வேலைவாய்ப்பு சிக்கல்கள்: மனம் வருந்தும் திருநங்கைகள்... கோரிக்கையை கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு?!

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு திருநர் சமூகத்தினர் விண்ணப்பித்தால் ஆண், பெண்ணாகவே கருதப்படுகின்றனர். விண்ணபிக்கும்போது சாதிச்சான்றிதழ் வழங்காவிடில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (எம்.பி.சி) சார்ந்தவர்களாகக் கருதப்படுவதே தற்போதைய நடைமுறை. ஆண், பெண்கள் மற்றும் எம்பிசி வகுப்பில் திருநர்களை கொண்டு வருவதால் வயது வரம்பு, மதிப்பெண் மற்றும் உடற்தகுதி விதிமுறைகள் உள்ளிட்டவைகளால் திருநர் சமூகத்தினரின் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், இரண்டாம் நிலை காவலர் தேர்வில் திருநங்கைகளுக்குச் சாதகமாக வந்த நீதிமன்ற தீர்ப்பையும் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவில்லை எனவும் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கினோம்.

நம்முடன் பேசிய திருநங்கை ஆராதனா, ”இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு 2018-ல் பெண் எனக் குறிப்பிட்டு திருநங்கை அடையாள அட்டையை இணைத்துப் பதிவு செய்தபோது, அப்போதைய விதிப்படி 26 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டுமென எனது படிவத்தை நிராகரித்தனர். பின் நீதிமன்றத்தை அணுகி தேர்வெழுதும் வாய்ப்பை பெற்றேன். ஆனால் தேர்வு முடிவுகளைத் தேர்வாணையம் நிறுத்தி வைத்துவிட்டது.

ஆராதனா

அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் தேன்மொழி, சாரதா, கவி, யாழினி ஆகிய திருநங்கைகள் தேர்வெழுதும் உரிமையை நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டியே பெற்றனர். எம்பிசி வகுப்பிற்கு இந்த மதிப்பெண் போதாது, உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி இல்லை என அவர்களைத் தகுதி நீக்கம் செய்துவிட்டனர். அவர்களைக் காட்டிலும் குறைந்த மதிப்பெண் எடுத்த ஆதரவற்ற கைம் பெண்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். பெண் மற்றும் எம்பிசி பிரிவினருக்கான அளவுகோளாக வைத்து எங்களை தகுதியிடுவதால் எங்களின் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது" என்கிறார் வேதனையுடன்

நம்முடன் பேசிய வழக்கறிஞர் பிரபு, “ஆராதனா உள்ளிட்ட ஐந்து திருநங்கைகளின் முறையற்ற நிராகரிப்புகளைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அத்தீர்ப்பின்படி மனுதாரர்கள் அனைவரும் ஆரம்பக்கட்ட தேர்வுகளில் தகுதி பெற்றதாகக் கருதி, உடற்தகுதி உள்ளிட்ட பிற தேர்வுகளில் உரிய சலுகைகளை வழங்கி, எட்டு வாரங்களில் தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும் எனச் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீர்ப்பு வந்து ஒருவருடம் ஆகியும் இன்றுவரை சம்பந்தப்பட்ட  திருநங்கைகளுக்குச் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் எந்தவித அழைப்பானையையும் வழங்கவில்லை" என்கிறார் வருத்தத்துடன்

யாழினி

நம்முடன் பேசிய திருநங்கை யாழினி, ``ஒரு நபர் தனது பாலியல் மாற்றத்தை உணர்ந்து, வீட்டைவிட்டு வெளியேறி, பொருளாதார சிக்கலை எதிர்கொண்டு மருத்துவ சிகிச்சைகள் செய்து, கைவிட்ட படிப்பை முடித்து அரசுத் தேர்வெழுதும் சூழலுக்கு வருவதற்குள் எப்படியும் 30 வயதை தாண்டிவிடும். பிற்படுத்தப்பட்ட கைம் பெண்களுக்கு 37 வயதை வரம்பாக வைத்துள்ள நிலையில் திருநங்கைகளுக்கு வயது வரம்பு 31ஆக இருக்கிறது.  நான் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று உடல் தகுதி தேர்வுக்கு சென்றபோது 0.5 செமீ உயரம் குறைவாக உள்ளதாக தகுதிநீக்கம் செய்தனர்,

பெண்களுக்கான அளவுகோளை வைத்து என்னை நிராகரித்ததாக நீதிமன்றத்தில் முறையிட்டு மறுதேர்வில் பங்கேற்றேன், ஆனால் எனது மறுதேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டது. நாங்கள் கேள்வி எழுப்பினால் உங்களுக்கென இரு இடம் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது என்கிறார்களே தவிர, பணி கிடைக்கவில்லை. நான் வீட்டில் தான் இருக்கிறேன்” என்கிறார் வேதனையுடன்

இடஒதுக்கீடு

நம்முடன் பேசிய திருநர் சமூக செயற்பாட்டாளர் கிரேஸ் பானு ”சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பின் படி கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்விற்கு ஆராதனா உள்ளிட்ட உடற்தகுதி தேர்விற்கு  அழைக்கப்படாத திருநங்கைகளை அழைத்திருக்க வேண்டும். ஆனால் இவர்களுக்கு வந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையம். நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தவில்லை என அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் வாய்தா மேல் வாய்தா வாங்குகிறார்கள் அரசு வழக்கறிஞர்கள்.

70 ஆண்டுகளாக திருநர் சமூகத்தினர் பாலியல் தொழில் செய்தும் யாசகம் செய்தும் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகம் மேலெழுந்து வர ஏணியாக இருக்கக் கூடியது இட ஒதுக்கீடு, அதனை முறையாக வழங்கிடுவது தானே சமூகநிதி? திருநர் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு குறித்துப் பேசத் தமிழ்நாடு அரசு மறுப்பது ஏன்? திருநர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் இருப்பது ஏன் என பலமுறை உச்ச நீதிமன்ற கேள்வி எழுப்புள்ளது. திருநர் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கொடுத்துவிட்டால் வயது வரம்பு, மதிப்பெண் தொடர்பான குளறுபடிகள் உருவாகாமலே போய்விடுமே, எத்தனையோ திருநர்கள் மேலே வருவதற்கும் அது வழிவகுக்குமே, தற்போது அரசுப் பணியில் இருக்கும் சில திருநங்கைகள் பல கட்ட சட்ட போராட்டங்களைத் தாண்டியே பணியில் இருக்கின்றனர். இப்படி எல்லாராலும் சட்ட போராட்டம் நடத்திட முடியுமா? திருநர் சமூகத்திற்கென குறிப்பிட்ட சதவீதத்தில் இட ஒதுக்கீடு தருவதே அனைத்து பிரச்னைகளுக்கான தீர்வு” என்கிறார் ஆதங்கத்துடன்

கிரேஸ் பானு

இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர் ரியாவிடம் பேசினோம், “கல்வி, வேலைவாய்ப்பில் திருநர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கினால் தான் திருநர்களை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த முடியும் என்பதே தமிழக அரசின் கொள்கை. மிக விரைவில் திருநர் சமூகத்திற்கு 1% இடஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்தவுள்ளது. அதற்கான கோப்புகள் தமிழக முதலமைச்சர் வசமே ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மிக விரைவிலேயே அதற்கான அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம். ஆராதனா உள்ளிட்ட திருநங்கைகளுக்கு பணி வழங்கக்கூடாது என்ற நோக்கம் தமிழ்நாடு அரசிற்கு ஒருபோதும் இல்லை.

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தீபிகா என்பவருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இவர்களை பொறுத்தவரை பணி தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் காலதாமதமாகலாம். அவர்களது விவகாரம் குறித்து திருநங்கைகள் நலவாரியத்திற்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டுள்ளது, இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டவுடன் அவர்களின் பணி விவகாரத்தில் முன்னேற்றம் இருக்கும் என்கிறார்” உறுதியாக

முதல் திருநங்கை ஆசிரியர், முதல் திருநங்கை வழக்கறிஞர் என தற்போதும் நாம் கேட்கக் கூடிய சூழல் இருக்கிறது. இன்னும் பெரும்பாலான திருநங்கைகளை பட்டம் பெற்றும் தகுதிக்கான பணி செய்வதில்லை, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரதிநித்துவம் பெறாத திருநர் சமூகத்திற்கு இடஒதுக்கீடு அவசியத் தேவை. திருநர் சமூகத்திற்கு கர்நாடகா மாநிலத்தில் 1% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதனை போல தேவைக்கேற்ப தமிழகத்திலுள்ள திருநங்கைகளுக்கும் இடஒதுக்கீடு வழங்குவது காலத்தின் கட்டாயம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்

மாற்றத்தை நோக்கி பயணிக்கும் திருநங்கைகளின் கோரிக்கையை நிறைவேற்றுமா தமிழ்நாடு அரசு?



from India News https://ift.tt/DLiwoPp

Post a Comment

0 Comments