உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு என்ற விவரங்களை, அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார். அதில் பழனிசாமி அணியின் வேட்பாளர் தென்னரசுவுக்கு 2,501 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் தென்னரசுவிற்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக வகையில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ``அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைத்த ஒப்புதல் கடிதத்தில், தங்கள் அணி சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்த செந்தில்முருகனின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் வேட்புமனுத் தாக்கலே செய்யாத பழனிசாமி அணியின் வேட்பாளர் தென்னரசு பெயர் இடம்பெற்றது. இது நடுநிலை தவறிய செயல், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கு.ப.கிருஷ்ணன், “இரட்டை இலைச் சின்னம் முடங்கக்கூடாது என்பதே ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு, இரட்டை இலைச் சின்னத்தில் நிற்பவர் வெற்றி பெற பாடுபடுவோம்” என்றார்.
தங்கள் தரப்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்த செந்தில்முருகன் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அவர் அறிவித்தார். பொதுக்குழு நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடம் பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவு இல்லை என்பதால் பின்வாங்கிவிட்டார்கள் என்றும், தாங்கள்தான் உண்மையான அதிமுக என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகிவிட்டது என்று பழனிசாமி தரப்பு கூறுகிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜிடம் சில கேள்விகளை நாம் முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில்களை காணலாம்.
``போட்டியில் இருந்து விலகியது ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு இல்லையா?”
``நீதிமன்றம், தேர்தல் ஆணையம், எம்.ஜி.ஆர் வகுத்துக் கொடுத்த அதிமுகவின் அடிப்படை விதிகள் என அனைத்தையும் பழனிசாமி தரப்பு அத்துமீறுகிறது. ஒரு வேட்பாளரின் பெயரை மட்டும் எழுதி, எல்லோரும் கையெழுத்துப் போடுங்கள் என்று அனுப்பிவைப்பதுதான் நியாயமான தேர்வா? இதில் ஜனநாயகம் எங்கே இருக்கிறது? ஜனநாயக சக்திகளுக்கு தொடர்ந்து தோல்வி கிடைக்கிறது. தொண்டர்களின் குரலை வலிமையாக வெளிப்படுத்தும் எங்களுக்கு தொடர்ந்து பின்னடைவுதான் ஏற்பட்டு வருகிறது. விதிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து வெற்றி கிடைக்கிறது என்பது ஆச்சர்யமாக உள்ளது. இத்தனையும் நடப்பதற்கு பின்னால் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று சந்தேகிக்கிறேன்.”
``அது என்ன சக்தி?”
``அது பொருளாதாரம் கடந்த சக்தியாக இருக்கலாம். இப்போதெல்லாம் அரசியல் சக்திகள் நேரடியாக பெற முடியாததை நீதிமன்றங்கள் மூலமாகக் கூட பெற்று விடுகிறார்கள்.”
``அப்படியானால் வேட்பாளர் தேர்வு குறித்த உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டதல்ல, வாங்கப்பட்டது என்கிறீர்களா?”
``இல்லை, அப்படிச் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமியிடம் குவிந்து கிடக்கும் அளவு கடந்த நிதியும், எம்.ஜி.ஆர் வகுத்துக் கொடுத்த விதிகளை சரியாக புரிந்துகொள்ளாத நீதியும் தவறாக முன்னெடுக்கப்பட்டு அதிமுக-வின் விதிகள் சிதைக்கப்படுகின்றன, அதன்மூலம் தொண்டர்கள் தோல்வியுற்றிருக்கிறார்கள் என்கிறேன்.”
``வேட்பாளர் தேர்வுக்கான ஒப்புதல் படிவத்தில் செந்தில்முருகன் பெயர் இல்லை என்று தெரிந்த உடனே ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காது என்பதாலா?”
``உடனே எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலையை முடக்கப் பார்க்கிறார் என்று திரித்துக் கூறியிருப்பார்கள். அதற்கு இடம் தரக்கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு பழனிசாமி அணிக்குதான் நிறைய இருக்கிறது என்கிறார்களே? பிறகு இன்னொரு வேட்பாளரின் பெயரையும் சேர்த்து அனுப்புவதில் என்ன பயம் அவர்களுக்கு?”
``இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவு என ஓ.பன்னீர்செல்வம் கூறிவிட்டார். எனவே தென்னரசுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை செய்வாரா?”
``வேட்பாளருக்கு ஓட்டு என்பதைவிட இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. மணமகளை பிடிக்கிறதோ இல்லையோ... திருமணம் நடக்கிறது, ஆசிர்வதிக்கிறோம். அதுதான் எங்கள் நிலைப்பாடு.”
``ஓ.பன்னீர்செல்வம் தரப்பு போட்டியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டதைப் போலவே இப்போது நடந்து இருக்கிறதே?”
``அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நல்ல நோக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் பாஜக-வுக்கு இல்லை. இருதரப்பையும் அழைத்து அவர்கள் பேசியிருக்க வேண்டும். அல்லது இரண்டு வேட்பாளர்களில் யார் சிறந்தவர் என்று கலந்து ஆலோசித்த பிறகு, திரும்பப் பெறுமாறு கூறியிருந்தால் நியாயமாக இருந்திருக்கும். ஆனால் எடுத்த எடுப்பிலேயே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு போட்டியில் இருந்து விலக வேண்டுமென கேட்கிறபோதே, அவர்கள் ஒருதலைச்சார்பு முடிவு எடுத்துவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்?”
``பாஜக நியாயமாக நடந்துகொள்ளவில்லை என வெளிப்படையாக குற்றம்சாட்டுகிறீர்களா?”
``நிச்சயமாக. தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆதரவு கேட்க ஓ.பன்னீர்செல்வமே அண்ணாமலையை நேரில் சந்திக்க சென்றார். ஆனால் பழனிசாமி தரப்பில் பிரதிநிதிகள் மட்டும்தான் சென்றனர். அண்ணாமலை இருக்கும் இடம் தேடி நாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று பழனிசாமி நினைக்கிறார்.”
``நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பன்னீர்செல்வத்தை விட பழனிசாமியே பலமானவராக இருக்கலாம் என அவர்கள் நினைக்கலாம் அல்லவா? அதனால் கூட இடைத்தேர்தலில் பழனிசாமி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கலாமே?”
``அப்படியென்றால் தமிழ்நாட்டில் பாஜக-விற்கு என்ன வலிமை இருக்கிறது? ஈரோடு கிழக்குத் தொகுதியிலோ அல்லது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலோ பாஜக-விற்கு என்ன வாக்கு வங்கி இருக்கிறது என்று நாங்கள் மதிப்பீடு செய்யலாமா? ஒரு அரசியல் கட்சிக்கு அதன் தலைவரின் அனுபவம்தான் முக்கியம். பாஜக நிலைப்பாட்டில் எங்களுக்கு வருத்தம்தான்.”
``அடுத்தகட்டமாக ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்யப்போகிறார்?”
``எடப்பாடி பழனிசாமியின் அபகரிப்பு அரசியல் பல நிலைகளிலும் வெற்றி பெற்று வருகிறது. இதன் பின்னிருக்கும் சக்தி என்னவென்பதை மக்கள் உணர்ந்துகொள்வார்கள். தண்ணீரில் மிதந்துவரும் எறும்பை மீன்கள் தின்னும். ஆனால் தண்ணீர் வற்றிவிட்டால் அந்த மீன்களையே எறும்பு தின்றுவிடும். காலம் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பைத் தரும்.”
from India News https://ift.tt/bmWHLrl
0 Comments