``கலைஞர் இருந்திருந்தால், நான் சொல்வதைச் செய்திருப்பார்!” - சொல்கிறார் பழ.கருப்பையா

`‘தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம்’ என்ற புதிய கட்சியை ஆரம்பித்திருக்கிறார், மூத்த அரசியல்வாதியான பழ.கருப்பையா. சென்னை ராயப்பேட்டையில் உள்ள பழ.கருப்பையாவின் வீட்டில் அவரைச் சந்தித்தேன். “எங்கள் கட்சிக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை... கட்சியின் துவக்க நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முழுவதுமிருந்து இரண்டாயிரம் பேர் திரண்டுவந்துவிட்டார்கள்” என்று உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார்.

பழ.கருப்பையா

``சொந்தக் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்கிற சிந்தனை உங்களுக்கு எப்போது வந்தது?”

``என்னுடைய கருத்துக்களை யூடியூப் மூலமாக முன்வைத்துவருகிறேன். அதைப் பார்த்துவிட்டு, ‘நீங்கள் ஒரு மனிதராகக் கத்திக்கொண்டிருக்கிறீர்களே.. எல்லாரும் சேர்ந்து நாம் ஏன் ஒரு கூட்டமாக இயங்கக்கூடாது’ என்று என் நண்பர்கள் கேட்டார்கள். சொந்தக் கட்சி நடத்துவதில் இருக்கக்கூடிய சிக்கல்கள் குறித்து அவர்களுடன் விவாதித்தேன். மேலும், கடந்த நான்கைந்து மாதங்களாக இது பற்றி யோசித்துவந்தேன்.

கடைசியில், கட்சியைத் தொடங்குவது என்ற முடிவுசெய்தேன். உதவிப் பேராசிரியர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், இளைஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் எங்கள் கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள். இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில் எங்கள் கட்சிக்கு பெரும் ஆதரவு இருக்கிறது.”

“உங்களுடைய அரசியல் எதிரி யார்?”

``தி.மு.க-வையும் அ.தி.மு.க-வையும் எதிர்க்கிறோம். பா.ஜ.க-வை மிகக் கடுமையாக எதிர்க்கிறோம். ஏனென்றால், மதத்தின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பது மிகவும் கொடூரமானது. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதற்கு காரணமாக குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டப்படி கடுமையான தண்டனை கொடுப்பதுதான் சரியானது. ஆனால், குஜராத்தில் முஸ்லிம்களை வேட்டையாடினார்கள். அங்கு, 2,000 பேர் படுகொலை செய்யப்பட்டபோது, அந்த மாநிலத்தின் முதல்வர் ஒரு வெறும் பார்வையாளராக இருக்கலாமா என்பது என் கேள்வி.

‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வந்தபோது பெரிதாக வரவேற்றார்கள். அந்தப் படத்தைக் கொண்டாடினார்கள். ஆனால், இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டது தொடர்பான ஆவணப்படத்தை பி.பி.சி வெளியிட்டால், அதைப் பார்க்கக் கூடாது என்று தடைசெய்கிறார்கள். இது என்ன நியாயம்?

பழ.கருப்பையா

பி.பி.சி ஆவணப் படத்தை கேரளா முழுவதும் திரையிடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அந்தப் படத்தைப் பார்த்த சி.பி.எம்.காரரை தி.மு.க அரசின் காவல்துறை கைது செய்கிறது. அப்படியென்றால், தி.மு.க-வை பா.ஜ.க-வின் ‘பி டீம்’ என்று சொல்லலாமா?”

“இந்து அறநிலையத்துறையின் பெயரை மாற்ற வேண்டும் என்கிறீர்களே?”

``இந்து அறநிலையத்துறையை, தமிழ் சமயங்கள் அறநிலையத்துறை என்று மாற்ற வேண்டும். இந்த கருத்தை அறிவாயலத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஸ்டாலினையும் ஆ.ராசாவையும் வைத்துகொண்டு பேசினேன். கலைஞர் இருந்திருந்தால், நான் சொல்லவருவதைப் புரிந்துகொண்டு செயல்பட்டிருப்பார். ஆனால், ஸ்டாலினால் அது முடியவில்லை. இந்நேரம் கலைஞர் உயிருடன் இருந்திருந்தால், சிலவற்றை போராடி மாற்றியிருப்பேன். ”

ஸ்டாலின்

“கட்சி நடத்துவதற்கு நிறைய பணம் வேண்டுமே?”

``ராஜாஜி காலத்திலோ, காமராஜர் காலத்திலோ கட்சி நடத்த இவ்வளவு பணம் தேவைப்படவில்லை. ஆனால், இப்போது ஆட்சியைப் பிடிக்க ஏராளமான பணத்தை முதலீடு செய்கிறார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு அறுவடை செய்கிறார்கள். ஆயுதம் வைத்திருப்பவனுடன் வெறுங்கையோடு சண்டைடியிட்டால் எப்படி இருக்குமோ, அப்படியொரு நிலைமையை உருவாக்கிவிட்டார்கள். இந்த நச்சு சூழலை மாற்ற வேண்டும்.”



from India News https://ift.tt/Vwt7UbJ

Post a Comment

0 Comments