ஒன் பை டூ

கோவி.செழியன், அரசு தலைமை கொறடா, தி.மு.க

``அ.தி.மு.க-வினர் திட்டமிட்டே வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். அன்று ஆளுநருக்கு எதிராகத் தனித் தீர்மானம் கொண்டுவரப்படுவது அ.தி.மு.க-வினருக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் தீர்மானம் முன்மொழியப்படுவதற்கு முன்பாகவே, ‘சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்’ என்று இல்லாததைச் சொல்லி அவசர அவசரமாக வெளிநடப்பு செய்துவிட்டார்கள். அதுதான் உண்மையான காரணமென்றால் வெளிநடப்புக்குப் பிறகு, மீண்டும் உள்ளே வந்து தீர்மானம் விவாதத்தில் பங்கேற்றிருக்கலாமே... ஆனால், தீர்மானம் முடியும்வரை காத்திருந்து, மானியக் கோரிக்கையில்தான் பங்கேற்றார்கள். இதிலிருந்தே அ.தி.மு.க-வினரின் இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. அ.தி.மு.க ஆட்சியில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், ஆய்வு என்ற பெயரில் மாநில அரசின் உரிமையில் தலையிட்டபோது தன்னெழுச்சியாகப் போராடிய கட்சி தி.மு.க. ஆனால், அ.தி.மு.க-வினரோ வாக்களித்த மக்களையே இழிவுபடுத்தும் வகையில் சட்டமன்றத்தைப் பற்றித் தரக்குறைவாகப் பேசிய ஆளுநர் ரவிக்காக வக்காலத்து வாங்குகிறார்கள். ஆனால், அதை வெளிப்படையாகச் சொல்லக் கூச்சப்பட்டு, அ.தி.மு.க-வுக்குச் சட்டமன்றத்தில் வாய்ப்பு கொடுப்பதில்லை, தாங்கள் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை என்றெல்லாம் சொல்லி வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். ஆட்சியிலிருந்தபோது ஒன்றிய அரசின் சேவகனாக அவர்களது கட்டளைகளை நிறைவேற்றியவர்களுக்கு, இப்போது மட்டும் முதுகெலும்பு வந்துவிடுமா என்ன?’’

கோவி.செழியன்,சு.ரவி

சு.ரவி, எதிர்க்கட்சி துணை கொறடா, அ.தி.மு.க

``நாங்கள் ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்யவில்லை. தி.மு.க அரசு வெளிப்படைத் தன்மையே இல்லாமல் சட்டமன்றத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் பேச்சுரிமையே இல்லை. மக்கள் பிரச்னைகளை நாங்கள் பேசும்போது இந்த அரசு செவிமடுப்பதில்லை. உறுப்பினர்கள் கேள்வி கேட்கும்போது, துறை அமைச்சர்களைவிட சபாநாயகர்தான் அதிகம் பேசுகிறார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை மாற்றச் சொல்லி பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதேபோல, முதல்வர் பேசுவதை நேரலையில் ஒளிபரப்புகிறார்கள். ஆனால், நாங்கள் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்வது கிடையாது. எங்களுடைய கருத்துகள் அவைக்குறிப்பில் ஏறிவிடக் கூடாது என்பதை ஒரு குறிக்கோளாகவே வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் சபாநாயகர் அ.தி.மு.க-வினரை ஒருதலைப்பட்சத்துடன் நடத்துவதாகவே தோன்றுகிறது. எனவேதான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். ஆனால், நாங்கள் ஏதோ ஆளுநருக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்தது போல ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கப் பார்க்கிறார்கள். மக்கள் நலனுக்காக ஒரு சட்டம் கொண்டுவரும்போது, அதை ஆளுநர் நிறுத்திவைப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இன்று `ஆளுநர் பதவியே தேவையில்லை’ என்று பேசும் தி.மு.க-வினர், சுர்ஜித் சிங் பர்னாலா போன்ற ஆளுநர்கள்மீது பாசத்தைப் பொழிந்தது ஏன்... உண்மையில், இந்த விவகாரத்தை தி.மு.க-வினர்தான் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்.’’



from India News https://ift.tt/au4sJ0g

Post a Comment

0 Comments