கோவை நகரின் மேம்பால தூண்களில் போஸ்டர்கள் ஒட்டுவதை தடுக்கும் விதமாக, வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை, பார்ப்போரின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக உள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் தொடர்ச்சியாக பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினரால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் மேம்பாலங்கள், கட்டுமானப் பணி நிறைவடையாத மேம்பாலங்கள் என அனைத்து மேம்பாலத் தூண்களிலும் சரமாரியாக போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.
மேலும், கோவையில் போஸ்டர்கள் ஒட்டுவதில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அதன் விளைவாக போராட்டங்கள் வெடித்த சம்பவமும் நடந்துள்ளது. இது, பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகரின் அழகை போஸ்டர்கள் கெடுப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதற்கு, கோவை மாநகராட்சி சார்பாக தடை விதிக்கப்பட்டது. தடையை பொருட்படுத்தாமல் வழக்கம் போல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மேம்பாலத் தூண்களில் போஸ்டர் ஒட்டப்படுவதை தடுக்கவும், நகருக்கு கலைத்தன்மை கொடுக்கவும் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது கோவை மாநகராட்சி.
அதன்படி, அதிகம் போஸ்டர்கள் ஒட்டப்படும் மேம்பாலத் தூண்களின் மீது வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. விதவித வண்ணங்களில் வரையப்பட்டு வரும் ஓவியங்கள் காண்போரை கவரும் வகையில் உள்ளன. கோவை மாநகராட்சியின் இந்த முயற்சியை பலரும் வரவேற்றுள்ளனர்.
from India News https://ift.tt/tlaAIsZ
0 Comments