``எங்களை எதிர்த்தோருக்குச் சரியான பாடமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைத்திருக்கிறது" - ஓபிஎஸ்

அ.தி.மு.க விவகாரத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு மட்டுமேயான தீர்ப்பாக, அ.தி.மு.க பொதுக்குழு மூலம் ஒரு வேட்பாளர் தேர்வு செய்யப்படவேண்டும், ஓ.பி.எஸ் தரப்பினர் கருத்தும் இதில் கேட்கப்படவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

அதைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தலில்‌ எந்தெந்த கோரிக்கைகளை மக்கள்‌ முன்‌, நாம்‌ எடுத்துச் சொன்னோமோ அவற்றையெல்லாம்‌ நிறைவேற்றும்‌ வகையில்‌ அமைந்திருக்கிறது. அதற்கேற்ப இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பின்‌ மூலம்‌ ஒற்றுமையாக போட்டியிடும்‌ வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்‌ இரட்டை இலை சின்னம்‌ முடக்கப்படுவதற்கு நான்‌ காரணமாக இருக்கமாட்டேன்‌ என்று கூறியிருந்தேன்‌. அதேபோல்‌, இன்று இரட்டை இலை சின்னத்தின்‌ மூலம்‌ அ.தி.மு.க போட்டியிடுகிற வாய்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்‌ மூலம்‌ கிடைத்திருக்கிறது. என்னை ஒருங்கிணைப்பாளர்‌ என்று மட்டும்‌ அல்ல, கட்சியிலேயே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர்‌ பகை உணர்வோடு கூறிவந்தனர்‌. இந்த நிலையில்‌, என்னையும்‌ என்னைச் சார்ந்தவர்களையும்‌ உள்ளடக்கி எங்கள்‌ கருத்துகளை கேட்டறிந்த பின்னர்தான்‌, பொது வேட்பாளரைப் பொதுக்குழு தேர்ந்தெடுக்க வேண்டும்‌ என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு எங்களை எதிர்த்தோருக்குச் சரியான பாடமாக அமைந்திருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம்

ஒருங்கிணைப்பாளர்‌ என்கிற என்னுடைய பொறுப்பு நீடிப்பதற்கு எவ்வித தடையும்‌ உச்சநீதிமன்ற தீர்ப்பின்‌ மூலம்‌ விதிக்கப்படவில்லை. ஆனால்‌, அதே நேரத்தில்‌ சச்சரவுக்கு உள்ளான பொதுக்குழுவின்‌ மூலம்‌ தேர்வு செய்யப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர்‌ என்ற பொறுப்பில்‌ நியமிக்கப்பட்ட முன்னாள்‌ இணை ஒருங்கிணைப்பாளர்‌ எடப்பாடி பழனிச்சாமி வகிக்கின்ற பொறுப்பை உச்ச நீதிமன்றமும்‌, தேர்தல்‌ ஆணையமும்‌ அங்கீகரிக்கவில்லை. இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை இரட்டை இலை சின்னம்‌ வெற்றிபெற நானும்‌ என்மீது பற்றுகொண்ட அ.தி.மு.க தொண்டர்களும்‌, என்மீது நம்பிக்கை கொண்ட பொதுமக்களும்‌ பாடுபடுவோம்‌" என்று கூறப்பட்டிருக்கிறது.

வைத்திலிங்கம்

சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் இந்த அறிக்கையை வாசித்தார். தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வைத்திலிங்கம், ``எங்களை நீக்கியது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. பொதுக்குழு யாரைத் தேர்ந்தெடுக்கிறதோ, இரட்டை இலை சின்னத்தில் யார் நிற்கிறார்களோ அவர்களை நாங்கள் ஆதரிப்போம். அது யாராக இருந்தாலும் சரி, இ.பி.எஸ், ஓ.பி.எஸ் என்றில்லை. அ.தி.மு.க சார்பில் இரட்டை இலை சின்னத்தில் யார் நிற்கிறார்களோ அவர்களை நாங்கள் ஆதரிப்போம்" என்றார்.



from India News https://ift.tt/PgucRoi

Post a Comment

0 Comments