நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராகியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தலைமை பதவிக்கு வந்தபின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் தொண்டர்களைச் சந்தித்தார் அவர். எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களில் அதிமுக தொண்டர்கள் பெரும் வரவேற்பை அளித்து வருகிறார்கள். திரண்டு நிற்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக உரையாற்றி வருகிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
`மீண்டும் அதிமுக அரசு மலரும்’
சேலம் பகுதிகளுக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதாவது, “அதிமுகவில் ஒரு தொண்டன், உச்சக்கட்ட பொறுப்பிற்குச் செல்ல முடியும் என்பதற்கு நானே ஒரு முன்னுதாரணம். பல்வேறு தடைகளைக் கடந்து இன்று உங்கள் முன் பொதுச் செயலாளராக நின்று கொண்டிருக்கிறேன். அதிமுக தொடர்களுக்கான கட்சியே தவிர வாரிசுகளுக்கான கட்சி கிடையாது. திமுக வரிகளுக்கான கட்சி, தொண்டர்களுக்கான கட்சி நடத்தாமல் வாரிசுகளுக்காகக் கட்சி நடத்தி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
தொடர்ந்து பேசிய அவர், ”திமுக ஆட்சியில் அதிமுக மீது பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. பல்வேறு சோதனைகளைக் கடந்து வெற்றிப் பாதையில் பயணித்த ஒரு மாபெரும் கட்சி அதிமுக. எத்தனைச் சோதனைகள் வந்தாலும் அதை நிச்சயம் வெல்வோம், மேலும் அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துதான் போவார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பேச்சு மத்தியில் முழங்கிக் கொண்டிருக்கிறது, வருகிற 2024ல் கூட நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் வரலாம். அப்படி வருகின்ற பொழுது மீண்டும் அதிமுக அரசு மலரும்” என்றார் எதிர்க் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி.
`பேச்சில் உண்மையில்லை’
திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “ சட்ட அறிவு வேண்டும், இல்லையெனில் அடிப்படை ஜனநாயக அறிவு வேண்டும், இரண்டுமில்லாத தன்மையை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தியுள்ளார். ஐந்தாண்டுகளுக்கு திமுகவை மக்கள் தேர்வு செய்துள்ளனர் தமிழக மக்கள். ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த வேண்டுமென ஒரு ஆட்சியைக் கலைக்க முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்காக மக்களால் தேர்வான அரசைக் கலைப்பது மக்கள் எண்ணத்திற்கு விரோதமானது.
இது ஒருபக்கம் இருக்கட்டும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை சாத்தியப்படுத்த வேண்டும் என்றால் விவாதிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் சட்டமாக்கி நிறைவேற்றுப் பட வேண்டும், தேர்தல் ஆணைய சட்டத்திருத்தங்களை மாற்றியாக வேண்டும். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலைப் பிப்ரவரியில் அறிவித்தாக வேண்டும், சொல்லப்போனால் 10 மாதங்களே உள்ள நிலையில் எப்படி இது நடைமுறை சாத்தியமாகும்?
சோர்ந்து போயுள்ள அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறேன் எனத் தவறாக வழிநடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. இவரின் பேச்சில் உண்மைத்தன்மை இல்லை என்பதைத் தொண்டர்களுக்குப் புரிந்துவிட்டால் எடப்பாடி பழனிசாமியின் கூடாரம் காலியாகிவிடும். 2024 தேர்தலில் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமே நடக்கும், 2019-ல் திமுக எவ்வாறான ஒரு வெற்றியைப் பெற்றதோ அதுபோலான ஒரு வெற்றியைச் சாத்தியப்படுத்தும்” என்று உறுதிப்படத் தெரிவிக்கிறார் அவர்.
`மக்களின் விருப்பம் இதுவே’
நம்முடன் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் சசிரேகா, “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் விருப்பம், அப்படியான தேர்தல் நடைமுறை 2024-ல் வந்தால், அதிமுக ஆட்சி மலரும் என்றுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையைக் காலம் எடுத்துக் கொள்ளும் என யார் சொன்னது? பெரும்பான்மையே ஆதரவு நிறைவேற்றப்படும் சட்டத்திற்கு இருப்பதே போதுமானது. குறிப்பாகத் தமிழக மக்களின் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. மக்களின் எண்ணம் திமுகவின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே. இவர்கள் ஆட்சிக்கு வந்து என்ன செய்திருக்கிறார்கள்? விடியா திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு விடியல் தருகிறேன் என்றனரே? சாமானிய மக்களுக்கு விடியல் கொஞ்சமாவது கிடைத்துள்ளதா?
எங்குப் பார்த்தாலும் சட்ட ஒழுங்கு பிரச்னை, பாமர மக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள் வரை கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஆனால் 75%, 80% கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம் எனப் பொய்யுரை நிகழ்த்தியுள்ளனர். ஆனால் 8.5% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளனரா என்பதே சந்தேகம்தான். மாநில உரிமை குறித்துப் பேசும் இவர்கள் மத்தியிலிருந்து எந்தெந்த நிதியை, திட்டங்களைப் பெற்றுத் தந்துள்ளனர்? மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் என திமுகவினர் சொல்வது அவர்களின் விருப்பமாக இருக்கலாம், வரக்கூடிய அனைத்து தேர்தல்களின் அதிமுக வெல்வதையே தமிழக மக்கள் விரும்புகிறார்கள்” என்கிறார்
வாய்ப்பே கிடையாது
நம்முடன் பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன், “ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைப் பொறுத்தவரை 15 மாநிலங்களில் ஒப்புதல் பெற்றாக வேண்டும், மேலும் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது, மக்களவை, மாநிலங்களவையில் சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும்.. இந்த தேர்தல்முறை அமலுக்குக் கொண்டுவரக் குறைந்தது மூன்றுகள் ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும், அப்படியெனில் 2024-ல் சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்கள் நடத்திடச் சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை
அப்படி 2024-ல் இது சாத்தியமெனில் கர்நாடகா தேர்தல் மற்றும் அடுத்து வரக்கூடிய சில மாநிலங்களின் தேர்தலை ஏன் நடத்தப்போகிறது தேர்தல் ஆணையம்? மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பாஜகவே மெளனமாக இருக்கும் சூழலில் எடப்பாடி பழனிசாமி பேசிவருவதன் ஒற்றை காரணம் சோர்ந்து போயுள்ள அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதே தவிர நடைமுறை அரசியல் சாத்தியங்கள் அவரின் பேச்சில் தென்படவில்லை” என்கிறார் அவர்.
`தைரியம் இருக்கிறதா?’
நம்முடன் பேசிய பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், “முதலில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாஜக அறிமுகப்படுத்திய ஒரு திட்டமல்ல, 1970-களுக்கு முன்பு இந்தியாவில் தேர்தல்கள் அவ்வாறு தான் நடைபெற்றது. காங்கிரஸ் தனது அதிகார வரம்பை மீறி மாநில ஆட்சிகளைக் கலைத்ததால் தேர்தல் தேதிகள் மாறிவிட்டன. 9 ஆண்டுக் கால தொடர் ஆட்சியில் பாஜக அதுபோன்ற ஆட்சி கவிழ்ப்பு செயல்களில் ஈடுபடவே இல்லை. திமுகவைப் பொறுத்தவரை மீண்டும் தேர்தலைச் சந்தித்தால் நாம் வெல்வது கடினம் என அவர்களுக்குத் தெரியும். ஆகவே இதனை ஏற்க மறுக்கின்றனர்.
5 ஆண்டுக்கால ஆட்சி நிறைவடையும் முன் தேர்தல் வந்தாலும் மீண்டும் போட்டியிட்டு மக்கள் வாக்களித்தால் அவர்களே ஆட்சியில் இருக்கலாமே. பல மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்து ஓராண்டு மட்டுமே ஆகியுள்ள போதும், நாங்கள் மீண்டும் தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார், திமுக தயாரா?
ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மக்களின் வரிப்பணமான பல்லாயிரம் கோடிகளை மக்கள் நலத்திட்டத்திற்கு செலவிடலாம். எப்போதும் நாட்டின் எதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடந்து கொண்டே இருப்பது நல்லதல்ல. 2024-ல் இரண்டு தேர்தல்களும் ஒருசேர நடக்குமா என்பது குறித்து உறுதிப்படத் தெரிவிக்க இயலாது என்றாலும் எங்களின் விருப்பமும் அதுவே” என்கிறார் அவர்.
கட்சியைத் தன்வசப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, அடுத்தபடியாக ஆட்சி மீது தன்கவனத்தைத் திருப்பியுள்ளார். திமுக அரசின் மீதான விமர்சனங்களை அழுத்தமாக முன்வைக்க முயல்கிறார் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சி மலரும், திமுக அழியும் மற்றும் 2024ல் சட்டமன்ற தேர்தல் வரும் என்பதெல்லாம் அரசியல் மேடைகளை அலங்கரிக்கக் கூடியவையே என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!
from India News https://ift.tt/43TrjEU
0 Comments