கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள நேற்று மதுரை வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். "இடைத்தேர்தல் முடிவு அனைவருக்கும் தெரிந்த முடிவுதான். மருங்காபுரி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மட்டுமே எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மற்றபடி அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் ஆளும்கட்சிதான் வெற்றி பெறும். ஆளும்கட்சிக்கு ஓட்டு போட்டால் தொகுதிக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் மக்கள் வாக்களிப்பது இயற்கையாக நடக்கக் கூடியது.
கடந்த 21 மாதங்களில் திமுக அரசு மீது கடுமையான அதிருப்தி உள்ளது. பொதுத்தேர்தலின்போது எந்தளவு அதிருப்தி இருக்குமோ அந்தளவிற்கு இருக்கிறது.
தேர்தல் வாக்குறுதி குறித்து ஸ்டாலின் வார்த்தை ஜாலம்தான் செய்கிறார். விடியல் அரசு என சொல்லிவிட்டு விடியாத ஆட்சியாக இருக்கிறது.
பழனிசாமி ஆட்சியில் நடந்த முறைகேடுகள், குற்றச்சாட்டுகளை எல்லாம் தாண்டி திமுக அரசு மோசமான ஆட்சியாக உள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால், ஆட்சி அதிகாரம் கிடைத்ததும் இது போன்று செயல்படுகின்றனர்.
இடைத்தேர்தலில் இதுவரை கேள்விப்படாத அளவிற்கு மக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். திமுக அமைச்சர்கள் இந்த இடைத்தேர்தலுக்காக ஒவ்வொரு தெருவிலும் அலைந்து திரிந்தனர்.
இடைத்தேர்தலில் இந்த வாக்கு வித்தியாசம் ஒன்றும் பெரியது இல்லை. இதே தேர்தல் முடிவு நாடாளுளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்காது என்பது கடந்த காலத்தை பார்த்தாலே தெரியும்.
20 மாத ஆட்சியில் மக்கள் எந்த அளவிற்கு வேதனையில் உள்ளார்கள் என்பது உளவுத்துறை மூலமாக முதலமைச்சருக்கு தெரியும்..
இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு வாக்காளருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக கொடுத்துள்ளனர். இது தவறான முன்மாதிரி. வெற்றியை வாங்கிவிட்டு வெற்றி பெற்றுவிட்டோம் என்று சொல்கிறார்கள்.
உச்சநீதிமன்றம் இரட்டை இலை வழங்கிவிட்டதால் மேற்கு மண்டலமே எங்களது கோட்டை என்று சொன்னார்கள். ஆனால் கலகலத்துபோகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பும் திமுகவிற்கு இணையாக பணம், பொருட்கள் செலவு செய்தும்கூட வெற்றி பெற இயலவில்லை.
தனி சின்னத்தில் நின்றிருந்தால் இன்னும் மோசமாகி இருக்கும். அம்மா ஐந்து ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தினார். நான்கு ஆண்டுகளில் எடப்பாடியின் செயல்பாடு மோசமாக இருந்ததால் அவர்களை ஒதுக்கி வைத்து திமுக சிறப்பாக செயல்படும் என நம்பி மக்கள் வாக்களித்தார்கள்.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டபோது, பொதுத்தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிட்டு 28 இடங்களை ஜெயலலிதா பெற்றார்.
வருங்காலத்தில் அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த போராடுவோம். இதற்கு ஒரு சிலரின் சுயநலம் தடையாக இருக்கலாம். அந்த சுயநலம் உடைத்து எறியப்படும்.
பழனிசாமியுடைய தலைமைக்கு முதலமைச்சரான பிறகு டெல்லியின் ஆதரவு இருந்ததாலும் ஆட்சி அதிகாரம் பணத்தாலும் ஆட்சியை காப்பாற்றினார். இது ராஜதந்திரம் இல்லை. குப்பனோ சுப்பனோ இருந்தால்கூட அந்த ஆட்சியை காப்பாற்றி இருக்க முடியும். தவறான பாதையில் செல்லும் தவறான மனிதராக இருக்கிறார் பழனிசாமி.
துரோகம் இழைக்கப்பட்டதுக்காக தொடங்கப்பட்ட அதிமுக, இன்று அதே துரோகம் செய்தவர் தலைமையில் உள்ளது. இதற்கு காலம் நிச்சயம் நல்ல தீர்ப்பை தரும். 2500 பேரை வசப்படுத்தி, தொண்டர்கள் எல்லோரும் என் பின்னால் என சொல்கிறார். அவர் உண்மையான தலைவர் இல்லை. பழனிசாமி போன்ற தீயவர் தலைமையில் இல்லாமல் இருந்தால் நிச்சயம் ஆர்கே நகர், மதுரை கிழக்கு மருங்காபுரி போல வெற்றி பெற்றிருப்போம்
அம்மாதான் நிரந்தர பொதுச் செயலாளர் என அறிவித்தார்கள். ஆனால், அந்த பதவியை பிடுங்கி விட்டார்கள். அதனால் தான் சொல்கிறேன், இது போன்ற நயவஞ்சகர்கள், தீயவர்களுக்கு காலம் தக்க பதில் கூறும்.
திமுக பற்றி அனைவருக்கும் தெரியும். 99-ல் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து கூட்டணியில் இருந்தார்கள். டவுன் பஸ்சில் ஏறி இறங்குவதுபோல 2004-ல் எந்த ஒரு காரணமும் இன்றி பாஜக கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தார்கள். பத்தாண்டு அவர்களுடன் இருந்து முக்கிய பதவிகளை பெற்று 2 ஜி போன்ற பல்வேறு ஊழல்களில் சிக்கிய அவமானப்பட்டனர்.
அம்மாவுடைய தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையும் காலம் நிச்சயம் வரும். தேர்தல் கூட்டணி பற்றி நவம்பர் டிசம்பரில் நாங்கள் முடிவு செய்வோம்.
அம்மாவின் பாதையிலிருந்து மாறி தவறான கொள்கைக்கு சென்றதன் காரணமாக, தொடங்கப்பட்ட இயக்கம் அமமுக. நாங்கள் பழனிசாமி தலைமையில் இணைய வாய்ப்பே இல்லை. வெற்றிகரமான தோல்வி என ஜெயக்குமார் பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. அவர் பபூன் மாதிரி ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்." என்றார்.
from India News https://ift.tt/RSEkipK
0 Comments