``கலவரம் செய்வோரைத் தலைகீழாகத் தொங்கவிடுவோம்!” - அமித் ஷாவின் அதிரடிப் பேச்சும் எதிர்வினையும்!

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவற்றின் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. பா.ஜ.க-வைத் தீவிரமாக எதிர்த்துவருபவர், நிதிஷ்குமார். முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகனான தேஜஸ்வி யாதவ் பீகாரின் துணை முதல்வராக இருக்கிறார். ரயில்வே பணிகளுக்கு லஞ்சமாக நிலம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்படும் வழக்கில், தேஜஸ்வி உட்பட லாலு பிரசாத்தின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சி.பி.ஐ-யும் அமலாக்கத்துறையும் தீவிரமாக விசாரித்துவருகின்றன. அதனால், பீகார் அரசியலில் பரபரப்பு அதிகரித்திருக்கிறது.

நிதிஷ்குமார்

இத்தகைய சூழலில், கடந்த வாரம் பீகார் மாநிலத்தில் ராமநவமி கொண்டாடப்பட்டது. சாமி சிலைகள் ஊர்வலம், சிலை கரைப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, சில இடங்களில் இரு தரப்பினரிடையே மோதல்கள் ஏற்பட்டன. நாலந்தா, ரோத்தாஸ் ஆகிய மாவட்டங்களில் மோதல்கள் நிகழ்ந்தன. பதற்றம் நிலவிய பீஹார்ஷெரீப், சாசாராம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டனர். வன்முறை தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அந்தப் பரபரப்பான சூழலில், இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 1-ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவுக்குச் சென்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. நவடாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மறுநாளான ஏப்ரல் 2-ம் தேதி, சசராம் செல்வதற்குத் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், சாசாராமில் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்ததால், சாசாராம் நிகழ்ச்சியை அமித் ஷா ரத்துசெய்தார்.

தேஜஸ்வி யாதவ்

நவடாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “நான், சாசாராமுக்கு செல்வதாக இருந்தேன். ஆனால், துரதிஷ்டவசமான சூழலில் அங்கு மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். துப்பாக்கிச்சூடும், கண்ணீர்ப்புகை குண்டு வீச்சும் நிகழ்ந்திருக்கின்றன. அடுத்த முறை வரும்போது நிச்சயமாக சாசாராம் செல்வேன். பீகாரில் விரைவில் அமைதி திரும்ப வேண்டுமென்று கடவுளிடம் வேண்டுகிறேன்” என்றார்.

மேலும், “இது குறித்து மாநில அரசிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. 2025-ல் முழுமையான மெஜாரிட்டியுடன் பீகாரில் பா.ஜ.க அரசு அமைந்தால், வன்முறையாளர்கள் தலைகீழாகத் தொங்கவிடப்படுவார்கள்” என்றும் அமித் ஷா குறிப்பிட்டார். பின்னர், பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரைத் தொடர்புகொண்டு அவர் பேசினார். அப்போது, பீகாரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஆளுநரிடம் அவர் கவலை தெரிவித்தார்.

அமித் ஷா

சாசாராமில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அமித் ஷா நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்பதற்காகவே 144 தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்ததாக பா.ஜ.க-வினர் குற்றம்சாட்டினர். அந்தக் குற்றச்சாட்டை மாநில அரசு மறுத்தது.

2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, இவ்வாறு அமித் ஷா பேசுகிறார் என்று எதிர்க் கட்சியினர் கூறுகிறார்கள். பா.ஜ.க துணையுடன் பீகாரில் முதல்வரான நிதிஷ்குமார், பா.ஜ.க கூட்டணியை முறித்துவிட்டு, ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கைகோத்தார். தற்போது பா.ஜ.க-வைத் தீவிரமாக எதிர்த்துவரும் நிதிஷ்குமார், “உயிரே போனாலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதற்கு பதில் உயிரை விடுவது மேலானது” என்று சமீபத்தில் அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அமித் ஷாவின் பேச்சுக்கு மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் பதிலடி கொடுத்திருக்கிறார். நீண்டகாலம் காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். அமித் ஷா பேச்சு குறித்து கருத்து தெரிவித்த கபில் சிபல், "பா.ஜ.க ஆட்சியில் கலவரங்களே நடக்காது என்று மற்றொரு பொய்யான வாக்குறுதியை அமித் ஷா கூறியிருக்கிறார். 2014 - 2020 ஆண்டுகளுக்கு இடையில் 5,415 கலவரங்கள் நடந்துள்ளன.

கபில் சிபல்

2019-ம் ஆண்டு மட்டும் உத்தரப் பிரதேசத்தில் 9, மகாராஷ்டிராவில் 4, மத்தியப் பிரதேசத்தில் 2 என 25 வகுப்புவாத கலவரங்கள் நடந்துள்ளன. 2021-ம் ஆண்டு ஹரியானாவில் கலவரங்கள் நிகழ்ந்தன. குஜராத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் 2022-ம் ஆண்டு ஏப்ரலில் அதிக அளவில் கலவரங்கள் நிகழ்ந்துள்ளன” என்று கூறினார்.

பா.ஜ.க ஆட்சியில் வன்முறையில் ஈடுபடுவோர் தலைகீழாகத் தொங்கவிடப்படுவார்கள் என்றால், குஜராத் வன்முறையில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகளில் பலர் சட்டப்படி ஏன் தண்டிக்கப்படவில்லை என்ற கேள்வியை எதிர்க் கட்சியினர் எழுப்புகிறார்கள்.



from India News https://ift.tt/aEdV3RM

Post a Comment

0 Comments