குரூப் 2: `மறுதேர்வு தேவை’ - வலியுறுத்தும் கல்வியாளர்கள்; மறுக்கும் டிஎன்பிஎஸ்சி | என்ன நடந்தது?

குரூப் 2, 2A தேர்வில், வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தொகுப்பிற்கும், வருகைப்பதிவேட்டிற்கும் இடையிலான வரிசை வேறுபாட்டின் காரணமாக, தேர்வு எழுதுவதில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அதற்கு காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு துறைகளில், குரூப் 2 மற்றும் 2 ஏ பணிகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி மூலமாக கடந்த மே 21 -ம் தேதி முதல்நிலை தகுதி தேர்வு நடைபெற்றது.

இதில், சுமார் 9 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் கடந்த நவ., 8 -ம் தேதி வெளியானது. இதில் தேர்ச்சி பெற்ற 55 ஆயிரம் பேருக்கு, குரூப் 2 பிரதான தேர்வு கடந்த சனிக்கிழமை (25.02.2023) அன்று நடைபெற்றது. காலை தமிழ் தகுதித்தாள் தேர்வு நடைபெற்ற தேர்வு மையங்களுக்கு, கண்காணிப்பாளர்கள் மற்றும் விடைத்தாள்கள் வர தாமதமானதாக தேர்வர்கள் குற்றம் சாட்டினர்.

ஒரு பக்கம், திட்டமிட்டபடி காலை 9:30 மணிக்கு தேர்வை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டதால், தேர்வர்கள் பதட்டமடைந்தனர். கூடுதல் நேரம் கிடைக்குமா என்ற கேள்வியும் தேர்வர்கள் மத்தியில் எழுந்தது. இன்னொரு பக்கம், தேர்வை தாமதமாக தொடங்கினாலும், பல இடங்களில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட ஓ.எம்.ஆர். விடைத்தாள்களும் மாற்றி வழங்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால், குழப்பமடைந்த பல தேர்வர்கள் தங்கள் பதிவெண்களை பார்க்காமல், மாறியிருந்த விடைத்தாளில் வேகமாக விடைகளை பதிவு செய்தனர். இதையடுத்து தேர்வு மையங்களில் இருந்து, டிஎன்பிஎஸ்சி-க்கு தகவல் அளித்ததை அடுத்து விடைத்தாள்களை சரியாக வழங்கவும், விடைத்தாள் மாறியவர்களுக்கு வெற்று விடைத்தாள்கள் வழங்கியும், தேர்வு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, பிற்பகலில், 2:00 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வும் தாமதமாக துவங்கியது. மாலை, 5:00 மணிக்கு முடிய வேண்டிய தேர்வு, பல இடங்களில், 6:30 மணி வரை நடந்ததால் தேர்வர்கள் குழப்பமடைந்தனர். இந்த குளறுபடிகள் காரணமாக பல மையங்களில் தொடங்கப்பட்ட தேர்வு இடையில் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. அப்போது தேர்வர்கள், தங்களுக்கு கிடைத்த வினாத்தாளில் இருந்த வினாக்களுக்கான விடைகளை மொபைல் போனில் தேடி பார்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, முதன்மை தேர்வை ரத்து செய்து விட்டு, மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், இந்த குளறுபடி குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையயம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ``வருகைப்பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலை வினாத்தாள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை ஈடுசெய்யும் பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு முற்பகல் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. பிற்பகல் தேர்வு நேரம், 2.30 மணிக்குத் தொடங்கி 5.30 மணி வரை நடைபெறும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டது.

தேர்வுகள்

அதன்படி பிற்பகல் தேர்வானது தொடங்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களிலும் சீராக எவ்வித இடர்பாடுமின்றி நடைபெற்று முடிந்தது. பிற்பகல் தேர்வில் 94.30% தேர்வர்கள் பங்கேற்றனர். முற்பகல் தேர்வானது கட்டாயத் தமிழ் தகுதி தேர்வாகும். ஆகையால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது. இம்மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இது தகுதித்தேர்வு மட்டுமே என்பதுடன் தேர்வாணையத்தின் முன் அனுபவத்தின்படி 98 சதவிகிதத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இருப்பினும், தேர்வர்களுக்கு முற்பகல் தேர்வில் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள் சரியான முறையில் விடைத்தாள்கள் திருத்தும்போது, கருத்தில் கொள்ளப்படும். தேர்வாணையத்தின் உடனடி அறிவுறுத்தல்களின்படி, பிற்பகல் தேர்விற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையால், பிற்பகல் தரவரிசைக்கு கருதப்படும் தாள்-II பொதுஅறிவுத்தாள் தேர்வானது எவ்வித இடையூறுமின்றி அனைத்து தேர்வுமையங்களிலும் சுமுகமாக நடைபெற்று முடிந்தது. மேலும் இந்த தாள்-II தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்த வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தொகுப்பிற்கும், வருகைப்பதிவேட்டிற்கும் இடையிலான வரிசை வேறுபாடே முற்பகல் தேர்வில் ஏற்பட்ட காலதாமததிற்குக் காரணம். இந்த வேறுபாடு ஏற்படக் காரணமான அனைவர் மீதும் தேர்வாணையம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்" என்று தெரிவித்துள்ளது. 

பொன் தனசேகரன்

இதுகுறித்து கல்வியாளர் பொன் தனசேகரனிடம் பேசிய போது, "டிஎன்பிஎஸ்சி விளக்கம் ஏற்புடையது அல்ல. இது பொதுத்தேர்வு அல்ல. போட்டித்தேர்வு. முதல் நிலை தேர்வை எழுதிய 9 லட்சம் பேரில் 55 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், குரூப் 2 தேர்வில் வாங்கும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தரவரிசைப் பட்டியலில் இடம் பெற முடியும். தரவரிசைப் பட்டியலின் படியே காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். எனவே தேர்வர்களுக்கு எவ்வளவு பதட்டம் ஏற்பட்டிருக்கும் என்பதை டி.என்.பி.எஸ்.சி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கூடுதல் நேரம் கொடுத்தால் மட்டும் போதாது. ஒன்று எந்தெந்த மையங்களில் குளறுபடி ஏற்பட்டதோ, அந்த மையங்களில் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு மறு தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு ஏற்பட்ட மதிப்பெண் இழப்பை அறிவியல் பூர்வமாக அணுகி அதற்குரிய கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். எந்த பதட்டமும் இன்றி தேர்வெழுதிய தேர்வருக்கு கிடைத்த வாய்ப்பு, குளறுபடி நடந்த மையங்களில் தேர்வெழுதிய  தேர்வர்களுக்கு  கிடைக்கவில்லை என்பதை உணர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக டி.என்.பி.எஸ்.சி இனி வரும் காலங்களில் தங்கள் தவறை திருத்திக் கொள்ள வேண்டும் இது போன்ற குளறுபடிகள் இனியும் தொடரக் கூடாது" என்றார். 



from India News https://ift.tt/BPcRUFT

Post a Comment

0 Comments