கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி மையம் அதானி நிறுவனம், மோசடிகள் செய்ததாக அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனால், அதானி குழுமத்தின் பங்குகள் பெரியளவில் சரிவுகளைச் சந்தித்தன. குறிப்பாக, உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்த அவர், 22-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இப்படியாக இந்த விவகாரம் வெளியில் பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் மத்திய நிதி பட்ஜெட் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, இது குறித்த விவாதத்தை சபைக்குள் தொடங்கி வைத்தார். ``கடந்த பல ஆண்டுகளாக இந்தக் கேள்வி கேட்கப்பட்டு வந்தாலும், ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகான தற்போதைய கேள்வி வலிமை பெற்றிருப்பதாகவே கருதப்படுகிறது. அனால், இது தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா... என்பது சந்தேகம்தான்" என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இது தொடர்பாக நாடாளுமன்ற அவையில் பேசிய ராகுல் காந்தி, "மோடியும், அதானியும் விமானத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இருவருக்கும் என்ன உறவு..?" என்ற கேள்வியை எழுப்பினார். மேலும், ``நான் மேற்கொண்ட `பாரத் ஜோடோ' யாத்திரையில் மக்கள் அனைவரும் ஒரு பெயரை என்னிடம் மீண்டும் மீண்டும் கேட்டனர். அவர்தான் 'அதானி'. எப்படி அவரால் மட்டும் எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி பெற முடிகிறது என்னும் கேள்வியை முன்வைத்தார்கள். காஷ்மீரில் ஆப்பிள் ஏற்றுமதி தொடங்கி கேரளாவில் விமானம், துறைமுகம் என அனைத்திலும் அதானி வெற்றி சாத்தியமானது எப்படி?
மேலும், 2014-ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் 609-வது இடத்தில் இருந்த அதானி, 2022-ல் இரண்டாவது இடத்துக்கு எப்படி முன்னேறினார். 6 ஆண்டுகளில் 8 மில்லியனாக இருந்த அதானி சொத்து மதிப்பு, 140 மில்லியன் டாலராக உயர்ந்தது எப்படி... அரசியல் மற்றும் வணிக தொடர்பு வாயிலாக நண்பனின் வியாபாரத்தை எப்படி உச்சத்தைத் தொட வைக்க வேண்டும் என்பதில் மோடிக்கு தங்கப்பதக்கம் வழங்கலாம். இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானிக்கு கொடுக்க கோத்தபய ராஜபக்சேவிடம் மோடி கேட்டுக்கொண்டார். அது வெளிநாட்டுக் கொள்கையல்ல. அதானியின் தனிப்பட்ட வளர்ச்சி தொடர்பானது. அதேபோல், இங்கு அதானியின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் சட்ட விதிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக, ஒரு தளத்தில் எந்த முன் அனுபவமும் இல்லாத அதானிக்கு திட்டங்கள் ஒதுக்கப்பட்டன. அப்படிதான், 6 விமான நிலையங்கள் அதானி கைகளுக்குப் போனது. ஒவ்வொருமுறையும் வெளிநாடுகளுக்கு பிரதமர் பயணம் மேற்கொண்டவுடன், அதானி அந்த நாடுகளுக்குப் பயணம் செய்து ஒப்பந்தம் போட்டிருக்கிறார். இப்படி மோடி உதவியதில் அதானி குழுமத்திலிருந்து தேர்தலுக்கு பா.ஜ.க-வுக்கு எத்தனை கோடி வழங்கப்பட்டிருக்கிறது என்பதை சொல்ல வேண்டிய இடத்தில் அவர்கள் இருக்கின்றனர்" என்றார் காட்டமாக.
இதற்கு பா.ஜ.க சார்பாக அவையிலும், வெளியிலும் எந்த எதிர்வினையும் இல்லை. மொத்தமாக காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி பிரதமர் மோடி பேசினார். ஆனால், தான் கேட்ட கேள்விக்குப் பதில் கூறவில்லை என்னும் விமர்சனத்தை ராகுல் காந்தியும் அவை முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இத்தகைய சூழலில், காங்கிரஸின் கேள்வியும் பா.ஜ.க-வின் மௌனமும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், ``நாடாளுமன்றத்தில் தவறான கருத்தை பேசுகிறார் என உறுப்பினர் மீது அவதூறு வழக்கு போட முடியாது என்பதற்காக ராகுல் காந்தி அவையில் அந்தக் கருத்தை முன்வைக்கவில்லை. அவர் வெளியிலும் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார். அதானிக்கும் மோடிக்கும் என்ன உறவு... அதானியின் அபிரிமிதமான வளர்ச்சி எப்படி சாத்தியமானது என்னும் கேள்வியை அவர் முகாந்திரம் இல்லாமல் முன்வைக்கவில்லை. ஒரு கிராமத்தில் முன் அனுபவம் இல்லாமல் கிணறுகூட தோண்ட முடியாது. இந்த நிலையில் அனுபவம் இல்லாத ஒரு நிறுவனத்துக்காக, விமானப் போக்குவரத்து சட்டவிதிகள் மாற்றியமைக்கப்படுகின்றன. குறிப்பாக, முக்கியமான விமான நிலையம் தனியார் நிறுவனம் கட்டுப்பாட்டில் இருந்தால், அந்த நிறுவனம் வேறு தளங்களை நிர்வகிக்க முடியாது என்ற விதியை முற்றிலும் மாற்றினர். முன் அனுபவம் இல்லாத நிறுவனங்கள் தொழில்நுட்ப பிரச்னைகளைச் சரிசெய்ய ஜெர்மனி நிறுவனத்தின் துணையுடன் விமானப் போக்குவரத்தில் பணிகளை மேற்கொண்டன.
ஆனால், அதானிக்கு இது தொடர்பாக அனுபவம் இல்லாத நிலையிலும் அவருக்கு இந்தத் திட்டங்கள் வழங்கப்பட்டன. அதுவும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துதான். அவர் எந்த விதியையும் மீறவில்லை. அவருக்கான விதியை அரசுதான் உருவாக்கி தந்தது என்பதே உண்மை. அதன் அர்த்தம் என்ன என்பதுதான் ராகுலின் கேள்வி. பா.ஜ.க சார்பாக இத்தனை நலன் அதானிக்கு கிடைக்கும்போது, பா.ஜ.க-வுக்கு இதிலிருந்து பெரும் பயன் என்ன. அதுதான் தேர்தலுக்கு அவர்களுக்கு கிடைக்கும் நிதி. ஆனால், அது வெளிப்படையாக தெரிய வாய்ப்பில்லை.
ஆனால், மக்கள் மதம் என்னும் சதியில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு மேற்கொள்ளும் இந்த சூழ்ச்சி திட்டங்கள் பற்றி தெரியவாய்ப்பில்லை. உண்மையாக, மக்கள் வளர்ச்சி சார்ந்து யோசித்திருந்தால், கடந்த முறையே பா.ஜ.க தோல்வியைச் சந்தித்திருக்கும். குறிப்பாக, ஜி.எஸ்.டி போன்ற திட்டங்கள் அமல்படுத்திய பிறகும், பா.ஜ.க-வுக்கு மகத்தான வெற்றியை மக்கள் தந்தனர். எனவே, இந்தப் பிரச்சனை தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஒருவேளை, மக்கள் வளர்ச்சி பற்றி யோசித்தால் மாற்றம் ஏற்படலாம். ஆனால், அதை பற்றி யோசிக்கும் நிலையில் மக்கள் இல்லை" என்றார்.
from India News https://ift.tt/Pv3eRQM
0 Comments