டெல்லி மாநகராட்சிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளில் வெற்றி பெற்று அதிகாரத்தை தன்வசப்படுத்தியது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க டெல்லி மேயர் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் போதிலும், மேயர் தேர்தலை நடத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. கடந்த மாதம் 6, 24-ம் தேதிகளில் மேயர் தேர்தல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் பா.ஜ.க, ஆம் ஆத்மி கட்சிகளின் கூச்சல் குழப்பத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மீண்டும் மேயர் தேர்தலுக்காக அவை கூடியது. அவை கூடியதும் தேர்தலை நடத்தும் பொறுப்பு அதிகாரி சத்யா சர்மா மேயர், துணை மேயர், நிலைக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். அதோடு ஆளுநரால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் 10 பேரும் தேர்தலில் வாக்களிக்கலாம் என்றும் சத்ய சர்மா தெரிவித்தார். இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மாநகராட்சி சட்டத்தில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க அதிகாரம் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதை எதிர்த்து பா.ஜ.க-வினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் தேர்தல் நடத்துவது மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சத்ய சர்மா தெரிவித்தார்.
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டப் பிறகு நிருபர்களுக்குப் பேட்டியளித்த ஆம் ஆத்மி கட்சியின் பரத்வாஜ், ``தேர்தல் அதிகாரி சத்ய சர்மா முறைகேட்டில் ஈடுபடுகிறார். மேயர், துணை மேயர் தேர்தலை மட்டும்தான் இன்று நடத்துவதாக இருந்தது. ஆனால் நிலைக்குழு உறுப்பினர்கள் பதவிக்கும் சேர்த்து தேர்தல் நடத்தி முறைகேட்டில் ஈடுபட முயல்கிறார். தேர்தலை நியாயமான முறையில் நடத்த சுப்ரீம் கோர்ட்டை அணுகப்போகிறோம்" என்று தெரிவித்தார். மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க 104 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
நியமன உறுப்பினர்களின் துணையோடு தேர்தலில் வெற்றி பெற்றுவிட முடியும் என்று பா.ஜ.க கருதுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் இருந்தாலும், ரகசிய முறையில் தேர்தல் நடத்தப்படுவதால் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களிக்ககூடும் என்று அந்தக் கட்சி அச்சப்படுகிறது.
from India News https://ift.tt/TtKGcv4
0 Comments