ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி. இடையில் ஏற்பட்ட குழப்பங்கள், பிபிசி ஆவணப்படத்துக்கு பா.ஜ.க-விடமிருந்து எழுந்த எதிர்வினைகள்... போன்ற விஷயங்களின் அடிப்படையில் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...
``ஈரோடு இடைத்தேர்தலில் ஒரு முடிவெடுக்க பா.ஜ.க காலம் தாழ்த்தியது ஏன்?”
``கூட்டணியின் பிரதான கட்சியில் பிரிவு... ‘பா.ஜ.க நின்றால் ஆதரிப்பேன்’ என்று ஒருவர், ‘நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம்’ என்று மற்றொருவர். நீதிமன்ற வழக்கு ஒரு பக்கம், இரட்டை இலைச் சின்னம் பற்றிய கோரிக்கை மறுபக்கம் எனப் பல குழப்பங்கள் இருக்கும்போது, பா.ஜ.க-வும் குட்டையைக் குழப்பக் கூடாது என்ற கூட்டணி தர்மத்தின் அடிப்படையில்தான் பொறுமையாக இருந்தோம். நாள்களும் நெருங்க நெருங்கவே இரு தரப்பு தலைமையும் பேசினார்கள். இப்போது அதற்கு ஒரு முடிவை மாநிலத் தலைவர் அண்ணாமலை தெளிவுபடுத்தியிருக்கிறார்.”
```தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி’ என்று பெயர் அறிவித்திருக்கும் இ.பி.எஸ் அணியினர், போஸ்டர்களில் பா.ஜ.க தலைவர்களின் புகைப்படங்களைப் புறக்கணித்திருந்தனரே?”
``எங்கள் தலைவரை கமலாலயத்தில் சந்தித்தார்கள். எங்கள் நிலைப்பாட்டை சொன்ன பிறகுதானே புகைப்படங்கள் வைக்க முடியும். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த பா.ம.க யாருக்கும் ஆதரவு இல்லை என்று விலகிவிட்டார்கள். அதேபோல் கூட்டணியிலிருக்கும் ஏ.சி.சண்முகம், பாரி வேந்தர், ஜான் பாண்டியன் போன்றோர் இன்னும் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. கூட்டணியிலிருப்பவர்கள் சொல்வதற்கு முன் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கியிருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் இதோடு முடியப் போவதில்லை. தமிழக அரசியலை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பா.ஜ.க-தான் என்று மக்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதை நிரூபிக்கத்தானே போகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் பெயர். அவர்கள் தவறாகப் போட்டுவிட்டார்கள் என்பதைத் தெளிவுபடுத்திய பிறகு அதைப் பற்றி இனி பேசுவது அர்த்தமற்றது”
``ஓர் ஆவணப்படம் வெளியாகிறது... அதில் இருக்கும் கருத்தைக் கருத்தால் எதிர்க்காமல், எதற்காகப் பா.ஜ.க-வுக்கு இவ்வளவு பதற்றம்?”
``இதில் பா.ஜ.க-வுக்கு எந்த ஒரு பதற்றமும் கிடையாது. நம் நாட்டின் பிரதமர்மீது குறைசொல்லி, நாட்டின் கௌரவத்தையே பாதிக்கக்கூடிய விஷயமாக இந்த ஆவணப்படம் அமைந்திருக்கிறது. எனவே, தனிப்பட்ட மோடியின் மீதான குற்றச்சாட்டாக மட்டும் பார்க்க முடியாது. இது இந்திய தேசத்தின்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. பிபிசி என்ன காரணத்துக்காக எடுத்தார்கள், யார் சொல்லி எடுத்தார்கள், இத்தனை ஆண்டுகள் இல்லாமல், அடுத்தாண்டு தேர்தல் வரும் நேரத்தில் ஏன் இப்போது வெளியிட்டார்கள் என்பதெல்லாம் சர்வதேச அரசியல். கலவரம் எப்படி ஏற்பட்டது. அதற்கு என்ன காரணம், எல்லாமே முடிந்து போன விஷயம். முடிந்த வழக்கை இப்போது பேசுவதற்கு இவர்கள் யார்... அதன் பிறகு குஜராத்தில் மூன்று முறை முதல்வர், அடுத்து மூன்றாவது முறையாக பிரதமராக வரப் போகிறார். இப்படி இருக்கும்போது அவர்கள் நாட்டில் இருக்கும் பிரச்னைகளைப் பார்க்காமல், அடுத்தவர்கள் நாட்டின் பிரச்னையில் தலையிட இவர்கள் யார். ஏதோ ஒரு கற்பனையில் ஆவணப்படம் தயாரித்தால் அதை அனுமதிக்கலாமா”
``இதில் என்ன கற்பனை... உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதுதானே?”
``உண்மை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறதா... திருமாவளவன் கற்பனையில் சொன்னால் போதுமா... இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், என் கவனத்துக்குத் தெரியாமல் வந்துவிட்டது என்று வருத்தப்படுகிறார். எனவே, இதைவைத்து மக்களிடைய பதற்றத்தை ஏற்படுத்துவது எதிர்க்கட்சிகள்தான். ஆனால், அதற்கு இந்திய மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இந்தியாவைப்போல் மத சகிப்புத்தன்மை கொண்டு, எல்லோரையும் அரவணைத்து வாழக்கூடிய மக்கள் உலகில் வேறு எங்கும் இல்லை”
``அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க்கின் ஆய்வறிக்கையை வைத்து பா.ஜ.க-மீதும் விமர்சனம் வைக்கப்படுகிறதே?”
“அதானியோடு முடிச்சுப்போட்டு பா.ஜ.க-வைக் குறை சொல்ல வேண்டும் என்பது சரியான பொருளாதாரம் தெரியாதவர்கள் பேசும் பேச்சு. இந்தியாவிலிருந்து வெளியே சென்று தொழில் செய்யும் தொழிலதிபர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இதைச் செய்கிறார்கள். அதற்கு இங்கிருக்கும் சில இடதுசாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள்”
from India News https://ift.tt/7rWBNTM
0 Comments