பட்டியலினப் பழங்குடி பெண்களுக்கு இந்து வாரிசுரிமை சட்டப்படி சொத்தில் பங்கு: சென்னை உயர் நீதிமன்றம்

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956-ன்படி, பட்டியலினப் பழங்குடிப் பெண்களும் சொத்தில் சம பங்கைப் பெற முடியும் என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கணவரின் சொத்தில் பாகம் வழங்கக்கோரி, எதிர்மனுதாரரான கணவருக்கு எதிராக அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர், சேலம் மாவட்ட கூடுதல் நீதிமன்றம்- IIல் வழக்குத் தொடர்ந்தனர். அவ்வழக்கில், பெண்களுக்கு குடும்பச் சொத்தில் பங்குண்டு என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பிற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில், அரசியலமைப்புச் சட்டத்தின் 366வது பிரிவு, உட்பிரிவு(25)ல் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலினப் பழங்குடிப் பெண்களுக்கு, இந்து வாரிசுரிமை சட்டம் 1956 பிரிவு 2(2) பொருந்தாது என வாதிடப்பட்டது.

சட்டம்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு, 22.02.2023 அன்று தீர்ப்பளித்தது. நீதிபதி தனது தீர்ப்பில், ``இந்து வாரிசுரிமைச் சட்டம் முஸ்லீம், கிறிஸ்தவர், பார்சி அல்லது யூதர் அல்லாத அனைவருக்கும் பொருந்தும். இச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, குறிப்பட்ட பழங்குடியினர் மரபு அல்லது பழக்கவழக்கங்களைத் தனியே கொண்டிருந்ததாக நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இச்சட்டம் பொருந்தாமல் போகும்.

மேலும், இந்து வாரிசுரிமைச் சட்டப் பிரிவு 2(2) ஆனது, அட்டவணைப் பழங்குடிகளை விலக்கவில்லை; அதற்கு மாறாக தொன்மையான மரபும், பழக்கவழக்கங்களும் இல்லாத போது, மத்திய அரசு அப்படியான பழங்குடிகளை அரசிதழில் வெளியிட்டு, அப்பெண்கள் சொத்தில் சமபங்கு பெற உதவ வேண்டும் என்றே கூறுகிறது.

பொதுச்சட்டத்திற்கு மாறாக தனி மரபுகள் நிலவுகின்றன என வலியுறுத்துபவர்தான், அதை நிரூபிக்க வேண்டும். இவ்வழக்கில் அட்டவணைப் பழங்குடியினரின் மரபு, பழக்கவழக்கள் ஆகியவை மேல்முறையீட்டாளரால் நிரூபிக்கப்படாத போது, கீழமை நீதிமன்றம் இந்து வாரிசுரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்து வாரிசுரிமைச் சட்டமானது, பழங்குடிப் பெண்கள் குடும்பச் சொத்தில் பங்கு பெறும் விஷயத்தில், அரசியலமைப்புச் சட்டத்திற்கும், சமத்துவத்திற்கும் எதிராய் இருக்கவில்லை. குறிப்பிட்ட இச்சட்டப்பிரிவு, பழங்குடிகளின் மரபு மற்றும் பழக்கவழக்கங்களை பாதுகாப்பதற்காக மட்டுமே. எனவே, இப்பிரிவு இவ்வழக்கில் பொருந்தாது. அட்டவணைப் பழங்குடிப் பெண்கள் சட்டப்படி சொத்தில் சம பங்களித்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது" என்று தீர்ப்பளித்தார்.

chennai high court

மேலும், தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் மூலமாக இந்து வாரிசுரிமைச் சட்டப் பிரிவு 2(2)ன் படி, அட்டவணைப் பழங்குடிப் பெண்களுக்கு குடும்பச் சொத்தில் உள்ள சம உரிமையைப் பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும். தகுந்த நடவடிக்கைக்காக இத்தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிடன் கொண்டு சேர்க்க வேண்டும்’’ எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

- நிலவுமொழி செந்தாமரை



from India News https://ift.tt/81fUc2G

Post a Comment

0 Comments