சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கெளரியை நியமிக்க எதிர்ப்பு - யார் இவர், என்ன காரணம்?!

தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், அலகாபாத், கர்நாடக, சென்னை உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமனம் செய்ய பரிந்துரை வழங்கியது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்டோரியா கெளரியும் அடங்குவார். இவர் பாஜக-வின் மகளிரணியான மகிளா மோர்ச்சாவின் மாநில செயலாளராக இருந்திருக்கிறார். அப்போது சமூகவலைதளங்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரசாரங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பிரசாரங்களைச் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் இவர் நீதிபதியாக நியமிப்பதை எதிர்த்து கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கொலீஜியம் பரிந்துரைத்த வழக்கறிஞர்கள் பட்டியல்

குறிப்பாக, பிப்ரவரி 1-ம் தேதி, அவர் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்துக்கு எதிராகப் பேசியிருப்பதைக் குறிப்பிட்டு, சென்னை மூத்த வழக்கறிஞர்களான ஆர்.வைகை, டி.நாகசைலா, டி.மோகன், என்.ஜி.ஆர்.பிரசாத் மற்றும் சுரேஷ் ஆகியோர் சார்பாக கொலீஜியம் பரிந்துரை செய்தததை ஏற்கக் கூடாது என, குடியரசுத் தலைவருக்கு  மனு அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன் பரிந்துரையை எதிர்த்து வழக்கறிஞர்கள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த விக்டோரியா கெளரி?

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த இவர், கடந்த 20 ஆண்டுகளாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கடந்த ஜனவரி மாதம் கொலீஜியம் உயர் நீதிமன்ற நீதிபதிக்கான பரிந்துரையை வெளியிட்டிருந்தது. அதில்  விக்டோரியா கெளரியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால், இவரை உயர் நீதிமன்ற நீதிபதியாகும் பரிந்துரையைத் திரும்பப் பெற வேண்டும் என வழக்கறிஞர்கள் சார்பாக பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் நேரடியாக பாஜக-வில் இணைந்து செயல்படுவதும், சிறுபான்மையினருக்கு எதிராக முன்வைக்கும் கருத்துக்கள் தான் இவரை தமிழக வழக்கறிஞர்களும் அரசியல் கட்சிகளும் எதிர்க்க முக்கிய காரணமாக இருக்கிறது.

விக்டோரியா கெளரி

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விக்டோரியா கெளரி, தன் ட்விட்டர் பக்கத்தில், புது இந்தியாவை உருவாக்க, பாஜக-வில் இணைந்திருப்பதாகவும், நீங்களும் பாஜகவில் இணைந்து சேவையாற்ற 8980808080 எண்ணை அழையுங்கள் எனப் பதிவிட்டிருந்தார்.பாஜக-வில் இணைந்த இவர், தொடர்ந்து அந்தக் கட்சிக்காகப் பிரசாரங்களில்  ஈடுபட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியிருப்பது அவர் பழைய காணொலி பார்க்கும் போது தெரிகிறது. மேலும், விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலின் போது, தனியார் தொலைக்காட்சியில் பாஜக சார்பாகப் பேசியிருக்கிறார். அதில் அவர், பாஜக அரசு தமிழகத்தில் கொண்டு வந்த திட்டங்கள், வழங்கப்பட்ட நிதி குறித்து பேசியிருக்கிறார். இறுதியாக, திமுக மற்றும் காங்கிரஸ் என்பது வாரிசு கட்சி, ஆகவே, தமிழக மக்கள் அதை எதிர்க்க வேண்டும் என பேசியுள்ளார்.

பாஜக-வில் இணைந்த விக்டோரியா கவுரி

அதேவேளையில், கடந்த 2022-ம் ஆண்டு மே மாதத்தில் இவரின் மகளின் திருமண நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றிருந்தார். அதை தன் ட்விட்டர் பக்கத்தில், மகிளா மோர்ச்சா பிரிவின் மாநில செயலாளர் விக்டோரியா கெளரி இல்ல விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகப் பதிவிட்டிருந்தார்.இப்படியாக, தன்னை பாஜக கட்சியைச் சார்ந்தவராகப் பல இடங்களில் முன்னிறுத்தி இருக்கிறார். இவரை எப்படி நீதிபதியாக ஏற்க முடியும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பதிவு

கடந்த ஜனவரி 20-தேதி தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில், நீதி பிழைக்குமா? என்னும் கேள்வியுடன், விக்டோரியா கௌரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்பிற்கு கொலீஜியத்தால் பரிந்துரைக்கப் பட்டுள்ளார். இவரது ட்விட்டர் சுயதகவல்கள் அவர் பாஜக மகிளா மோர்ச்சாவின் தேசிய செயலாளர் என்கிறது. யாரைத் தொடர்கிறார் என்கிற விபரங்கள் அந்த கணக்கில் உள்ளவை என்பதைக் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார்.

'விக்டோரியா கௌரி குறித்து' கனகராஜ் ட்விட்டர் பதிவு

அதேபோல், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவும், ``கௌரியின் பிற்போர்க்குத்தனமான கருத்துக்கள், அடிப்படை அரசியல் அமைப்புக்கு எதிரானது. சிந்தாந்தம் ரீதியிலான அவரின் மத வெறிச்சிந்தனை ஆபத்தானது. அனைத்து மக்களுக்கும் சட்டம் சமமானது என்பது இவரின் நியமனத்தால் கேள்விக்குறியாகும் என்பதால் இவரது பரிந்துரை மறுபரிசீலனை செய்யவேண்டும்” என வலியுறுத்தியிருக்கிறார்.

ஒருபக்கம், இவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இவருக்கு ஆதரவாக உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 3-ம் தேதி இவர்கள் சார்பாக மனு கொலீஜியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், ``விக்டோரியா கௌரி நீதிபதி நியமனத்துக்கு தகுதி வாய்ந்தவர். எனவே, மூத்த வழக்கறிஞர்கள் இவருக்கு எதிராக அனுப்பிய மனுவை தவிர்க்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.

குறிப்பாக, லவ் ஜிகாத் குறித்து பேசுவதாக இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ``உண்மையான காதல் என்றால் 'மதம் கடந்து ஆதரவை' அவர் தருவார். ஆனால் திட்டமிட்டு 'காதல்' என்னும் பெயரை சொல்லி மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்துவதை எதிர்த்து மட்டுமே பேசினார். தவிர, அனைத்து மதத்தினரிடமும் அவர் நடப்புடன் இருப்பவர்” எனவும் சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மதுரை உயர் நீதிமன்றம்

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிலரிடம் பேசினோம், ``அவர் பாஜக –வில் இணைந்து  முழு நேர அரசியல்வாதியாக இருக்கிறார். அவர் பேசிய கருத்துக்கள் சட்டத்துக்கு எதிராக இருப்பது தான் நாங்கள் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு. குறிப்பாக, இந்தியாவின் முக்கிய கொள்கையாக இருக்கும்  மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படுகிறார். அவர் சிறுபான்மையினருக்கு எதிராக கருத்துக்களை தீவிரமாகப் பேசியிருக்கிறார். லவ் ஜிகாத், குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகப் பல இடங்களில் பேசி, சிறுபான்மையினருக்கு எதிராக தன் வெறுப்பு பிரசாரங்களை செய்திருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வழக்கறிஞர் ஜான் சத்தியன் என்பவர் கொலீஜியம் பரிந்துரைகளின் பட்டியலில் இருந்தார். ஆனால், அவர் யாரோ ஒருவர் பிரதமர் மோடி சார்ந்த பதிவிட்டிருந்த செய்தியை தன் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஒரே காரணத்திற்காக அவரின் நீதிபதி பரிந்துரை திரும்பப் பெற்றப்பட்டது. இப்படி தொடர்ந்து மத்திய அரசுக்கு இணக்கமானவர்களை அவர்கள் அதிகாரத்தில் அமர வைத்து தமிழகத்திலும் அரசியல் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் எண்ணமாக இருக்கிறது. இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்கள்.

வழக்கறிஞர்கள்

சில அரசியல் கட்சிகளும் இவரின் பரிந்துரை எதிர்த்து பேசி வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் வழக்கறிஞர்கள் இவர் பரிந்துரையை விமர்சித்துள்ளனர். நீதிபதிகளாக இருந்தவர்கள் ஓய்வுக்குப் பின் அரசியலில் ஈடுபடுவது பிரச்னை இல்லை. ஆனால், அரசியல் சார்புடைய ஒருவர் நீதிபதியாக நியமிக்கக்கூடாது என்பதே எதிர்ப்பவர்களின் கருத்து . இதை ஏற்று கொலீஜியம் விக்டோரியா பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமா?... அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!



from India News https://ift.tt/ElzKc2t

Post a Comment

0 Comments