'சிக்கலில் காங்கிரஸ்' - `கை’ கொடுப்பாரா பிரியங்கா காந்தி?!

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அப்போது கர்நாடக மாநிலம், கோலார் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட லலித் மோடி, மோசடி வைர வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோரை விமர்சிக்கும் விதமாகப் பேசியது சர்ச்சையில் முடிந்தது. இதையடுத்து, ‘‘ராகுல் காந்தி, ஒரு சாதியையே அவமதித்துவிட்டார்.

ராகுல் காந்தி

‘ஏன் எல்லாத் திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் இருக்கிறது?’ என்று பேசியதற்குத் தகுந்த தண்டனை தரப்பட வேண்டும்'' என்று குஜராத் முன்னாள் அமைச்சர் பூர்னேஷ் மோடி, குஜராத் மாநிலத்தின் சூரத் தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்துவந்த நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. அதில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஜாமீன் வழங்கியதுடன் மேல்முறையீடு செய்ய அனுமதிக்க ஒரு மாதத்துக்குத் தண்டனையை நிறுத்திவைத்தது. பின்னர் அவரது எம்.பி பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டது. இதில் இருக்கும் முக்கியமான பிரச்னையே தகுதிநீக்கம்தான். இதன் காரணமாக ராகுல் காந்தி தனது மக்களவைத் தொகுதியை இழந்திருக்கிறார்.

இந்திரா காந்தி, ராகுல் காந்தி

மேலும், அவர் எட்டு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது (தண்டனையுடன் இரண்டு ஆண்டுகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் கீழ் ஆறு ஆண்டுகள்). ஒருவேளை இந்தத் தீர்ப்பு உறுதிசெய்யப்படும் பட்சத்தில் வரும் தேர்தலில் ராகுல் காந்தியால் போட்டியிட முடியாது. எனவே, இவ்வாறு ராகுலின் சட்டப் போராட்டம் கைகொடுக்கவில்லையெனில், `தீவிர அரசியலில் களம் காண்பாரா பிரியங்கா காந்தி?’ என்ற கேள்வியெழுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அரசியல் நோக்கர்கள். "பிரியங்கா காந்தியை இந்திரா காந்தியின் பிம்பமாகப் பலரும் பார்க்கிறார்கள். அவரது உடை, செயல்பாடுகள் அனைத்தும் இந்திராவைப் போலவே இருக்கிறது. இந்த நிலையில்தான் ராகுல் காந்தி விஷயத்தில் நீதிமன்ற உத்தரவு வெளியாகியிருக்கிறது. இது அவருக்குக் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான அவரின் பேச்சு தீவிர அரசியலுக்கு வருவதைக் காட்டுகிறது. 2024-ல் நடக்கவிருக்கும் தேர்தலில் அவர் களம் காண்பதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

பிரியங்கா காந்தி

குறிப்பாக ராகுல் காந்தியின் தண்டனை நிறைவேற்றப்படும் பட்சத்தில், பிரியங்கா வயநாட்டில் போட்டியிட வாய்ப்பிருக்கிறது. இதேபோல் அனைத்துத் தலைவர்களையும் அனுசரித்துச் செல்லக்கூடியவராக இருக்கிறார். ராகுல் காந்தியுடன்கூட மூத்த தலைவர்களுக்கு முந்தைய காலத்தில் பிரச்னை ஏற்பட்டது. ஆனால், இவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. எனவே, தனது அணுகுமுறையைப் பயன்படுத்தி உட்கட்சிப்பூசலை எளிதாக சரிசெய்துவிடுவார். இவையெல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது அவரது எழுச்சி வரும் காலங்களில் மிகவும் அதிகமாக இருக்கும்" என்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "ஏற்கெனவே பிரியங்கா காந்தி தீவிர அரசியலுக்கு வந்துவிட்டார். ராகுல் காந்தி தகுதிநீக்கத்துக்குப் பிறகு அவரது செயல்பாடு மிகவும் தீவிரமாக இருக்கிறது. குறிப்பாக டெல்லியில் நடந்த போராட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், `என் அப்பா நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்தப்பட்டார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

உங்கள் அமைச்சர்கள் என் அம்மாவை பாராளுமன்றத்தில் இழிவுபடுத்தினர். உங்கள் முதலமைச்சர் ஒருவர் தந்தை யாரென்று ராகுல் காந்திக்குத் தெரியாது என்றார். ஆனால், அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என் அப்பாவின் உடல் மூவர்ணக்கொடி போர்த்தி கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்று அவரது குடும்பம் அவமரியாதைச் செய்யப்பட்டிருக்கிறது’ என்று ஆவேசமாகப் பேசினார்.

இந்த பேச்சு வரும் காலங்களில் அவரது தீவிர அரசியல் பிரவேசத்தைத்தான் காட்டுகிறது. மோடிக்கு எதிராக கடுமையாகப் பிரசாரம் மேற்கொள்ளுவார். ராகுல் காந்தி விவகாரம் அவரை மேலும் தூண்டிவிட்டிருக்கிறது. 2024-ம் ஆண்டு தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளுவார். காங்கிரஸை வழிநடத்தும் இடத்துக்கு வர மாட்டார்.

அகில இந்தியத் தலைவர் கார்கேவிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்துவிடுவார்கள். வரும் தேர்தலில் கூட்டணி குறித்தும் ராகுலும், பிரியங்காவும் பேசமாட்டார்கள். கார்கே அந்த விஷயத்தை மிகவும் சிறப்பாகச் செய்துவருகிறார். ராகுல் விஷயத்தில்கூட எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்துவிட்டார். ராகுல் காந்தியை முன்னிறுத்தினால் மம்தா, கெஜ்ரிவால் கட்சியினர் வரமாட்டார்கள்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

இதுவே கார்கே அழைத்தால் வந்துவிடுவார்கள். ஏனெனில் சீனியர் தலைவராக இருப்பதால் அனைவரும் மதிப்பு கொடுப்பார்கள். வரும் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றினையும்போது பா.ஜ.க கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணையக் கூடாது என்பதற்காக அனைத்து வேலைகளையும் பா.ஜ.க செய்யும். அதையெல்லாம் தாண்டிதான் வெற்றி பெற வேண்டும்" என்றார்.



from India News https://ift.tt/YuxlTsc

Post a Comment

0 Comments