ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.ஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகளைப் பெற்று அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை 67,300 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார். மொத்தம் 77 பேர் போட்டியிட்ட நிலையில், இவர்கள் இருவரைத் தவிர மற்ற எவரும் டெபாசிட் பெறவில்லை. பதிவான மொத்த வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகள் பெற்றால்தான் டெபாசிட் தொகை திரும்பக் கிடைக்கும். அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவுக்கே 10-வது சுற்றில்தான் டெபாசிட் தொகையைத் தக்கவைக்கும் வாக்குகள் கிடைத்தன. இது வெற்றிகரமான தோல்வி என்று அந்தக் கட்சியினர் கூறினாலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகள் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈ.வெ.ரா 67,300 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அப்போது அவரை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யுவராஜா 58,396 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடம் பிடித்திருந்தார். ஆனால் தற்போது அ.தி.மு.க-வே நேரடியாக களமிறங்கியும் 43,923 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது. இத்தனைக்கும் 2016-ம் சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் இருந்து தென்னரசு வெற்றி பெற்றவர். அதேபோல தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க-வும் 1,432 வாக்குகளை மட்டுமே பெற்று பரிதாப நிலையை அடைந்திருக்கிறது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தே.மு.தி.க, இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே இந்த முறையும் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கும் நாம் தமிழர் கட்சி, தனது வாக்கு வங்கி பெரும் சரிவைக் காணாமல் தக்கவைத்திருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது. இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மேனகா 10,827 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். நாம் தமிழர் கட்சிக்கு இது கடந்த தேர்தலைக் காட்டிலும் சற்று குறைவுதான் என்றாலும், பிற கட்சிகளை ஒப்பிடும்போது இந்த சரிவு ஒன்றுமே இல்லை என்றுதான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
நடந்துமுடிந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 64.58 % வாக்குகளையும், அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு 25.75% வாக்குகளையும் பெற்றிருக்கும் நிலையில், மற்றவர்களில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மட்டுமே 6.35% வாக்குகளைப் பெற்றிருக்கிறார். மற்ற கட்சிகளோ, சுயேச்சைகளோ ஒரு விழுக்காடு வாக்குகளைக்கூட பெறவில்லை. கடந்த தேர்தலில் 11,629 வாக்குகளைப் பெற்று, 7.65% வாக்கு வங்கியை வைத்திருந்தது நாம் தமிழர் கட்சி. அதை இடைத்தேர்தலிலும் பெரும் சரிவு காணாமல் தக்கவைத்திருப்பது, சாதாரண விஷயமல்ல என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரியன்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “சீமான் முன்வைக்கும் சித்தாந்தம் சரியா, தவறா என்பதில் எனக்குப் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் சீமானுக்கான ஒரு வாக்கு வங்கி உருவாகியிருக்கிறது என்பதை இந்தத் தேர்தல் தெளிவாகக் காட்டுகிறது. மெதுவாக, நிதானமாக, ஆக்கபூர்வமான வளர்ச்சியை சீமான் அடைந்து வருகிறார். இந்த வளர்ச்சி ஆர்கானிக்காக இருக்கிறது என்பதையும் பார்க்க முடிகிறது. தி.மு.க, அ.தி.மு.க என்ற 2 பெரிய கட்சிகளின் பல விதமான அழுத்தங்களுக்கு மத்தியில் நாம் தமிழர் கட்சி வாக்கு வங்கியை தக்கவைத்திருப்பது பெரிய விஷயம்தான்.
வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் இதைப் பெற்றிருக்கிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டியது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் பரப்புரையும் மிக அழுத்தமாக இருந்தது. ஆனால் உடனே ஆட்சியமைக்கும் அளவுக்கு திடீரென வளர்ச்சி வந்துவிடாது. படிப்படியாக அடியெடுத்து வைக்க வேண்டியிருக்கும். சீமானுடன் இருக்கும் இளைஞர்கள் அதுவரை பொறுமையாக இருப்பார்களா... விரக்தி அடைந்து விடுவார்களா என்பதை யூகிக்க முடியாது. கட்டுக்கோப்பாக சீமான் அதை கடத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் வளர்ச்சி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது” என்றார்.
from India News https://ift.tt/8oambcD
0 Comments