம் என சொல்ல உடனே தயாராக வைத்திருந்த வருகை பதிவேட்டை வாங்கி செக் செய்தார். ஆக்டிவாக இருந்தீர்களா என்பதற்கு நீங்கள் கொண்டு வந்திருக்கிற போட்டோ ஆல்பம் ஒன்றே போதும் என்றாராம். உள்ளே சென்றவர்களிடம் ஜாலியா இருங்க பயப்பட தேவையில்லை உழைத்தால் நிச்சயம் கட்சியில் பதவி கிடைக்கும் என கலகலப்பாக பேசினாராம்.
நேர்காணல் முடிந்தவுடன் திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை செல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேரம் ஆக தொடங்கியதால் ஒரு கட்டத்தில் அவசர அவசரமாக நேர்காணல் நடத்தப்பட்டது. முடிந்த பிறகு நேர்காணலில் கலந்து கொண்டு வெளியே வந்தவர்கள், `நேர்காணலுக்காக பல நாட்களுக்கு முன்னே தயாராகி முன்னேற்பாடுகள் செய்து பல மணி நேரம் காத்திருந்தோம். சில நிமிடங்களில் எல்லாம் முடிந்து விட்டது. கொஞ்சம் நேரம் பேசி இருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்’ என்றனர் .
இது குறித்து நேர்காணலில் கலந்து கொண்ட சிலரிடம் பேசினோம், `உதயநிதி ஸ்டாலின் மாலை 4 மணிக்கு நேர்காணலில் கலந்து கொள்வார் என சொல்லப்பட்டது. பல நிகழ்ச்சிகளுக்கு சென்று விட்டு வந்ததால் உதயநிதி வருவதற்கு தாமதமானது. இதனால் ஆறு மணிக்குத்தான் நேர்காணல் தொடங்கியது. ஆரம்பத்தில் சென்றவர்களிடம் பொறுமையாக பேசி பதவி கொடுத்தால் கட்சியை எப்படியெல்லாம் வளர்ப்பீர்கள் என்றெல்லாம் கேட்டு டிக் செய்து கொண்டார்.
பின்னர் நேரம் ஆக தொடங்க அவசர அவசரமாக நேர்காணல் செய்யப்பட்டது. சொல்லப்போனால் ஒரு நபரிடம் 30 செகண்ட் மட்டுமே பேசினார். அந்த குறைவான நேரத்தில் நாங்கள் செய்த பணிகள், கட்சிக்கும் எங்களுக்குமான உறவு உள்ளிட்ட எதையும் சொல்ல முடியவில்லை. கையில் வைத்திருந்த போட்டோ ஆல்பத்தை மட்டும் காட்டி விட்டு பலர் வெளியே வந்தனர். பக்கத்தில் போன பிறகும் உதயா அண்ணன்கிட்ட சரியாக பேச முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஒரே நேரத்தில் பலரை ஒன்றாக அழைத்தும் பேசினார்கள்” என்றனர்.
பின்னர் 9.05 மணிக்கு நேர்காணலை முடித்து விட்டு வெளியே வந்தார் உதயநிதி. சீனியர்களாக துரை.சந்திரசேகரன், நீலமேகம், அண்ணாத்துரை உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் அறிவாலயத்துக்கு எதிரே உள்ள திடலில் தங்கள் கார்களில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து உதயநிதியை வழியனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/rj6QBR5
0 Comments