தெலங்கானா: அதிரடி காட்டும் ஒய்.எஸ்.ஷர்மிளாவின் அரசியல் எடுபடுமா?!

தெலங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதிக்கும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்திருப்பது நாடறிந்த விஷயம். தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்) பா.ஜ.க-வினரை வெளுத்து வாங்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். பதிலுக்கு தெலங்கானா வரும்போதெல்லாம், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கே.சி.ஆரை வம்புக்கிழுக்காமல் டெல்லி திரும்புவதில்லை. இந்த நிலையில், கே.சி.ஆரை தொடர்ச்சியாகத் தனது விமர்சனங்கள் மூலம் தாக்கத் தொடங்கியிருக்கிறார் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா!

யார் இந்த ஷர்மிளா?

ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் தனியாகக் களமிறங்கிக் கட்சி தொடங்கியிருக்கிறார். 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்தில், `ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா' என்ற கட்சியை அங்கு தொடங்கினார். 2022 ஜூலையில், ஜெகன்மோகனின் அம்மா விஜயலட்சுமி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸிலிருந்து விலகி, தன் மகளின் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானாவில் இணைந்தார். `கட்சிக்குள் அம்மாவுக்கும் தங்கைக்கும் ஜெகன் முக்கியத்துவம் அளிக்காததால், ஆந்திராவிலிருந்து வெளியேறி இருவரும் தெலங்கானாவில் அரசியல் செய்துவருகிறார்கள்' என்ற பேச்சுகள் அப்போது எழுந்தன.

புதுக் கட்சி தொடங்கினார் ஜெகன்மோகன் தங்கை ஷர்மிளா!

தெலங்கானாவில் தனக்கான ஆதரவை திரட்ட கடந்த ஆண்டிலிருந்தே பாதயாத்திரையை மேற்கொண்டுவருகிறார் ஷர்மிளா. சட்டமன்றத் தொகுதிவாரியாக சென்று, சந்திரசேகர் ராவ்வின் பி.ஆர்.எஸ்-ஐ எதிர்த்து பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில், தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், காரசாரமான கருத்துகளை முன்வைத்து கே.சி.ஆரை எதிர்த்து வருகிறார் ஷர்மிளா. அவர் பாதயாத்திரை நடத்த மாநில காவல்துறை அனுமதி வழங்க மறுத்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றம் சென்று வெற்றிகண்டார் ஷர்மிளா.

முதல் கைது!

கடந்த ஆண்டு இறுதியில், பாதயாத்திரையின் ஒருபகுதியாக நர்சம்பேட்டை தொகுதிக்குச் சென்றிருந்தார் ஷர்மிளா. அங்கு, அந்தத் தொகுதியின் பி.ஆர்.எஸ் கட்சி எம்.எல்.ஏ சுதர்ஷன் ரெட்டிமீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த பி.ஆர்.எஸ் ஆதரவாளர்கள், ஷர்மிளாவின் கான்வாய் கார்களுக்கு தீவைத்தனர். ஷர்மிளா தனது பாதயாத்திரையைத் தொடர அனுமதியும் மறுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த, கே.சி.ஆரின் முதலமைச்சர் இல்லத்துக்கு காரில் புறப்பட்டார் ஷர்மிளா. அவரை காரோடு கிரேன் மூலம் தூக்கிச் சென்று கைதுசெய்தது காவல்துறை. மகளைக் காண காவல் நிலையத்துக்குச் செல்ல முற்பட்ட விஜயலட்சுமியும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். இதையடுத்து ஜாமீனில் வெளிவந்த ஷர்மிளா, டிசம்பர் 9-ம் தேதி அன்று ஒய்.எஸ்.ஆரின் இல்லமான தாமரைக் குளம் இல்லத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ளத் தொடங்கினார். அப்போது, அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியது காவல்துறை.

ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா

மீண்டும் கைது!

இந்த நிலையில், பிப்ரவரி 18-ம் தேதி மஹபூபாபாத் தொகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார் ஷர்மிளா. அன்று மாலை அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில், ``தெலங்கானாவில் இந்திய அரசியலமைப்பு பின்பற்றப்படுவதில்லை. கே.சி.ஆர் ஓர் சர்வாதிகாரி. இந்தியாவின் ஆப்கானிஸ்தானாக இருக்கிறது தெலங்கானா. கே.சி.ஆர்தான் தாலிபன்!'' என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், மஹபூபாபாத் பி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ சங்கர் நாயக்கையும், அவரின் மனைவியையும் ஷர்மிளா தகாத வார்த்தைகளில் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பிப்ரவரி 19-ம் தேதி அன்று காலை 9:30 மணி அளவில், பாதயாத்திரையைத் தடுத்து நிறுத்தி ஷர்மிளாவைக் கைதுசெய்தது தெலங்கானா போலீஸ். பின்னர், அவரை தலைநகர் ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது காவல்துறை. எம்.எல்.ஏ சங்கர் நாயக் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரைக் கடுமையாகத் திட்டியதற்காக ஷர்மிளாமீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. `பழங்குடியின மக்களை இழிவுபடுத்திவிட்டார் ஷர்மிளா' என்று பி.ஆர்.எஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஷர்மிளாவின் ஆதரவாளர்களோ ``பி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ-க்கள் செய்யும் ஊழல்களைப் பட்டியலிட்டால் உடனே கைதுசெய்கிறது தெலங்கானா காவல்துறை. இதுவே கே.சி.ஆர் ஓர் சர்வாதிகாரி என்பதை நிரூபிக்க போதுமானது'' எனக் கொந்தளிக்கின்றனர்.

கண்டுகொள்ளாத ஜெகன்மோகன்!

இரண்டு முறை ஷர்மிளா கைதுசெய்யப்பட்டும், தங்கைக்கும், அம்மாவுக்கும் ஆதரவாக ஜெகன் வாய்திறக்காதது பெரும் சலசலப்பை உண்டாகியிருக்கிறது. `2014 தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மூன்று இடங்களில் மட்டுமே வென்றது ஜெகனின் கட்சி. அதன் பிறகு, அந்தக் கட்சி ஆந்திராவில் மட்டுமே முழு கவனம் செலுத்திவருகிறது. இதனால்தான், தெலங்கானாவில் நேரடியாகக் கால்பதிக்காமல், தங்கை மூலம் புதுக் கட்சி தொடங்கியிருக்கிறார் ஜெகன். அவரின் பி-டீம்தான் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா' என்று சொல்லப்படுகிறது.

ஷர்மிளா

மேலும், ``சந்திரசேகர் ராவ்வை வீழ்த்த பா.ஜ.க-வின் பி-டீமாக களமிறக்கப்பட்டிருக்கிறார் ஷர்மிளா. தெலங்கானா மாநில பா.ஜ.க தலைவர்கள் எழுதிக்கொடுப்பதைத்தான் அவர் பேசுகிறார்'' என்ற குற்றச்சாட்டும் அவர்மீது முன்வைக்கப்படுகிறது. ஆனால், இதையெல்லாம் ஷர்மிளா தொடர்ந்து மறுத்துவருகிறார்.

சாதிப்பாரா ஷர்மிளா?

ஷர்மிளாவின் அரசியல் பயணம் குறித்து, ``ஷர்மிளாவின் பாதயாத்திரை தெலங்கானா மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை இதுவரை ஏற்படுத்தவில்லை. ஆனால், சில தொகுதிகளில் பி.ஆர்.எஸ்ஸின் வாக்குகளைச் சிதறடிக்கும் அளவுக்கு ஷர்மிளாவின் கட்சி முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பி.ஆர்.எஸ்-ஸை எதிர்த்து நிற்கும் பா.ஜ.க-வுக்கே சாதகமாக அமையும்'' என்கின்றனர் தெலங்கானா அரசியலை உற்றுநோக்குபவர்கள்.



from India News https://ift.tt/TcnXlGs

Post a Comment

0 Comments