`எதிர்க்கட்சிகளின் ஒரே குரல்; பெருகும் ஆதரவு’ - அதிகரிக்குமா ராகுல் காந்தியின் அரசியல் மைலேஜ்?!

2019-ல் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி பேசிய கருத்து தொடர்பாக, அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தீர்ப்பின்படி இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, எம்பி பதவியிலிருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டதாக மக்களவை செயலகம் மார்ச் 24-ம் தேதி அறிவித்தது. மேலும் 8 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது, இந்த நடவடிக்கையை எதிர்த்து கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

மம்தா பானர்ஜி

”மத்திய அமைச்சரவையில் கிரிமினல் பின்னணி கொண்ட அமைச்சர்கள் இருக்கையில், எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியதற்காக எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள். நமது அரசியலமைப்பு, ஜனநாயகத்திற்கு புதிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது” என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

”நாட்டு மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டும்” என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

”இது ஜனநாயகத்தின் நேரடி கொலை. இது சர்வாதிகாரத்தின் ஆரம்பம்” எனப் பேசியுள்ளார் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே. மேலும் பல மாநில முதல்வர்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் தங்களது ஆதரவை ராகுல் காந்திக்கு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் எம்.பி பதிவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் தரப்பில் நாடு முழுக்க போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரைச் சென்னை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் தேசிய அளவில் டெல்லி, மகாராஷ்ரா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ராகுல் காந்தி

இதுகுறித்து நம்முடன் பேசிய அரசியல் பார்வையாளர் ஜெகதீஸ்வரன், ”இந்தியாவில் ஒரு நீதிமன்றம் அவதூறு வழக்கு ஒன்றுக்காக இரண்டு ஆண்டுகள் தண்டனை தருகிறது என்றால் இதனை அனைத்து அரசியல்வாதிகளுக்குமே ஒரு ஆபத்தாகத் தான் பார்க்க வேண்டும். வரலாற்றிலேயே வருத்தம் தரக்கூடிய தீர்ப்பு இது.

பொதுவாக அவதூறு வழக்குகளில் அபராத தொகை வசூலிக்கப்படும், தேர்தல் சமயங்களில் பேசுவதற்கு அனுமதி மறுப்பு போன்ற நடவடிக்கைகளே நாம் பார்த்திருக்கிறோம். அதிலும் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றால் தான் எம்.பி தகுதி நீக்கம் செய்யப்படும், நீதிமன்றமும் சரியாக 2 ஆண்டுகள் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை ஜனநாயக படுகொலை என்றாலும் மிகையல்ல. பல அரசியல் தலைவர்கள் இன்றைய அரசியலில் பல மேடைகளில் கீழ்த்தரமாகப் பேசிவருகிறார்கள் என்பது கண்கூடு. அவர்கள் மீது நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியுள்ளது?

பாரத் ஜோடோ யாத்திரை

இந்த தீர்ப்பு மிக உறுதியாக ராகுல் காந்தியின் செல்வாக்கை உயர்த்தும், மக்கள் மத்தியில் இத்தீர்ப்புக்கு எந்தவித ஏற்பும் இல்லை. பாரத் ஜோடா யாத்திரை காங்கிரஸ் நிர்வாகிகளைப் புத்துணர்வடையச் செய்தது, தற்போது வந்துள்ள இத்தீர்ப்பு மக்களையும் ராகுல் காந்தி பக்கம் திருப்பியுள்ளது. சாமானிய மக்கள் இதனை அனுதாபத்துடன் அணுகுவதால் வாக்குகளாக மாறுவதற்குக் கூட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது” என்கிறார் அவர்.

யாத்திரை நடத்தியதால் ராகுல் காந்தி மக்கள் செல்வாக்கு அதிகரித்ததும், அதனைத் தொடர்ந்து அதானி குறித்த நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியதாலும்தான் இதுபோன்ற ஜனநாயகமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது பாஜக, மக்கள் ராகுல்காந்தியின் பக்கம் நிற்கிறார்கள் வரக்கூடிய மத்திய, மாநில தேர்தல்களில் பாஜக மீது மக்கள் எவ்வளவு கோபமாக இருக்கிறார்கள் என்பது நிச்சயம் வெளிப்படும் என்கிறார்கள் காங்கிரஸ் பிரமுகர்கள்.

தராசு ஷ்யாம்

இது குறித்து நம்முடன் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், ``இந்த தீர்ப்பில் சதி இருப்பது உண்மைதான், ராகுல் காந்திக்கு செல்வாக்கு உயர்வதும் உண்மைதான். ஆனால் இந்த இரண்டு நாள்களில் ஏற்படும் அரசியல் பரபரப்புகளை வைத்து காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தைக் கணிக்க முடியாது. சமீபத்தில் பாரத் ஜோடா யாத்திரை ராகுல் காந்தியின் செல்வாக்கை உயர்த்தியது. ஆனால் அதனை அறுவடை செய்து கொள்ளக் கூடிய வியூகங்களை வகுக்கத் தவறியது காங்கிரஸ். அதேபோல் தற்போதும் மக்கள் மத்தியில் எழுச்சியை இத்தீர்ப்பு ஏற்படுத்தியிருந்தாலும், வரும்காலங்களில் காங்கிரஸ் எம்மாதிரியான வியூகங்களை வகுக்கிறது என்பதை பார்த்துத்தான் அவர்களின் அரசியல் எதிர்காலத்தைக் கணிக்க முடியும்” என்கிறார் அவர்



from India News https://ift.tt/JAbS5jK

Post a Comment

0 Comments