`டெல்லி கதாசிரியர்கள் முடிவுசெய்கிறார்கள்' - உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு

சிவசேனாவில் கடந்த சில நாள்களாக ஏற்பட்டுவரும் மாற்றங்கள் உத்தவ் தாக்கரேவுக்குப் பின்னடைவை ஏற்படுத்திவருகின்றன. சிவசேனா பெயரையும் சின்னத்தையும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணிக்கு ஒதுக்கி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருக்கிறது. இதனால் சிவசேனாவின் அலுவலகங்களைத் தங்கள் வசம் கொண்டுவரும் வேலையில் ஷிண்டே ஆதரவாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். மும்பை சட்டமன்ற வளாகத்திலுள்ள சிவசேனா அலுவலகத்தை ஏக்நாத் ஷிண்டே நேற்று முறைப்படி தன்வசப்படுத்திக்கொண்டார். இதனால் மும்பை மாநகராட்சித் தலைமை அலுவலகத்திலுள்ள சிவசேனா அலுவலகத்தையும் ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவாளர்கள் கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே அந்த அலுவலகத்துக்கு இருவரும் உரிமைகொண்டாடியதால் மாநகராட்சி நிர்வாகம் அதை அடைத்து வைத்திருக்கிறது. மீண்டும் அந்த அலுவலகத்தைக் கைப்பற்ற போட்டி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து நேற்றிலிருந்து உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள், மாநகராட்சித் தலைமை அலுவலகத்தில் இருக்கும் கட்சி அலுவலகத்துக்குப் பாதுகாப்புக்கு இருந்துவருகின்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மும்பை மாநகராட்சி சிவசேனா கவுன்சிலர்கள் யாரும் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேரவில்லை. அவர்கள் அனைவரும் தொடர்ந்து உத்தவ் தாக்கரே அணியில் இருக்கின்றனர்.

அவர்களில் 40 பேரையாவது தன் பக்கம் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் ஏக்நாத் ஷிண்டே தீவிரமாக இருக்கிறார். கவுன்சிலர்களை விலை கொடுத்து வாங்க ஷிண்டே தனி அணியை உருவாக்கியிருக்கிறார். அடுத்த ஓரிரு மாதங்களில் மும்பை மாநகராட்சிக்குத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்குள் அவர்களைத் தன் பக்கம் கொண்டுவர வேண்டும் என்பதில் ஏக்நாத் ஷிண்டே தீவிரமாக இருக்கிறார். இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் பாஜக-வும் தீவிரமாக இருக்கிறது.

டெல்லி கதாசிரியர்கள்!

சிவசேனாவின் பெயரையும் சின்னத்தையும் வாங்க ரூ.2,000 கோடி செலவிட்டிருப்பதாக சிவசேனா (உத்தவ்) எம்.பி சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியிருந்தார். அவர் தற்போது அளித்திருக்கும் பேட்டியில், ``பிரச்னை நீதிமன்றத்தில் இருப்பதால், இதில் தேர்தல் கமிஷன் முடிவு எடுக்கக் கூடாது என்று சொன்ன பிறகும் அவசரப்பட்டு முடிவு எடுக்கவேண்டிய அவசியம் என்ன... இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்... ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்ட ஒன்று நடந்திருந்திருக்கிறது. எப்போது, என்ன நடக்க வேண்டும், எப்போது முடிவு எடுக்கப்பட வேண்டும், எந்த நாளில் ஆளுநர் மாற்றப்பட வேண்டும், எப்போது அமித் ஷா வர வேண்டும் என்பது கதையின் ஒரு பகுதி. டெல்லியில் இருப்பவர்கள் கதாசிரியர்கள். மகாராஷ்டிராவில் இருப்பவர்கள் வெறும் சிப்பாய்கள். இதில் சுப்ரீம் கோர்ட் முடிவுதான் இறுதியானது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உத்தவ் தாக்கரே

சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை!

ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனாவின் சின்னம் வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அதோடு ஏற்கெனவே ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 16 பேரின் பதவியைப் பறிக்கக் கோரி உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல்செய்யப்பட்டிருக்கும் மனுவும் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து இன்றைய விசாரணை அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த வழக்கு ஏழு நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது தொடர்ந்து ஐந்து நீதிபதிகள்கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்துவருகிறது. இதற்கு முன்பு நடந்த விசாரணையின்போது மக்கள் பிரதிநிதிகள் விலைக்கு வாங்கப்படுவது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்திருந்தனர்.

சிவசேனாவின் வெப்சைட் நேற்று டெலிட் செய்யப்பட்டுவிட்டது. அதையும் ஷிண்டே கைப்பற்றிவிடுவார் என்று கருதி உத்தவ் தாக்கரே அதை டெலிட் செய்துவிட்டார். அதேசமயம் ட்விட்டரில் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் பெயரையும் அடையாளத்தையும் மாற்றியிருக்கின்றனர்.



from India News https://ift.tt/NAzeg5m

Post a Comment

0 Comments