விதிகளில் மாற்றம்: மும்பை பங்களாவை நீட்டித்துக் கட்டிக்கொள்ள சச்சின், அமிதாப் பச்சனுக்கு அரசு அனுமதி

மும்பையின் பெரும் பகுதி கடற்கரையை ஒட்டியே இருக்கிறது. இதனால் கடற்கரையில் வீடுகள் கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. மும்பையின் பாந்த்ராவில் கடற்கரையோரம் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வசிக்கிறார். அவரது வீடு நான்கு மாடிகளைக் கொண்டதாக இருக்கிறது. இதில் நான்காவது மாடி முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை. நான்காவது மாடியை முழுமையாகக் கட்டவும், புதிதாக 5-வது மாடி கட்டவும் அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

மும்பை கடற்கரை

இதே போன்று நடிகர் அமிதாப் பச்சனுக்கு மும்பை விலே பார்லே ஜுகுவில் பங்களா இருக்கிறது. இந்த பங்களா இரண்டு மாடிகளைக் கொண்டதாக இருக்கிறது. இதில் இரண்டாவது மாடி பாதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. அதை முழுமையாகக் கட்டவும், கூடுதல் மாடிகள் கட்டிக்கொள்ளவும் அனுமதி கேட்டு மகாராஷ்டிரா கடற்கரையோர மண்டல மேலாண்மை ஆணையத்தில் அவர் விண்ணப்பித்திருந்தார்.

மகாராஷ்டிரா கடற்கரையோர மண்டல மேலாண்மை விதிகளில், அரசு 2019-ம் ஆண்டு திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி கடற்கரையிலிருந்து 200 மீட்டர் தூரத்துக்கு கட்டடம் கட்ட இருந்த கட்டுப்பாடுகளில் திருத்தம் செய்யப்பட்டது.

புதிய திருத்தத்தின்படி கடற்கரையிலிருந்து 50 மீட்டர் தூரம் வரை கட்டடம் கட்ட மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. புதிய விதிகளை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

சச்சின், அமிதாப் பச்சன்

இந்த வழக்குகளை உயர் நீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அனுப்பிவைத்தது. பசுமை தீர்ப்பாயம் இன்னும் விசாரித்து தீர்ப்பளிக்கவில்லை. ஆனால், புதிய விதிகளைக் காரணம் காட்டி சச்சின் டெண்டுல்கரும், அமிதாப் பச்சனும் தங்களது வீடுகளை நீட்டித்துக் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் இருவரும் தங்களது வீடுகளை நீட்டித்துக் கட்டிக்கொள்ள அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.



from India News https://ift.tt/xTM4HgE

Post a Comment

0 Comments