மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம்: 15 ஆண்டுகால கிடப்பும், புத்துயிர்ப்பும் | ஓர் அலசல்

சென்னை மாநரின் மிகப்பெரிய கனவுத் திட்டமாகக் கருதப்படும், மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த நிலையில், மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் கடந்து வந்த பாதை, சந்தித்த தடைகள் மற்றும் திட்டத்தின் செயலாக்கம் பற்றி விரிவாகக் காண்போம்.

இரண்டடுக்குப் பறக்கும் சாலை மாதிரி (வெளிநாடு)

தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம்:

பெருகிவரும் சென்னை போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், சென்னை துறைமுகத்திலிருந்து கண்டெய்னர் சரக்கு லாரி போக்குவரத்து தடையின்றி செல்வதற்காகவும் கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் `மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம்.' இந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட சாலைத் திட்டமாகக் கருதப்பட்ட இந்தத் திட்டத்தை, ஜனவரி 8, 2009 அன்று அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையில், அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சுமார், ரூ.1,815 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த திட்டம் 20 கி.மீ. தொலைவுக்கு கூவம் ஆற்றின் வழியே அமைக்கத் திட்டமிடப்பட்டு, பணிகளும் முடுக்கிவிடப்பட்டன. மதுரவாயல், சேத்துப்பட்டு பகுதிகளிலும், கூவம் நதியிலும் உயர்மட்ட சாலைக்கான தூண்கள் முழுவீச்சில் கட்டப்பட்டு வந்தன.

அ.தி.மு.க ஏற்படுத்திய முட்டுக்கட்டை:

பறக்கும் சாலைத்திட்டத்தின் 15% பணிகள் முடிவடைந்த நிலையில், 2011-ம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க தலைமையில் ஜெ.ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து, ``கூவம் நதியில் அமைக்கப்படும் பறக்கும் சாலை திட்டத்தால் நதியின் நீரோட்டம் பாதிக்கப்படும், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்!" எனக் கூறி பறக்கும் சாலைத் திட்டத்துக்கு தடை ஏற்படுத்தினார். மேலும், மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருந்த அனுமதியையும் எதிர்த்து தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார்.

ஜெயலலிதா - சென்னை உயர் நீதிமன்றம்

வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் முகுல் ரோத்கி, ``கூவம் நதியின் ஓரத்திற்கு பதில் ஆற்றின் வழியே மதுரவாயல் சாலை திட்டம் செயல்படுத்தியதால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆற்றின் வழியே திட்டம் செயல்படுத்தப்பட்டால் மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படலாம், மழைக் காலத்தில் தண்ணீர் ஓட்டம் தடைப்பட்டு வெள்ளம் வர வாய்ப்பு இருக்கிறது!" எனக்கூறி விளக்கமளித்தார்.

கூவம்

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கொடுத்த கிரீன் சிக்னல்:

2016 டிசம்பர் மாதம் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஓ. பன்னீர்செல்வம், ``நீர்வளம் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் பாதிக்காத வகையில், மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து நிறைவேற்றலாம்!" என தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். அதையடுத்து மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ``தமிழக அரசு அளித்துள்ள பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டு திட்டம் விரைவில் தொடங்கப்படும். கூவம் நீரோட்டத்தை பாதிக்காத வகையில் திட்டத்தை செயல்படுத்து குறித்து ஆய்வு செய்யப்படும்!" என அறிவித்தார். அதன் பிறகு, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, கூவம் நதியின் நீரோட்டம் பாதிக்காத வகையில் பறக்கும் சாலை திட்டத்தின் பாதையை சற்று மாற்றி அமைத்து திட்டத்தை மாற்றியமைத்தனர்.

அந்த நிலையில், 2017-ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி. அதையடுத்து, பறக்கும் சாலை திட்டத்துக்கு மாநில நீர் மேலாண்மைத் துறையின் தடையில்லா சான்றிதழை தமிழ்நாடு அரசு வழங்கியது. தொடர்ந்து, 2018-ம் ஆண்டு திட்டத்தில் முன்னர் அறிவிக்கப்பட்ட நான்குவழிச் சாலைக்குப் பதிலாக ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படுவதாகவும், திட்ட மதிப்பீடு ரூ. 1,815 கோடியிலிருந்து ரூ.3,100 உயர்த்தப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு, எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய, மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பறக்கும் சாலை திட்டம் இரண்டு அடுக்காக அமையவிருப்பதாகவும், ரூ. 5000 கோடியில் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார். அதேபோல, எடப்பாடி பழனிசாமியும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து விரைவில் பறக்கும் சாலைத் திட்டத்தை நிறைவேற்றும் எனத் தெரிவித்தார்.

இபிஎஸ், ஓபிஎஸ்

மீண்டும் தி.மு.க ஆட்சி; மீண்டும் அடிக்கல்:

இந்த நிலையில், 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க தலைமையில் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராப் பதவியேற்றார். அதையடுத்து, மே 16, 2022-ம் ஆண்டு மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ் நாடு அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றிக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 20.56 கி.மீ. நீளத்திற்கு, ரூ.5,855 கோடி செலவில் பறக்கும் சாலைத் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவது உறுதியானது. அதைத்தொடர்ந்து, மே 26-ம் தேதி தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி, பறக்கும் சாலைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

மோடி - ஸ்டாலின்

நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் அனுமதி:

மதுரவாயல் - துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டத்துக்கு கடலோர மண்டல மேலாண்மை அனுமதி வழங்க, மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கியது. அந்த நிலையில் தற்போது மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழுவும் சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அதாவது, `உயர்மட்ட பாலத்திற்காக எழுப்பப்படும் தூண்களால் மழை மற்றும் சாதாரண காலங்களில் நீரோட்டத்திற்கு தடை ஏற்படக்கூடாது; கட்டுமானத்தின்போது அகற்றப்படும் கழிவுகளை நீர்நிலையிலோ அல்லது அதற்கு அருகிலோ கொட்டக்கூடாது. பாலம் அமைக்க தற்காலிகமாக அமைக்கப்படும் கட்டமைப்புகள் பணிகள் முடிந்த ஒரு மாதத்திற்குள் அகற்றப்பட வேண்டும்; மேலும், கூவம் நதியை மேலாண்மை செய்து வரும் பொதுப் பணித்துறையுடன் கலந்தாலோசித்து ஆற்றின் தூண்கள் அமைக்கப்பட வேண்டும்' உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து பறக்கும் சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்கி பரிந்துரை செய்திருக்கிறது மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு.

எப்படி அமையவிருக்கிறது புதிய பறக்கும் சாலைத் திட்டம்:

கடந்த 2009-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பறக்கும் சாலையைப் போல் அல்லாது முற்றிலும் புதிய வகையில் மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக, முதல் அடுக்கில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்துகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ஆறு வழிச்சாலையாக அமைக்கப்படும். இரண்டாம் அடுக்கில் இடைநிறுத்தமின்றி சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை கன்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக சரக்கு வாகனங்களின் போக்குவரத்துக்காக பிரத்யேகமாக நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும். இந்த ஈரடுக்கு பறக்கும் சாலை மொத்தம் 604 தூண்களால் அமைக்கப்பட உள்ளன. அதில், 375 தூண்கள் கூவம் நதிப் பகுதிகளிலும், 210 தூண்கள் கடலோர பாதுகாப்பு ஒழுங்குமுறை மண்டலப் பகுதிகளிலும் அமையவிருக்கின்றன.

ஈரடுக்கு பறக்கும் சாலைத் திட்டம் அனிமேஷன்

`நான்கு பகுதிகளாகக் கட்டப்படும் இந்த சாலைத் திட்டம் வரும் 2024-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றும், இதன் மூலம் சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48% அதிகரிக்கும், காத்திருப்பு காலம் 6 மணி நேரம் குறையும்!' எனவும் மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்திருகிறது.



from India News https://ift.tt/hts1Yf5

Post a Comment

0 Comments