ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும், அ.தி.மு.க சார்பில் தென்னரசும் முக்கிய வேட்பாளர்களாகக் களத்தில் இருக்கின்றனர். இவர்களுக்கு இடையிலான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் நடைபெற்ற ஈரோடு அனைத்து வர்த்தகர்கள் கூட்டமைப்புக் கூட்டத்தில் அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசை ஆதரிப்பதாகத் தகவல் வெளியானது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2.26 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் நிலையில், அதில் செங்குந்த முதலியார் சமூகத்தினரே வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர். ஆனால், ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் கன்னட நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அ.தி.மு.க சார்பில் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த தென்னரசும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இதனால் தங்கள் சமூகத்தை இரண்டு பெரிய கட்சிகளும் புறக்கணித்திருப்பதாகச் செங்குந்த முதலியார் சமூக மக்களிடம் அதிருப்தி நிலவி வந்தது.

இதை அறிந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், செங்குந்த முதலியார் சமூகத்தினரைச் சமாதானப்படுத்த அதே சமூகத்தைச் சேர்ந்த தன்னுடைய மருமகன் சபரீசனை ஈரோட்டுக்கு அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படுகிறது. இரண்டு நாள்கள் ஈரோட்டில் தங்கியிருந்து செங்குந்த முதலியார் சங்கத் தலைவர்கள், ஈரோடு அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பினர், கல்லூரி, பள்ளி நிர்வாகிகளைச் சந்தித்து சபரீசன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக தி.மு.க நிர்வாகிகள் நம்மிடம் பேசுகையில், ``ஈரோடு மேட்டுக்கடை தங்கம் மஹாலில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அமைச்சர்கள் உள்ளிட்ட யாருக்கும் உள்ளே அனுமதி இல்லை. சபரீசன் மட்டும் கலந்துகொண்டார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் 35 சதவிகிதம் செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் இருக்கின்றன.

கடந்த தேர்தலில் வாய்ப்பு வழங்காமல், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வெ.ரா-வுக்கு வாய்ப்பு வழங்கியபோதே சலசலப்பு ஏற்பட்டது. இந்த இடைத்தேர்தலிலாவது தங்கள் சமூகத்தினருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாகவும், பெருவாரியாக இருக்கும் தங்கள் சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்தும் சபரீசனிடம் முறையிட்டார்கள்.
`இந்த ஒருமுறை பொறுத்துக்கொள்ளுங்கள். அடுத்த தேர்தலில் உறுதியாக ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்படும்' என சபரீசன் உறுதி அளித்திருக்கிறார்" என்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுக்கு ஈரோடு அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆதரவு தருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, ஈரோடு அனைத்து தொழில் வர்த்தக கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களைச் சந்தித்த சபரீசன், `முதல்வரின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். உங்களது கோரிக்கைகளையும் தெரிவித்தால், முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்' என உறுதியளித்திருக்கிறார். அதையடுத்து, தொழில் துறையினர் ஏராளமானோர் சபரீசனைச் சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனராம்.
from India News https://ift.tt/h5y62Kq
0 Comments