மத்திய பட்ஜெட் 2023-24 நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா முடக்கம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மக்கள் முழுமையாக மீளாமலிருக்கும் நிலையில், பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 7,00,000 ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு, டாக்ஸ் ரிபேட் (TAX REBATE), 3,00,000 ருபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு என புதிய சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மக்களை ஈர்க்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்தப் புதிய வரி விதிப்பு ஏற்படுத்தும் தாக்கங்கள் என்னென்ன?
நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது அவர், ``இந்தப் புதிய வரி கவர்ச்சிகரமானது. இதில் பல சலுகைகள் இருக்கின்றன. எனவே, பழைய வரி செலுத்துவோர் எந்த தயக்கமும் இல்லாமல், புதிய வரிக்கு மாறலாம். அதேபோல், நேரடியாக வரி செலுத்த வேண்டும் என்றே பெரும்பான்மை மக்கள் விரும்புகின்றனர். அதனால், அதை அமல்படுத்தியிருக்கிறோம். இது இனி 2 முதல் 3 ஆண்டுகளுக்கு தொடரும். குறைவான வரி விதிக்கப்பட்டிருக்கும் இந்த 'புதிய வரி முறை' எளிமையானது'' என்றார்.
ஆனால், இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ``மத்திய அரசு பல்வேறு காரணங்களுக்காக புதிய வரிகளைத் திணித்து வருகிறது. ஆனால், அது நியாயமற்றது. பழைய வரியை செலுத்துவருக்கு கிடைக்கும் சிறிய சமூக பாதுகாப்பு இதனால் பாதிக்கப்படும். எனவே இது ஏழை மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் விளைவித்த இரக்கமற்ற பட்ஜெட்'' என விமர்சித்திருந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் பழைய, புதிய வரி முறை என இரு வகையான வரிகள் கொண்டுவரப்பட்டன. இதன்படி பழைய வரி விதிப்பில், 80c 80d போன்ற வரி விலக்கிற்கான வாய்ப்புகள் இருந்தன. குறிப்பாக, சேமிப்புக்கு அதில் முக்கியத்துவம் இருந்தது. ஆனால், இந்தப் புதிய வரி முறையில் குறைவான வரி விதிக்கப்பட்டு, சேமிப்பிற்கான எந்தத் திட்டமும் இல்லை. இதனால், வரி விலக்கு கிடைக்கிறது என்னும் காரணத்தைக் காட்டி மக்களைப் புதிய வரி முறைக்கு இழுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், சேமிப்பு என்பது இதில் இல்லை என்பதால் மக்கள் பாதிக்கப்படுவர் என்பதே எதிர்தரப்பு வைக்கும் குற்றச்சாட்டாக இருக்கிறது.
ஆகவே, இது குறித்து பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயாவிடம் பேசினோம். அவர், "வரும் ஆண்டில் மாநில தேர்தல்கள், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைகளைப் பா.ஜ.க சந்திக்க இருக்கிறது. எனவே, தங்களுக்கு சாதகமாக இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் மட்டுமே இந்த சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் எத்தனை பேருக்கு ரூபாய் 7,00,000 ஆண்டு வருமானமாக இருக்கிறது... மிகவும் சிறிய எண்ணிக்கையில் இருப்பவர்களுக்குத் தான் இந்த சலுகை உதவும். ஆனால், ஏழை நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இதனால் எந்தப் பலனுமில்லை.
அதேபோல், இது தேர்தலிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் சலுகையே இல்லை என நினைத்தவர்கள் இதை ஒரு சலுகையாகவும் நினைத்துக்கொள்ளலாம். அதேபோல், மத்திய அமைச்சர் சொல்வதுப் போல, இத ஒரு கவர்ச்சியான பட்ஜெட்டைப் போல தெரியலாம். மேலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால், நெருக்கடியான சூழல், பண வீக்கம், மந்த நிலையை கருத்தில் கொள்ளாமல் உருவாகியிருக்கும் இந்த பட்ஜெட், வரும் ஆண்டில் நிச்சயம் பின்விளைவுகளை ஏற்படுத்தும். அப்போது, அரசு இது தவறான முடிவு என்பதை உணர்ந்துகொள்ளும்'' என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், ``குறிப்பாக, சென்ற ஆண்டுகளில் சாதாரண மக்கள் வங்கிகளில் சேமித்த தொகைக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. தற்போது சேமிப்பு ஊக்கப்படுத்தாத புதிய வரி முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது . இதனால், சேமிப்பு என்பதைக் கைவிட்டு, மக்கள் பங்கு சந்தையை நோக்கி நகரும் நிர்பந்தம் இந்த பட்ஜெட்டால் ஏற்படும். இது உத்தரவாதம் தரும், வட்டி தரும் வங்கி போன்ற தளத்திலிருந்து மக்களை நிலையில்லாத மியூச்சுவல் ஃபண்டு, பங்கு சந்தையில் முதலீடு செய்ய தூண்டும்.
இந்திய மக்கள் நிரந்தரமான நிதியை அளிக்கும் வேலைவாய்ப்பு, குறைந்தபட்ச வருமானம், ஜனநாயக உரிமையை கேட்கின்றனர். அதை வழங்குவதன் வாயிலாக நடுத்தர ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயரும். ஆனால், அதை இந்த பட்ஜெட் செய்யவில்லை. மேலும் அவர்களை வஞ்சிக்கும் வகையில் அவர்களுக்கு ஆதரவான திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைத்து வருகிறது. குறிப்பாக, பட்டியலின, பழங்குடி, சிறுபான்மை மாணவிகளுக்கு வழங்கும் கல்வித்தொகை குறைப்பு, ரத்து என்பதை மத்திய அரசு தொடர்ந்து செய்கிறது. அதை உறுதி செய்யும் வகையில், இந்த முறை சிறுபான்மை உதவித்தொகை திட்டத்துக்கான நிதியைக் குறைத்திருக்கிறது. இது அவர்கள் நிலையை மேலும் மோசமடையச் செய்யுமே தவிர, இந்த பட்ஜெட்டில் பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய எதுவும் இல்லை.
ஏற்றத்தாழ்வு மிகுந்து இருக்கும் இந்த நாட்டில் செல்வந்தவர்கள் மீது வரியை சுமத்துவது அதிகரிக்க வேண்டும் என்னும் வாதம் முன்வைக்கப்படுகிறது. அனால், அது பெரும் முதலாளிகளின் உற்சாகத்தைக் குறைக்கும். அதனால் அவர்களால் உருவாக்கப்படும் வேலைவாய்ப்பு இல்லாமல் போகும் என்கிறார்கள். ஆனால், அப்படி எத்தனை லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு எந்தத் தகவலும் இல்லை. அவ்வாறு முதலாளிகளுக்கு எந்த வரி விதிப்பும் இல்லாமல் வெளியாகியிருக்கும் இது ஒரு ''கார்ப்ரேட் பட்ஜெட்''. இதனால், சாதாரண மக்களுக்கு எந்தவித லாபமும் இல்லை," என்றார்.
from India News https://ift.tt/IAh7XEK
0 Comments