``பாஜக-வினர்போல, எங்களுக்கும் சித்து விளையாட்டு ஆடத் தெரியும்” - அதிரடி காட்டும் ஜெயக்குமார்

“மகளிருக்கான உரிமைத் தொகையை தகுதியானவர்களுக்கு மட்டும் கொடுப்பதுதானே நியாயம்?”

“தேர்தலின்போதே அப்படிச் சொல்லியிருந்தால் வரவேற்கலாம். ஆனால், ‘குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் கொடுப்போம்’ என்று சொல்லி, ஓட்டை வாங்கி அதிகாரத்தைச் சுவைத்துவிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், ‘தகுதியான தாய்மார்கள்’ என்று உருட்டுவதால்தான் எதிர்க்கிறோம். எல்லாத் திட்டங்களையும், தனது தந்தை கருணாநிதி பிறந்த நாளில்தானே ஸ்டாலின் தொடங்குவார்... இந்தத் திட்டத்தை மட்டும் அண்ணா பிறந்தநாளில் தொடங்கும்போதே தெரியவேண்டாமா இது வெறும் கண்துடைப்பு அறிவிப்பு என்று.”

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதல்வர் மு.க ஸ்டாலின்

``ஆனால், அரசின் வருவாய் பற்றாகுறையை 62,000 கோடியிலிருந்து 30,000 கோடியாக குறைத்திருக்கிறார்களே?”

“நானும் நிதி அமைச்சராக இருந்தவன்தான். தாலிக்கு தங்கம், முதியோருக்கான உதவித்தொகை குறைப்பு, இலவச லேப்டாப் உள்ளிட்ட மக்கள் நலன் திட்டங்களையெல்லாம் முடக்கிவிட்டு, வருவாய் பற்றாகுறையை குறைத்துவிட்டதாக மார்தட்டுவது கேலிக்கூத்தானது. வேட்டையாடுவது எருமையை, இதிலென்ன பெருமை வேண்டியிருக்கு?”

“அ.தி.மு.க ஆட்சியில் கஜானாவை காலியாக்கிவிட்டு சென்றதே இத்தனைக்கும் காரணம் என்கிறார்களே?”

“1991, 2001, 2011 என தி.மு.க ஆட்சி முடியும்போதெல்லாம், களஞ்சியமும் காலி, கஜானாவும் காலி. அ.தி.மு.க ஆட்சியில்தான் கஜானாவை நிரப்புவோம். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கொரோனா, வெள்ளம் போன்ற இடர்பாடுகளால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. நாங்கள் ஒன்றும் தி.மு.க-வை போல ஊதாரித்தனமாக செலவு செய்யவில்லை.”

ஆன்லைன் ரம்மி

“ஆன்லைன் ரம்மி தடை சட்ட விவகாரத்தில், மசோதாவை திருப்பியனுப்பிய ஆளுநரை விமர்சிக்காமல், அரசை மட்டும் குறை சொல்வது நியாயமா?”

“ஆன்லைன் ரம்மி தடை சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று உறுதியாக, ஆணித்தரமாக தி.மு.க அரசு சொல்லவில்லை என்பதுதான் இங்கு பிரச்னை. ரம்மி விஷயத்தில் தி.மு.க அரசுதான் விளையாடுகிறது. நீட் விவகாரத்திலும் இதுதான் நடக்கிறது.”

உதயநிதி ஸ்டாலின்

“நீட் விலக்கு விவகாரத்தில் தொடர்ந்து சட்டம் போராட்டம் செய்வோம் என்று அரசு தெளிவாக கூறிவிட்டதே?”

“நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குதான் தெரியும் என்றுதானே உதயநிதி பிரசாரம் செய்து ஓட்டு வாங்கினார். இப்போது ‘உரிமைக்காக போராடுவோம், அதுதான் ரகசியம்’ என்று சொல்லி எங்களையே புல்லரிக்க வைத்துவிட்டார். அப்படி என்ன உரிமைக்காகப் போராடிக் கிழித்துவிட்டார்கள்... உதயநிதி ஓர் கத்துக்குட்டி, கைப்பிள்ளை என்பது இதிலிருந்தே தெரிகிறது. பா.ஜ.க-வை கடுமையாக எதிர்ப்பதுபோல வெளியே காட்டிக்கொண்டு, தேர்தலுக்கு பின்னர் ஆதரவு கொடுப்பதாக பிரதமரிடம் வாக்குக்கொடுத்திருக்கிறார் உதயநிதி. இதைபோல இரட்டை வேடதாரிகள் நாங்கள் இல்லை.”

ஜெயக்குமார்

“பிரதமர் மோடியை சந்தித்தாலே இரட்டை வேடமா? அப்படியே பார்த்தாலும், பிரதமர் மோடியை அதிகமாக சந்திதது அ.தி.மு.க-வினர்தானே?”

“எங்களுக்குள் வெளிப்படையான நட்புறவு இருக்கிறது. இவர்கள் வெளியில் பா.ஜ.க-வை கடுமையாக எதிர்ப்பதுபோல காட்டிக்கொண்டு, திரைமறைவில் நெருக்கமாவது இரட்டை வேடம் இல்லையா?”

“பா.ஜ.க-வுடன் தி.மு.க நெருக்கம் காட்டுவதால், ‘எங்கே நமது தலைக்கு ஆபத்து வந்துவிடுமோ...’ என்று அச்சப்படுவதுபோல் தெரிகிறதே?”

“அப்படியெல்லாம் இல்லை. எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம்.”

“ஆனால், எடப்பாடியின் புகைப்படத்தை தமிழக பா.ஜ.க-வினர் எரிக்கும் அளவுக்கு கூட்டணிக்குள் பிரச்னை இருக்கிறது. அவர்கள் என்ன சொன்னாலும் அமைதியாகவே இருப்போம் என்ற நிலைக்கு அ.தி.மு.க வந்துவிட்டதோ?”

“இல்லை. எடப்பாடியின் பட எரிப்புக்கும், அம்மாவோடு அண்ணாமலை தன்னை ஒப்பிட்டுப் பேசியதற்கும் எங்களது கண்டனத்தைப் பதிவு செய்தோம். ஆனால், படத்தை எரித்த நபரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, மறுநாளே சேர்த்துக்கொண்டார்கள். பா.ஜ.க-வினர்போல எங்களுக்கும் சித்து விளையாட்டு ஆடத் தெரியும். பூட்டிய அறைக்குள் கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலை பேசியதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. பொதுவெளியில் பேசட்டும், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். எங்கள் காலை மிதித்தால், எப்பேற்பட்ட கொம்பனாக இருந்தாலும் பதிலுக்கு மிதிக்காமல் விடமாட்டோம்.”

ஜெயக்குமார்

“கடற்கரை மணலைக்கூட எண்ணிவிடலாம் போல, அ.தி.மு.க உட்கட்சி வழக்குகள் எத்தனை இருக்கிறதென்று தெரியவில்லையே?”

“எல்லாவற்றுக்குமே ஒரு முடிவு உண்டு. தலைமைக்கழக நிர்வாகிகள் முதல் கிளைக்கழகம் வரை எல்லோரும் ஒன்றுபட்டு, சட்டப்படி எடப்பாடியை ஒற்றைத் தலைமையாக தேர்வு செய்து இருக்கிறார்கள். ஓ.பி.எஸ் தலைமைலான ஒரு குழு, தி.மு.க-வுடன் கைகோர்த்துக் கொண்டு கட்சியை முடக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே பூஜ்ஜியமாகிபோன ஓ.பி.எஸ் தற்போது பூஜ்ஜியத்துக்கும் கீழே சென்று கொண்டிருக்கிறார்.”

“சட்டவிதிகளை தளர்த்தினால், நானும் பொது செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் என பன்னீர் கூறியிருக்கிறாரே?”

“எப்படி... அவர் மட்டும் அவருக்கு ஓட்டுப்போட்டாலே, பொதுச்செயலாளராகிவிடலாம் என்று விதியை மாற்றச் சொல்கிறாரா... இன்றைய சூழலில் பொது செயலாளர் தேர்தலில் நின்றாலும் படுதோல்விதான் என்பது அவருக்கே தெரியும்.”

பன்னீர் செல்வம்

“பன்னீரின் தாயார் மறைவுக்கு அரசியல் நாகரிகம் கருதி முதல்வர் ஸ்டாலின் துக்கம் விசாரிக்கிறார். இதில் உங்களுக்கு என்ன பிரச்னை?”

“துக்கம் விசாரிப்பதும், காப்பி கொடுப்பதும் நமது பண்பாடுதான். ஆனால், துக்கம் விசாரிக்க வந்த முதல்வர் ஸ்டாலினையும், உதயநிதியையும் இன்முகத்தோடு சிரித்து ஓ.பி.எஸ் வரவேற்கிறார். ரவுண்ட் டேபிள் போட்டு சிரித்து சிரித்து ஆலோசனை செய்கிறார்கள். அம்மா இருக்கும் போது இதுபோன்ற சம்பவம் நடக்குமா... ஓ.பி.எஸ் செய்ததை எந்த தொண்டனும் ஏற்கவில்லை.”



from India News https://ift.tt/vSXRbZY

Post a Comment

0 Comments