குமரி: 4 நாள்களுக்கு பின் அணைக்கப்பட்ட குப்பை கிடங்கு தீ - புகை மூட்டத்தால் அவதியுற்ற பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை சேகரித்து வைக்கப்படும் இடமாக வலம்புரிவிளை குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளைதரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. மாநராட்சி கமிஷனராக சரவணகுமார் இருந்த சமயத்தில் வலம்புரிவிளையில் குப்பைகள் மலைபோல சேருவதை தடுக்கும் விதமாக ஒவ்வொரு பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்த பகுதியிலேயே தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை உரமாக தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தினார். ஆப்படி இருந்தும் வலம்புரிவிளையில் குப்பைகள் சேர்ந்துகொண்டிருக்கின்றன.

நாகர்கோவில் நகராட்சியாக இருந்த தொடக்க காலத்தில் இந்த பகுதியில் பெரிய அளவில் குடியிருப்புகள் இல்லை. இப்போது அந்த பகுதியில் குடியிருப்புகளும், கல்வி நிலையங்களும் அமைந்துள்ளதால் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதி ஆகிவிட்டது. வலம்புரிவிளை குப்பை கிடங்கில் வெயில் காலங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கை ஆகிவிட்டது. அப்படி தீ எரியும் சமயத்தில் அப்பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்து நிற்கும். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராடி அணைப்பதும் வாடிக்கை ஆகிவிட்டது.

குப்பையில் தீ பிடித்ததால் ஏற்பட்ட புகை மூட்டம்

கடந்த 4 நாள்களுக்கு முன்பு வலம்புரிவிளை குப்பை கிடங்கு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. தீ மற்றும் புகைமூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், திங்கள்சந்தை உட்பட 5 க்கு மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 50-க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். குப்பைகளின் கீழ்ப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஜே.சி.பி இயந்திரம் மூலம் குப்பையை கிளறி அணைக்கும் நிலை ஏற்பட்டது. செட்டிக்குளம் சந்திப்பில் இருந்து சங்கு துறை, இருளப்பபுரம் உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் மக்கள் வலம்புரிவிளை பகுதியில் உள்ள சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் பயணித்து வந்தனர்.

அதுபோன்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கண் எரிச்சல், சுவாச கோளாறு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். குப்பை கிடங்கு எரிந்து புகை மூட்டம் ஏற்பட்டதால் அப்பகுதியை அமைந்துள்ள தனியார் மெட்ரிக் பள்ளி இரண்டு நாட்களாக மாணவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெயில் காலங்களில் தீ விபத்து காரணமாக ஏற்படும் புகையாலும், மழைக் காலங்களில் குப்பைகள் மழைநீருடன் கலந்து மக்கி துர்நாற்றம் வீசுவது, என அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்

இதுகுறித்து மாநகராட்சி மேயர் மகேஷிடம் பேசினோம், "மற்றபகுதிகளில் பிரித்து உரமாக்கும் குப்பைகளில் மீதி வருவதை வலம்புரிவிளையில்தான் போட வேண்டிய நிலை உள்ளது. தீ விபத்து ஏற்படும் சமயத்தில் அதை அணைப்பதற்காக ஏற்கனவே அங்கு ஒரு கோடி ரூபாய் செலவில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில் கொஞ்சம் பிரச்னை இருந்ததால் அதை சரிசெய்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி உள்ளோம். அதிக அளவில் மிஷின்கள் கொண்டு, குப்பைகளை பிரிக்கும் விதமாக டெண்டர் விட்டுள்ளோம்" என்றார்.



from India News https://ift.tt/zvc2s7l

Post a Comment

0 Comments