அறுவை சிகிச்சையில் அலட்சியம்; ஒன்றரை மாதமாக போராடிய மூதாட்டி - நடந்தது என்ன?!

திருவண்ணாமலை, மல்லவாடி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி செந்தாமரை (58). இவருக்கு திடீரென கால் மூட்டில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கடந்த ஜனவரி 3-ம் தேதி வந்திருக்கிறார். மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்திருக்கிறது.

மூதாட்டி செந்தாமரை

பின்னர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி உள்நோயாளியாக அனுமதித்திருக்கிறார்கள். ஜனவரி 14-ம் தேதி வரை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறி அறுவை சிகிச்சை செய்யவில்லை. பின்னர் பொங்கல் பண்டிகைக்கு வீட்டுக்கு சென்று வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இதையடுத்து வேதனையுடன் வீட்டுக்கு சென்றிருக்கிறார். பின்னர் பொங்கல் முடித்துவிட்டு மீண்டும் ஜனவரி 19-ம் தேதி மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். இப்போதாவது தனக்கு அறுவை சிகிச்சை நடந்து விடும் என நினைத்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. பிப்ரவரி 16-ம் தேதி வரை மீண்டும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறி மறுத்திருக்கிறார்கள். இதையடுத்து 43 நாட்களாக உரிய சிகிச்சை கிடைக்காமல் செந்தாமரை அவதிப்படுவது குறித்த தகவல் 'ஜூவி' க்கு கிடைத்தது. நாம் களத்தில் இறங்கி விசாரித்தோம்...

மூதாட்டி செந்தாமரை

இது தொடர்பாக நம்மிடம் பேசிய செந்தாமரை, "எனக்கு திடீரென காலில் வலி ஏற்பட்டது. சிறிது நேரம் கூட நிற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஜனவரி 3-ம் தேதி சிகிச்சைக்காக சேர்ந்தோம். முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறி பிப்ரவரி 16-ம் தேதி வரை எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் மருத்துவர்களிடம் கேட்பேன்.

அப்போதெல்லாம் அவர்கள், "அனுமதி கிடைத்தால் மட்டுமே தான் மா பண்ணுவோம்" என்று சொல்வார்கள். தனியார் மருத்துவமனைக்கு செல்லலாம் என்றாலும் காசு இல்லை. எனவே முதல்வர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என முடிவு செய்து கடந்த பிப்ரவரி 12-ம் தேதி மனு அளித்தோம். அப்போதும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ந்து சுகாதாரதுறை அமைச்சரிடம் புகார் தெரிவித்தோம்.

மூதாட்டி செந்தாமரை

உங்களிடமும்(ஜூ.வி) தகவல் தெரிவித்தோம். இவ்வளவு போராட்டத்திற்கு பிறகு ஒருவழியாக 16-ம் தேதி, நாளைக்கு அனுமதி கிடைத்துவிடும் என்று தெரிவித்தார்கள். அதன்படி 17-ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையின் அலட்சியத்தால் இவ்வளவு காலம் பாதிக்கப்பட்டோம். நானும் எனது கணவரும் கூலி வேலைதான் செய்து வருகிறோம்.

எனது கணவருக்கு கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டு ஏற்கெனவே ஒரு கிட்னியை எடுத்திருக்கிறோம். கஷ்டமான குடும்பத்தை சேர்ந்த எனக்கு எப்படி ஒரு பிரச்னையை கடவுள் கொடுத்துவிட்டார். அதற்காக வீட்டில் முடங்கி கிடக்க முடியாது என்பதற்காக சிகிச்சைக்கு வந்தோம். இங்கு மருத்துவமனை நிர்வாகம் செய்த கால தாமதத்தால் ஒன்றரை மாதமாக பிரச்னையை சந்தித்து வருகிறேன்.

மூதாட்டி செந்தாமரை

தினந்தோறும் வாழ்க்கையில் பிரச்னைகளை சந்தித்து வரும் ஏழை நோயாளிகள் தான் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவார்கள். ஆனால் இங்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்றால் பத்திரிக்கை, முதல்வர் அலுவலகம், அமைச்சர் அலுவலகம் என சென்று போராட வேண்டியிருக்கிறது. எங்களுக்கு வழி தெரிந்ததால் இங்கெல்லாம் வந்தோம்.

இது போன்ற இடங்களுக்கு சென்றால் நிவாரணம் கிடைக்கும் என்று தெரியாதவர்கள் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும். எனவே இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமாரிடம் விளக்கம் கேட்டோம். "அரசு மருத்துவமனைகளில் தினமும் 7 லட்சம் வெளி நோயாளிகளுக்கும் 70,000 உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறோம். 1,500 பிரசவம் நடக்கிறது. இதுபோல் பிரச்னை, எங்காவது இருந்தது என்றால் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்து விடுகிறோம்" என்றார்.



from India News https://ift.tt/e2Oz4RB

Post a Comment

0 Comments