`ஆளுங்கட்சியைக் குற்றம்சாட்டி தன் கட்சியை வழிநடத்த நினைக்கிறார் அண்ணாமலை’ - அமைச்சர் முத்துசாமி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் ஈரோடு மாநகராட்சி, பெரியார் நகர் பகுதிக்கு உட்பட்ட 32-வது வார்டு சங்கு நகர் மக்களுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கினார். குக்கர், எவர்சில்வர் தட்டுகள், டம்ளர், எவர்சில்வர் மக் ஆகிய பெட்டகத்துடன், ஐந்து கிலோ நோன்புக் கஞ்சிக்கான அரிசியையும் அமைச்சர் முத்துசாமி, மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சு.முத்துசாமி,
``ஈரோடு மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் தி.மு.க-வில் புதிதாக 50,000 உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறோம்.

நோன்பு அரிசி மூட்டையுடன், பரிசுப் பெட்டகம்

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதைப்போல, `இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் உரிமைத்தொகை வழங்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் அறிவித்துவிட்டார். இந்தத் திட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளிலிருந்து அறிவிக்கப்பட்டபடி வழங்கப்படவிருக்கிறது. இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர், `இல்லத்தரசிகளுக்கு எப்போது உரிமைத்தொகை வழங்குவீர்கள்’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு பதிலடி தரும் வகையில் மட்டுமின்றி, இல்லத்தரசிகளுக்கு நாங்கள் தருவதாகக் கூறியிருந்தபடி இந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம்.

பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வரும் ஏப்ரல் 14-ம் தேதி இரண்டு துறை அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக அறிவித்திருப்பதாகக் கூறுகிறீர்கள்.
எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் இதைத் தவிர வேறு என்ன கூறி அரசியல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்... அவர்கள் கூறுவதில் ஏதேனும் உண்மை இருந்தால், அன்றைக்கு வந்து எங்களிடம் கேள்வி கேளுங்கள். அதற்கு நாங்கள் பதிலளிக்கிறாேம். பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக இருப்பவர் இப்படித்தான் பேசுவார். அவர் கூறிய பல விஷயங்களில் உண்மை இருந்ததில்லை என்பதை அமைச்சர்களாகிய நாங்கள் பலமுறை நிரூபித்திருக்கிறோம். அது பற்றி உரிய விளக்கங்களையும் அளித்திருக்கிறோம்.

நோன்பு அரிசி, பரிசுப் பெட்டகம் வழங்கும் அமைச்சர்

ஆளுங்கட்சியினர்மீது ஏதாவது குற்றம்சாட்டிதான் தன் கட்சியை வழிநடத்த வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார். ஏற்கெனவே அவர் சார்ந்த கட்சியில் பல பிரச்னைகளுடன் அண்ணாமலை இருக்கிறார். அந்தப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வெளிவர வேண்டும் என்பதற்காகவும், தன்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் திசைதிருப்புவதற்காகவும்தான் ஆளுங்கட்சியினர்மீது இது போன்ற அவதூறான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறிவருகிறார். அவர் தி.மு.க அமைச்சர்கள்மீது கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாக நிரூபித்தால் அதற்கு பதில் அளிக்கத் தயாராக இருக்கிறோம்'' என்றார்.



from India News https://ift.tt/rUlnLu7

Post a Comment

0 Comments