`தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி' - ஐந்து முனை போட்டியில் சத்தியமூர்த்தி பவன்

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த பிப்ரவரி, 2019-ல் நியமனம் செய்யப்பட்டார். அந்த கட்சியின் விதிமுறைகளின் படி மூன்று ஆண்டுகள் மட்டுமே, தலைவர் பதவியில் நீடிக்க முடியும். அதன்படி கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் முடிந்து விட்டது. இதையடுத்து அந்த பதவியை பிடிக்க பலரும் முயற்சி செய்ய தொடங்கினார்கள்.

கே.எஸ்.அழகிரி

ஆனால் காங்கிரஸில் இருந்து மூத்த நிர்வாகிகள் விலகல், தலைவர் நியமனம் போன்றவற்றால் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் பாரத் ஜோடோ யாத்திரை, ஈரோடு தேர்தல் காரணமாக புதிய தலைவர் நியமனம் தள்ளி போனது. ஒருவழியாக விரைவில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் அறிவிக்கப்படுவார், என்கிறார்கள் சீனியர் கதர்கள்...

இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர். "தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், ரூபி மனோகரன், செல்வப்பெருந்தகை ஆகிய 5 பேருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.

ஜோதிமணி

இதில் ஜோதிமணி தலைமைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். அவர் மீது சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நன்மதிப்பு இருப்பதால் அதை வைத்து பதவியை பிடிக்க காய் நகர்த்தி வருகிறார். இருப்பினும் முன்னாள் தலைவர்கள் முட்டுக்கட்டை போட்டு வருவதால், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே விரும்பவில்லையாம்.

இதற்கு அடுத்ததாக கார்த்தி சிதம்பரம் இருக்கிறார். இவர் பிரியங்கா காந்தி மூலமாக தலைவர் பதவியை பிடிக்க முயற்சித்து வருகிறார். மேலும் இது தொடர்பாக ஆதரவு கேட்டு திமுக தலைமையிடமும் பேசியிருப்பதாக தகவல்.

கார்த்தி சிதம்பரம்

அடுத்த இடத்தில் இருக்கும் செல்லகுமாருக்கு சோனியா- ராகுல் இடத்தில் நன்மதிப்பு இருக்கிறது. மேலும் கூட்டணி கட்சியினரையும், கட்சிக்காரர்களையும் அனுசரித்து சொல்லக்கூடியவர் என்ற இடத்தில் இருக்கிறார். எனவே இவருக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

நான்காவது இடத்தில ரூபி மனோகரன் இருக்கிறார். இவர் முதலில் அழகிரியின் நெருங்கிய நண்பராக தான் இருந்தார். பின்னாளில் தலைவர் பதவிக்கு முயற்சிக்க தொடங்கியதால் இருவருக்கும் இடையில் பிரச்னை வெடித்தது. இதையடுத்து இருவரும் பிரிந்து விட்டனர்.

டாக்டர் செல்லகுமார் எம்.பி

இருப்பினும் கட்சி தலைமை நடத்தும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்நின்று செய்து வருவதால், அதை காரணமாக காட்டி தலைவர் பதவிக்கு முயற்சித்து வருகிறார். அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்களாம்.

செல்வப்பெருந்தகையை பொறுத்தவரை, அவரிடம் இருக்கும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம். இதற்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றிருப்பதே காரணம். விரைவில் அவருக்கு சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாக்கிருக்கிறது.

முன்னதாக இளங்கோவனை சம்மந்தப்பட்ட பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் திமுக தலைமையும், காங்கிஸ் தலைமையும் வற்புறுத்தி தேர்தலில் களம் காண செய்தது என்ற பேச்சும் அடிப்பட்டது. எனவே தான் செல்வப்பெருந்தகை தீவிரமாக தலைவர் பதவியை கைப்பற்ற துடித்து வருகிறார். இவருக்கு கார்கேவும், அவரது மகனும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

ரூபி மனோகரன்

இருப்பினும் இறுதி நேரத்தில் காட்சிகள் மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்போது தான் யார் தலைவராக வருவார்கள் என்பது தெரியும். மறுபுறம் அழகிரியும் தனது பதவியை விட்டு தருவதாக இல்லை. தான் ஆக்டிவாக இருப்பதாக காட்டிக்கொள்ள பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்.

அவ்வப்போது ஆர்ப்பாட்டம் நடத்துவது, கொடி கம்பங்கள் நடுவது போன்றவற்றில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே வந்த போது தனது ஆதரவாளர் மூலமாக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கெத்து காட்டியிருந்தார். இருப்பினும் எந்த அளவுக்கு இது கைகொடுக்கும் என்பது தெரியவில்லை" என்றனர்.



from India News https://ift.tt/kA2n4yb

Post a Comment

0 Comments