``பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி சந்திப்புக்கு 100% வாய்ப்பில்லை” - ஜெயக்குமார்

அ.தி.மு.க தரப்பில் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பொதுக்குழு மூலம் ஒரு வேட்பாளர் தேர்வுசெய்யப்பட்டு, இரட்டை இலையையும் எடப்பாடி தரப்பு கைப்பற்றியிருக்கிறது. இந்த நிலையில், `தி.மு.க, அரசு எந்திரங்களை இந்தத் தேர்தலுக்காகத் தவறாகக் கையாள்கிறது’ என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்திருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆளும் கட்சியான தி.மு.க இந்தத் தேர்தலில் எப்படியும் வெற்றிபெற வேண்டும் என அரசு எந்திரங்களைத் தவறாகக் கையாள்கிறது. அது தொடர்பாக ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்திருக்கிறோம். தேர்தல் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள்.

கசாப்புக் கடைக்காரரை நம்பிய ஆடுபோல ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் இடைத்தேர்தல் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றிருக்கிறார்.

இரட்டை இலைக்காக வேட்பாளரைத் திரும்பப் பெறுவதாகவும், இரட்டை இலைக்காக வாக்கு சேகரிக்கப் போவதாக ஓ.பி.எஸ் தரப்பு அறிவித்திருப்பது குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல இருக்கிறது. தி.மு.க-வின் `பி டீம்’ போல செயல்பட்டு, கலைஞரைப் புகழ்ந்து, தொண்டர்கள் கோயிலாகக் கருதிய அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தை எட்டி உதைத்து, சூறையாடிய ஓ.பி.எஸ் தரப்புடன் எடப்பாடி சந்திப்பதற்கு நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை.

எடப்பாடி பழனிசாமி பன்னீர்செல்வம்

ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அ.தி.மு.க தொண்டர்கள் இரட்டை இலை கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனவே, இந்தத் தேர்தலில் அ.தி.மு.க மாபெரும் வெற்றிபெறும்" எனத் தெரிவித்திருக்கிறார்.



from India News https://ift.tt/7ec5lNR

Post a Comment

0 Comments