மதுரை மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.180 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா பாண்டிகோயில் அருகே பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ``அமைச்சர் மூர்த்திக்கு எதையும் சாதாரணமாகச் செய்யத் தெரியாது, பிரமாண்டமாகத்தான் செய்வார். இதை நான் மட்டும் சொல்லவில்லை. நம் முதலமைச்சரும் சொல்லியுள்ளார்.
கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் பிரமாண்டமாக, மாநாடு போல நடத்தவேண்டும் என நினைப்பார். அந்தவகையில்தான் இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியும் ஒரு மாநாடு போல நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தனக்கு வழங்கப்பட்ட பத்திரப் பதிவுத்துறையிலும் முத்திரை பதிக்கும் வகையில் செயல்பட்டு, அரசுக்கு வருவாயை அதிகரித்துள்ளார் அண்ணன் மூர்த்தி.
வழக்கமாக ஒரு நிகழ்ச்சிக்கு தேதி வாங்குகிறவர்கள் இந்தமாதிரி ஒரு நிகழ்ச்சி என்று சொல்லித்தான் தேதி வாங்குவார்கள். ஆனால் அண்ணன் மூர்த்தியோ, என்ன நிகழ்ச்சி என்று சொல்லமாட்டார். இருபத்தி ஐந்தாயிரம் பேர் வருவாங்க, ஐம்பதாயிரம் பேர், எழுபத்தைந்தாயிரம் பேர் வருவாங்க என்றுதான் தேதி வாங்குவார்.
2018-ல் என்னை வைத்து முதன்முதலில் நிகழ்ச்சி நடத்தியதும் அண்ணன் மூர்த்திதான். அதன்பிறகு ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று முறை மதுரைக்கு வந்துள்ளேன்.
தூங்கா நகரம், கூடல் நகர், ஜல்லிக்கட்டு மாவட்டம் இப்படி மதுரை உங்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் நெருக்கமான, பெருமையான மாவட்டம். கண்ணகி நீதி கேட்ட மண் என்ற பெருமைகொண்ட மதுரைக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
எப்படி கண்ணகி தனது ஒற்றை கால் சிலம்பை வைத்து அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக நீதி கேட்டாரோ, அதேபோல் கடந்த தேர்தல் பிரசாரத்திற்காக மதுரைக்கு வந்திருந்தபோதுதான் எனக்கும் அந்த ஒற்றைச் செங்கல் கிடைத்தது. அதை வைத்துக்கொண்டுதான், தமிழகம் முழுவதும் சுற்றிவந்து தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய,மாநில அரசுகளுக்கு எதிராக நீதி கேட்டு, தமிழ்நாட்டின் விடியலை நோக்கி என் பிரசாரத்தை தொடங்கினேன்.
இதே மதுரையில் கலைஞர் பெயரில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு இணையாக 114 கோடி ரூபாய் மதிப்பில் மாபெரும் நூலகம் இன்னும் சில மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.
மதுரைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமே கழக அரசு அமைந்த இந்த 21 மாதங்களில் முதலமைச்சர் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றித் தந்துள்ளார் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் அவர் அளித்த வாக்குறுதிகளில் 75 சதவிகிதத்துக்கும் மேல் நிறைவேற்றித் தந்துள்ளார்.
எங்களிடம் உள்ள ஒரே பிரச்னை, செய்வதை மக்களிடம் சொல்வதில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் பரப்பும் அவதூறுகள் வாட்ஸ்அப் வதந்திகளாக எங்களுக்கு முன்னால் போய்ச் சேர்ந்து விடுகின்றன.
அதிமுக அரசு இருந்தபோது லட்சக்கணக்கான கோடி கடன்களையும், காலியான கஜானாவையும், அடிமை அரசு என்ற அவப்பெயரையும் மட்டுமே விட்டுச் சென்றது. தடுமாறிக் கிடந்த தமிழ்நாட்டு அரசை தலைநிமிரச் செய்தவர் நம் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றால் அது மிகையல்ல. கடந்த 21 மாதங்களில் அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகளில் சிலவற்றை மட்டும் உங்களிடம் எடுத்துக்கூற விரும்புகிறேன்.
மதுரையில் மட்டும் 29,990 விவசாயிகளுக்கு ரூ. 257 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி, 37,342 பயனாளிகளுக்கு ரூ.171 கோடி மதிப்பில் பொது நகைக்கடன் தள்ளுபடி, 21,220 மகளிர் உதவிக் சுய குழுக்களுக்கு ரூ. 42 கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கூட்டுறவு வங்கிகளில் மட்டும் பெற்ற கடன்கள். இன்னும் ஏராளமான திட்டங்களை நம் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்தையும் சொல்ல நேரம் போதாது.
இந்த மேடையில் மதுரை மாவட்டத்தில் ரூ 8,65,00,000 மதிப்பீட்டில் முடிவுற்ற 30 பணிகளின் பயன்பாட்டை தொடங்கி வைத்தும், மாவட்டத்தின் 9,344 சுய உதவிக் குழுக்களை சேந்த 72,092 மகளிர் பயனடையும் வகையில் ரூ 173 கோடி கடனுதவிகளை வழங்கியுள்ளோம். படிப்பிலும், உழைப்பிலும் ஆண்களைவிட பெண்கள் ஒரு படி மேல் இருக்கிறீர்கள். எதிர்நீச்சல் போட்டு முன்னேற நினைக்கும் உங்களுக்கு துடுப்பாகத்தான் இந்த கடனுதவிகளைப் பார்க்கிறேன்.
2021 தேர்தல் பிரசாரத்தின்போது இங்குள்ள எய்ம்ஸ் வளாகத்தில் செங்கல்லை எடுத்தேன். ஆனால், இன்னும் அதன் கட்டுமானப் பணியை ஒன்றிய அரசு தொடங்கவில்லை. அதன்பிறகு தொடங்கப்பட்ட கலைஞர் நூலகத்தை நாம் விரைவில் திறக்கவுள்ளோம். ஒன்றிய அரசின் இந்த பட்ஜெட்டில்கூட நிதி ஒதுக்கவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கும் அந்தக் கல்லுடன்தான் செல்லவேண்டும் என நினைக்கிறேன். மதுரை மக்கள் அனைவரும் கையில் செங்கல்லை எடுப்பதற்குள் எய்ம்ஸ் வேலைகள் தொடங்கிவிடும் என நினைக்கிறேன்.
ஆண்களைவிட பெண்கள் தெளிவாக புரிந்துகொள்வீர்கள். நீங்கள் எல்.ஐ.சி-யில் முதலீடு செய்த பணம் காணாமல் போய்கொண்டு இருக்கிறது. குஜராத்தில் நடந்தது குறித்த ஆவணப்படத்தை வெளியிட முடியலை. உங்க வீட்டு காஸ் கனெக்சனுக்கு மானியம் வருவதில்லை. இதையெல்லாம் கேட்க இங்குள்ள எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களும் வர்றதில்லை, ஓனர் யார் என்று முடிவெடுப்பதில் அவர்கள் மும்முரமாக உள்ளார்கள். நாங்கள் அப்படி கிடையாது. கொரோனாவிலும் உங்களுடன் நின்றோம்" என்று பேசினார்.
from India News https://ift.tt/jEy95am
0 Comments