பா.ஜ.க ஆட்சி செய்யாத பிற மாநிலங்களின் ஆளுநர்களுக்கும் அந்த மாநில முதல்வர்களுக்குமிடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அந்த வகையில், பஞ்சாபில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்குமிடையேயான மோதல்போக்கு தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில், பட்ஜெட் தாக்கலுக்கான சட்டசபை கூட்டம் மார்ச் மாதம் 3-ம் தேதி கூட்டுவது என முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையில் அமைச்சர்கள் சபை முடிவு செய்திருக்கிறது. இது குறித்து முறைப்படி தெரிவித்து, சட்டசபையை கூட்ட வேண்டும் என அமைச்சரவை கலந்தாலோசித்து முடிவெடுத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு முதலமைச்சர் பகவந்த் மான் சட்டசபையை கூட்ட முறைப்படி கடிதம் அனுப்பியிருக்கிறார்.
ஆனால், ஆளுநர், சட்டசபையை கூட்ட மறுத்து, அது தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில்," உங்கள் ட்விட்டர் பதிவும், கடிதமும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது மட்டுமல்ல, மிகவும் இழிவானதாகவும் அமைந்திருந்தன. பட்ஜெட்டுக்காக சட்டசபை கூட்டுவது தொடர்பாக, சட்ட ஆலோசனையை பெற்றப் பிறகு, உங்கள் கோரிக்கை குறித்து முடிவெடுப்பேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பஞ்சாப் அரசின் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி வாதாடினார் அப்போது,"அரசியலமைப்பின் கீழ் அதிகாரம் பெற்றிருக்கும் ஆளுநர், அரசியலமைப்பு பற்றி ஏதுமறியாமல் செயல்படுகிறார். அவர் அரசியலமைப்பை அபகரிக்கிறார்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஆளுநரின் சார்பில் ஆஜரான ஜெனரல் சொலிஸிட்டர் துஷார் மேத்தா," ஆளுநர் சட்டசபையைக் கூட்டுவதற்கு ஒருபோதும் மறக்கவில்லை. அவர் சட்ட ஆலோசனை பெற்ற பின்பு சட்டசபை கூட்ட முடிவெடுப்பேன் என தெரிவித்திருக்கிறார். மார்ச் 3-ம் தேதி சட்டசபை கூட்டவிருக்கிறார். எனவே பஞ்சாப் அரசின் முறையீடு பயனற்றது" எனத் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சந்திர சூட்," ஆளுநர் கேட்கிற தகவல்களை மாநில அரசு வழங்க வேண்டிய கடமையுண்டு. அதே நேரத்தில், சட்டசபை கூட்டுவது தொடர்பாக அமைச்சர்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டிய கடமை ஆளுநருக்கும் இருக்கிறது. சட்டசபை கூட்டுவது தொடர்பாகச் சட்ட ஆலோசனை பெறவேண்டிய தேவை ஆளுநருக்கு இல்லை. அதே நேரம் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு உட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும்.
இந்த நீதிமன்றம் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்படுத்துதல் பற்றி அறிந்திருந்தாலும், அரசியலமைப்பு பதவியில் இருப்பவர்கள் கண்ணியத்துடனும், முதிர்ந்த அரசியல் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக அரசியலமைப்பின் கீழ் செயல்படுகிறவர்களுக்கு மத்தியில், மக்கள் நலனுக்காகச் சேர்ந்து செயல்படுகிற தன்மை வேண்டும்.
ஜனநாயக அரசியலில் கருத்து வேறுபாடுகள் ஏற்கதக்கவைதான். ஆனாலும், நிதானத்துடன் செயல்பட வேண்டும். இந்த கொள்கைகளை மனதில் கொள்ளானவரையில், அரசியலமைப்பு விழுமியங்களைத் திறம்படச் செயல்படுத்துவது ஆபத்தில் தள்ளப்பட்டுவிடும்" என்று தெரிவித்திருக்கிறார்.
from India News https://ift.tt/eA2IDCb
0 Comments