"என்ன, நீங்களும் கறுப்பு உடையா..." - சட்டமன்ற வளாகத்தில் வானதியிடம் கலகலத்த விஜயதரணி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கறுப்பு உடையில் தமிழக சட்டமன்றத்திற்கு வர வேண்டும் தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கு. செல்வபெருந்தகை கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "சட்டமன்றத்துக்கு வரும் உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு உடை அணிய வேண்டும். ராகுல் காந்திக்கு நாம் ஆதரவாக உள்ளோம் என்ற பதாகைகளையும் ஏந்தி குழுவாக சட்டமன்றத்திற்கு வரவேண்டும்.

ராகுல் காந்திக்கு ஆதரவாக சட்டமன்றத்தின் வேலை நேரத்தில் பேச வேண்டும். சட்டமன்றத்தை விட்டு வெளியே வராமல் இரவு உள்ளிருப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, இன்று காலை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு உடையில் சட்டமன்றத்துக்கு வருகை தந்து ராகுல் காந்திக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர்.

கருப்பு உடையில் வானதி சீனிவாசன் - விஜயதாரணி

அந்த சமயத்தில் சட்டமன்றத்துக்கு சிறிது தாமதமாக வந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எதேச்சையாக கருப்பு நிற உடையில் வந்திருந்தார். அவர் உள்ளே வரும் போது எதிர்பட்ட காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ விஜயதரணி, வானதி சீனிவாசனிடம், "என்ன நீங்களும் கறுப்பு உடையா..." என விளையாட்டாக பேச.... "அய்யயோ....இல்லைங்க அதற்காக நான் கறுப்பு உடையில் வரவில்லை" என சிரித்துக்கொணடே அவர்களை கடந்திருக்கிறார். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் கலகலப்பு ஏற்பட்டது. வெளியில் கூடியிருந்த பத்திரிகையாளர்களும் வானதியிடம் கறுப்பு உடை குறித்து கேள்விகளை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அதனை சிரித்தப்படியே கடந்து சென்றார்.

தொடர்ந்து சட்டமன்றத்துக்குள் சபாநாயகர் அப்பாவு வானதிக்கு பேச அனுமதி அளிக்கும் போது, ``மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் வானதி அவர்கள்... காங்கிரஸ்காரர்கள் தான் யூனிஃபார்பில்(கறுப்பு உடை) வந்திருக்கிறார்கள். நீங்களுக்கும் அதே யூனிஃபார்மில் வந்திருப்பது போல் தெரிகிறது” என்றார் நகைச்சுவையாக. அதற்கு பதிலளித்த வானதி, ``எமர்ஜன்சி காலத்தில் தமிழத்தில் ஆளும்கட்சி தலைவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்பதனை நினைவூட்ட கறுப்பு உடையில் வந்திருக்கிறேன்” என்று பதிலளித்தார்,



from India News https://ift.tt/KWcITsJ

Post a Comment

0 Comments