சேலம், மேட்டூர் கொளத்தூரில் கடந்த மாதம் மார்ச் 26 -ம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்தக்கோரி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்திற்கு முதல் நாள், 25 ஆம் தேதி இரவு கூட்டத்திற்காக நடப்பட்டிருந்த கொடி கம்பங்கள், பேனர்களை பா.ம.க வைச் சேர்ந்த சிலர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் சம்பந்தப்பட்ட நபர்கள் யாரென்று போலீஸார் பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் மறுநாள் 26 -ம் தேதி அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது மாநில மகளிரணியைச் சேர்ந்த முத்துலெட்சுமி வீரப்பன் பேசும்போது, அக்கூட்டத்திற்குள் நுழைந்து பா.ம.க வைச் சேர்ந்த தங்கராஜ், கில்லிமுத்து ஆகியோர் தகாத வார்த்தைகளில் பேசி பிரச்னையில் ஈடுப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது. அதன்பின் கூட்டம் முடிந்து நிர்வாகிகள் எல்லாம் திரும்பி கொண்டிருந்தபோது ஓமலூர் ஒன்றியச் செயலாளரான அன்புராஜா என்பவரின் காரை மேச்சேரி அருகே பா.ம.க ஒன்றியச் செயலாளர் துரைராஜ், சுதாகர் மற்றும் சிலர் வழிமறித்து காரின் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து மேச்சேரி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பா.ம.கவினர் தங்களை பற்றி அவதூறாக பேசிய த.வா.உ.கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்ககூறி புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனிடம் பேசியபோது, “கூட்டம் நடைப்பெற்று கொண்டிருந்தபோது, இரண்டு பேர் குடிபோதையில் தகறாரில் ஈடுபட்டனர். அவர்களை நாங்கள் முறையாக காவல்துறையினரிடம் ஒப்படைத்தோம். இதை அப்பகுதியை சேர்ந்த பா.ம.க நிர்வாகிகள் ஒரு சிலர் தேவயில்லாத அரசியலாக்குவதற்காக கூட்டம் முடிந்து செல்லும்போது நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் இதுகுறித்து மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவத்திடம் பேசியபோது, “எங்கள் கட்சியை சேர்ந்த தேவையில்லாத நபர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து எங்களது கட்சி தலைவர் அன்புமணியும் விசாரித்து வருகிறார்” என்றார்.
இதுதொடர்பாக மேட்டூர் டி.எஸ்.பி விஜயகுமாரிடம் பேசியபோது, “பொதுக்கூட்டத்தில் தேவையில்லாமல் தகறாரில் ஈடுபட்ட நபரையும், மேச்சேரியில் கார் கண்ணாடியை உடைத்த பா.ம.க நகரச் செயலாளர் கோபால் எனும் நபரையும் நேற்றைய தினம் கைது செய்துள்ளோம்” என்றார்.
from India News https://ift.tt/mXT04jL
0 Comments