வேலூர்: ‘‘யார் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை’’ - திமுக-வில் இணைந்த அதிமுக பெண் கவுன்சிலர்

வேலூர் மாநகராட்சியில், அ.தி.மு.க பெண் கவுன்சிலர் ஒருவர் திடீரென தி.மு.க-வில் இணைந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாநகராட்சியில் மொத்தமிருப்பதே 60 வார்டுகள்தான். அதில், ஏழு கவுன்சிலர்கள் அ.தி.மு.க பக்கம் இருந்தனர். இதில் 45-வது வார்டு கவுன்சிலர் அஸ்மிதா, நேற்று மாலை வேலூர் கோட்டை வெளிமைதானத்தில் நடைபெற்ற முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தி.மு.க-வில் இணைந்தபோது...

இந்நிலையில், ‘‘தி.மு.க-வில் இணைகிற முடிவை அவர் திடீரென எடுக்கவில்லை. கடந்த பொங்கல் பண்டிகையிலிருந்தே மறைமுகமாக தி.மு.க-வை ஆதரித்து வந்தார்’’ என்கிறார்கள் உள்விவரம் அறிந்த அ.தி.மு.க நிர்வாகிகள்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ‘‘தேர்தலில் செலவிட்ட தொகையை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்பதற்காகவே கணவனின் தொந்தரவால் அவர் தி.மு.க-வில் ஐக்கியமாகியிருக்கிறார். பொங்கல் பண்டிகையின்போது, தி.மு.க கவுன்சிலர்களுக்கு மட்டும் அன்பளிப்பு வழங்கப்பட்டதாம். அது அஸ்மிதா தரப்புக்கும் ரகசியமாக வாங்கப்பட்டதாக தகவல் வெளியானது. அது முதல், ஆளுங்கட்சியின் வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன் மற்றும் மேயர் சுஜாதாவின் ஆதரவாளராகவே கவுன்சிலர் அஸ்மிதா செயல்பட்டு வந்தார்.

எ.வ.வேலு முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தபோது...

இந்த நிலையில், ஊர்த் திருவிழாவையொட்டி எம்.எல்.ஏ கார்த்திகேயனை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்ததோடு, எம்.எல்.ஏ உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார் கவுன்சிலரின் கணவன் கோபிநாத். இதையெல்லாம், அ.தி.மு.க-வினரை கடுப்பேற்றியது. திருவிழாவையொட்டி வைக்கப்பட்ட பேனர்களிலும் எம்.எல்.ஏ, மேயர் இருவரின் புகைப்படங்களை அச்சிட்டு வைத்தனர். இதுசம்பந்தமாக கேள்வி எழுந்ததால், தி.மு.க-வில் இணைந்துவிட்டார்’’ என்றனர்.

இதுசம்பந்தமாக கவுன்சிலர் அஸ்மிதாவிடம் விளக்கம் கேட்டபோது, ‘‘ஐடியா இல்லை; சொல்றதுக்கு ஒன்றுமில்லை. ஓப்பனாக சொல்லவும் விரும்பவில்லை. யார் மனதையும் புண்படுத்தவும் விரும்பவில்லை’’ என்று ஓரிரு வார்த்தைகளுடன் முடித்துக்கொண்டார்.



from India News https://ift.tt/YI7Mrkv

Post a Comment

0 Comments