`இது சர்வாதிகாரத்தின் தொடக்கமாகும்’ - ராகுலின் பதவிபறிப்பு குறித்து உத்தவ் தாக்கரே காட்டம்

மோடி என்ற பெயருக்கு எதிராக அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கி இருக்கிறது. இத்தண்டனை வழங்கப்பட்ட அடுத்த நாளே ராகுல் காந்தியின் எம்.பி.பதவியை பறித்து பாராளுமன்றம் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி விவகாரத்தில் முதல் முறையாக திரிணாமுல் காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று குரல் கொடுத்தன. மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான உத்தவ் அணி, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன.

இது குறித்து முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில், ``திருடனை திருடன் என்று அழைப்பது இப்போது குற்றமாகிவிட்டது. திருடர்களும், நாட்டை கொள்ளையடித்தவர்களும் சுதந்திரமாக உலாவிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது சர்வாதிகாரத்தின் தொடக்கமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் மத்திய அரசின் செயலை கண்டித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ``ராகுல் காந்தியின் பதவி பறிப்பு அரசியல் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானது. இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் நியாயமான நீதி, சிந்தனை சுதந்திரம், அனைவருக்கும் சமமான வாய்ப்பு போன்றவற்றிற்கு நமது அரசியலமைப்பு உத்தரவாதம் கொடுத்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் மகாராஷ்டிராவில் இன்று பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க.வினர் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வருகின்றனர். மோடி இன மக்கள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் என்றும், எனவே ஒட்டுமொத்த இதர பிற்படுத்தப்பட்ட மக்களை ராகுல் காந்தி அவமதித்து விட்டதாகவும் கூறி பா.ஜ.க.வினர் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



from India News https://ift.tt/mZfHre0

Post a Comment

0 Comments