``பாஜக-வை பூச்சாண்டி போல காட்ட நினைக்கிறார் ஸ்டாலின்” - இராம ஸ்ரீநிவாசன் சுளீர்

``பா.ஜ.க-வினர் வரிசையாக அ.தி.மு.க-வுக்கு தாவுகிறார்களே, அண்ணாமலையின் தலைமைப் பண்பை கேள்விக்குட்படுத்துகிறதா இது?”

“ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு செல்வது அரசியலில் மிக சாதாரணமான நிகழ்வு. இந்திய அரசியலில் இதுவரை நடக்காத ஒன்று, பா.ஜ.க-வில் நடந்ததைப் போல பெரிதுப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து பலர் பா.ஜ.க-விற்கு வந்து கொண்டும் இருக்கிறார்கள். வெளியேறுவதை மட்டும் வைத்து அண்ணாமலையின் தலைமைப்பண்மை கேள்விக்குட்படுத்துவது நியாயமில்லை”

சி.டி.ஆர்.நிர்மல் குமார், திலீப்கண்ணன், எடப்பாடி பழனிசாமி

``ஆனால் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் வருவதை எந்த கட்சியும் விரும்பாது. அ.தி.மு.க தயக்கமின்றி அணைத்துக்கொண்டதே?”

``அ.தி.மு.க-வில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்கள். அப்போது அவர்களும் எங்களிடம் ஆட்சேபிக்கவில்லை. அதே நாகரிக அணுகுமுறையை இப்போது நாங்கள் கையாள்கிறோம்.”

“கூட்டணிக்குள் இது நெருடலை ஏற்படுத்தாதா?”

“கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் மட்டும்தான். ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை, கோட்பாடுகள் வேறு வேறு. எங்களுடைய பொது எதிரியான தி.மு.க-வை வீழ்த்தத்தான் கூட்டணி வைத்துள்ளோம். நாளைக்கு அ.தி.மு.க-வில் இருந்து கூட பலர் பா.ஜ.க-விற்கு வரலாம். எனவே இதில் எந்த நெருடலும் இல்லை.”

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி

“ஈரோடு இடைத்தேர்தலில் இருந்தே அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் சலசலப்பு தெரிகிறதே?”

``உண்மையில் எந்த சலசலப்பும் இல்லை. 2017-18ல் இருந்து ஒவ்வொரு தேர்தலின்போதும் ஊடகங்கள்தான் இப்படி எதையாவது கிளப்பி விடுகின்றன. கூட்டணியை அ.தி.மு.க விரும்பாவிட்டால் குடியுரிமைத் திருத்தம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, தேசிய கல்விக்கொள்கை என பல மசோதாக்களை எப்படி ஆதரித்திருப்பார்கள்? முரண்பாடுகளை மட்டுமே பார்ப்பவர்களுக்கு உடன்பாடுகள் தெரியாது.”

``சி.டி.ஆர். நிர்மல்குமார் அண்ணாமலை மீது மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்து வெளியேறியிருக்கிறாரே?”

``சி.டி.ஆர். நிர்மல்குமாரை விமர்சித்து பா.ஜ.க-விற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. ஆனால் கடும் வார்த்தை பிரயோகங்களை அவர் தவிர்த்திருக்கலாம்.”

“500 தலைவர்களையாவது உருவாக்குவேன் என அண்ணாமலை தலைவரானபோது கூறினார்... எத்தனை பேரை உருவாக்கியிருக்கிறார் என வெளியேறியவர்கள் கேட்கிறார்களே...”

“தலைவர் என்றால் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு என்று நினைக்கிறார்களா? அல்லது மாநில அளவில் தலைவர்களாக இருப்பது மட்டும்தான் தலைவர் என்று அர்த்தமா? ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியையும் நான்கைந்து மண்டலங்களாக பிரித்துள்ளோம். 5 பூத்களை கொண்ட வாக்குச்சாவடிக்கு ஒரு சக்தி கேந்திரம் அமைத்துள்ளோம். அதற்கு தனித்தனியாக நிர்வாகிகள் நியமித்துள்ளோம். அவர்கள் தலைவர்கள் இல்லையா? தலைமைப் பண்புடன் கூடிய ஊழியர்களை தயார் செய்வதுதான் அண்ணாமலை கூறியதன் அர்த்தம்.”

அண்ணாமலை

“ஜெயலலிதாவும் கருணாநிதியும் அவர்கள் கட்சியை பலமுறை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியவர்கள்... அவர்களைப்போல தானும் ஒரு தலைவர் என அண்ணாமலை ஒப்பிடுவது முரணாக இல்லையா?”

“சமூக ஊடகங்களிலும், பல்வேறு தளங்களிலும் அண்ணாமலை மீது நிறைய விமர்சனங்கள் எழுகின்றன. தி.மு.க போன்ற சக்திகள் வேறு வேறு அடையாளத்தில் அண்ணாமலையை விமர்சிக்கிறார்கள். அதற்காக தானும் ஒரு தலைவர் என்று பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அண்ணாமலை ஆளாகியுள்ளார். ஆட்சிக்கு வந்தால்தான், முதல்வர் ஆனால்தான் ஜெயலலிதா, கருணாநிதியைப் போன்ற தலைவர் என்றாகாது. தலைமைக்கு உரிய பண்பு, உத்வேகம் அண்ணாமலைக்கு இருக்கிறது. எதிர்காலத்தில் அண்ணாமலைதான் பெரிய தலைவராக இருப்பார்.”

``தேர்தலுக்கு ஒரு ஆண்டுதான் இருப்பதால், வடமாநில தொழிலாளர் விவகாரத்தை பா.ஜ.க கையிலெடுத்திருக்கிறது என திருமாவளவன் கூறுகிறார். தேர்தல் ஆதாயத்திற்காக தி.மு.க கூட்டணிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் முயற்சியா இது?”

``வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடந்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என முதல்வர் உறுதியோடு கூறியிருக்கிறார். நாங்கள் அதை பாராட்டி வரவேற்றிருக்கிறோம். ஆனால் வதந்தி பரவுவதற்கு பாரதிய ஜனதா கட்சியை எப்படி பொறுப்பாக்க முடியும்? ‘வடக்கன்ஸ்’ என்ற வார்த்தையை சமூக ஊடகங்களில் உலவ விட்டது யார்? சீமான், வேல்முருகன் போன்றோர் வட இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிராக பேசவில்லையா? அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. மதில்மேல் பூனை என்பது போல மதில் மேல் சிறுத்தை என்ற நிலையில் வி.சி.க இருக்கிறது. எந்த கூட்டணிக்கு போவோம் என்று தெரியாமல் குழப்பத்தில் திருமாவளவன் பேசிக் கொண்டிருக்கிறார். பா.ஜ.க எதிர்ப்பு அரசியல் ஒன்றுதான் அவருக்கு இருக்கும் ஒரே வழி. நாங்கள் பெரிய கட்சி என்பதால் எங்களை எதிர்த்து தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்கிறார். எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க-தான்.”

ராம ஸ்ரீனிவாசன்

“அதனால்தான் தி.மு.க ஆட்சியைக் கலைக்க சதி செய்கிறார்கள் என முதல்வர் கூறியிருக்காரோ?”

“சிறுபான்மை சமூக வாக்குகளைக் கவர பேசியிருக்கும் சராசரியான, மலிவான அரசியல் இது. இதன்மூலம் சிறுபான்மை சமூகத்தினரிடம் பா.ஜ.க-வை ஒரு பூச்சாண்டி கட்சியாக , ஒரு அபாயமான கட்சிபோல சித்தரிக்க ஸ்டாலின் நினைக்கிறார். அவரின் உள்நோக்கத்தை நாங்கள் சந்தேகிக்கிறோம். ஒருவேளை சதி நடந்தது என்றால், அதற்கான உளவுத்துறை ஆதாரங்கள் இருக்கிறதா? சதி செய்தவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாமே? அதைவிடுத்து சாலையில் செல்பவர்கள் பேசிக்கொள்வது போல முதல்வர் கூறியிருக்கக்கூடாது.”



from India News https://ift.tt/06B3SsV

Post a Comment

0 Comments