``பாஜக-வின் இந்த செயல் வருத்தமாகத்தான் இருக்கிறது” - சொல்கிறார் கே.பி.முனுசாமி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பல குழப்பங்கள், பல கட்ட ஆலோசனைகள், நீதிமன்றம் - தேர்தல் ஆணையம் என எல்லம் கடந்து, அதிமுக-வின் தேசிய ஜனநாயக கூட்டணி இப்போது ஒரு சுமூகமான முடிவுக்கு நகர்ந்திருக்கிறது. இதன் பின்னணியோடு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அ.தி.மு.க-வின் மூத்த தலைவரும், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமியிடம் தொலைபேசி மூலமாக சில கேள்விகளை முன் வைத்தேன்.

``கூட்டணிக்குள் குழப்பம், கேள்விக்குறியாக இருந்த சின்னம் என அதிமுக சிக்கி தவிக்கும் போது, எப்படி வலுவான கூட்டணியோடு இருக்க கூடிய திமுக-வை எதிர் கொள்ள போகிறீர்கள்?”

“தேர்தல் அறிவித்ததுமே அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் வேலைகளை தொடங்கிவிட்டார். அதை தொடர்ந்து எங்கள் வேலைகளையும் தேர்தல் களத்தில் எப்போதோ ஆரம்பித்துவிட்டோம். இடையில் வர கூடிய தவிர்க்க முடியாத சில சங்கடங்களை எல்லாம் எதிர் கொண்டு வருகிறோம். அவ்வளவுத்தான்... தேர்தல் பணிக்கும், இதற்கும் சம்பந்தம் கிடையாது. அதே வேளையில் கூட்டணிக்குள் எந்த சிக்கலும் இல்லை. இந்த போஸ்டர் விவகாரம் மற்றும் எங்கள் கட்சியின் நிர்வாகிகள் பேசியதெல்லாம் சிறு சிறு விஷயங்கள். அதை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியமில்லை”

``ஆனால், ‘அ.தி.மு.க-வுக்குள் இப்படியே உட்கட்சி சண்டைகள் நடந்து கொண்டிருந்தால் அ.தி.மு.க என்கிற கட்சியே இல்லாமல் போய்விடும்...’ என்கிறார்களே அரசியல் பார்வையாளர்கள்?”

``அரசியல் விமர்சகர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு ஏதாவது ஒரு கொம்பு பிடிக்க வேண்டும். இப்போது அ.தி.மு.க-தான் கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கும் அளவுக்கு சக்தி படைத்தவர்கள் யாருமில்லை. அதனால் வெளியேற்றப்பட்டவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்கு பல்வேறு வகையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசியல் விமர்சகர்கள் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்றவாறு, கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அதை பற்றி கவலைப்படுவதில்லை. ஏனென்றால், இன்று தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களை எதிர்த்து போராடக் கூடிய சக்தியுடைய இயக்கம் அ.தி.மு.க மட்டும் தான். அதனால் வெளியேற்றப்பட்ட அவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு கதை பேசுபவர்கள் பற்றி எங்களுக்கு கவலையில்லை”

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

``நீங்கள், எதிர்க்கட்சி அ.தி.மு.க என்கிறீர்கள்... ஆனால், அந்த இடத்துக்கு பா.ஜ.க வளர்ந்து வருகிறது என்கிறார்களே?”

“அது... அப்படி சொல்பவர்களின் கருத்து...”

```இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, எதற்கும் துணிந்து விட்டார் எடப்பாடி’ என்று சொல்லப்படுகிறதே?”

“அ.தி.மு.க தலைமையில் இருக்க கூடிய தேசிய ஜனநாயக கூட்டணியின், அ.தி.மு.க வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில்தான் களம் இறங்குகிறார். புரட்சி தலைவர் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, அ.தி.மு.க-வுக்கு உரிமையான சின்னம் இரட்டை இலை. அந்த உரிமையான சின்னத்தில் மற்றவர்கள் பங்கு பெறுவதற்கோ அல்லது அந்த சின்னத்தை முடக்குவதற்கு முயற்சி செய்தார்கள் என்று சொன்னால், நிச்சயமாக அவரகளால் வெற்றி பெற முடியாது. உறுதியாக உண்மையான தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் வெற்றி கிடைக்கும். இப்போது உண்மையான தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பதினால், சோதனைகள் பல சந்தித்தாலும் கூட எதிரிகளை வெற்றி பெறக் கூடிய சூழல் உருவாகிறது”

தினகரன், சசிகலா

``ஆனால், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரையும் ஒரே அளவீட்டில்தானே பா.ஜ.க-வும், தேர்தல் ஆணையமும் பார்க்கிறார்கள்?”

``அது சற்று வருத்தமளிக்க கூடிய செயலாக இருக்கிறது. காரணம், ஒரு இயக்கத்தில் ஒரு தனிமனிதனின் அழுத்ததுக்கு அவர்கள் செவி சாய்த்துவிடக் கூடாது. ஏனென்று சொன்னால், இந்த இயக்கம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒர் உண்மை. அந்த நிலையில் பொதுக்குழுவால் வெளியேற்றப்பட்ட ஒரு நபரை எங்களோடு இணைத்து இணைத்து பேசுவது வேதனையான நிகழ்வுத்தான்”

ஓ.பி.எஸ், கே.பி.முனுசாமி

``ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், சசிகலா என எல்லோருமே ஒன்றுபட்ட அ.தி.மு.க-வை நோக்கி வரும் போது அதை ஏற்பதில் என்ன சிக்கல்?”

``புரட்சி தலைவி அம்மா அவர்கள், `முன்னால் வந்து நிற்க கூடாது’ என்று கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நபர்தான் டி.டி.வி. தினகரன். அவருக்கு ஏதாவது தேவை என்பதற்காக அரசியல் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் அந்த அம்மையாரும். அ.தி.மு.க-விலிருந்து அவர்களை பற்றிய விமர்சனமோ அல்லது அவர்களுக்கான பதில் சொல்லும் அளவுக்கு சக்தி படைத்தவர்கள் இல்லை.”

“ஓ.பி.எஸ்-க்கு முன்னாள் நண்பராக நீங்கள் சொல்லும் ஆலோசனை?”

“எங்களை விட்டு வெகுதூரம் சென்றவர்களுக்கு ஆலோசனை கூறுவது, அவ்வளவு நாகரீகமாக இருக்காது என்று நான் கருதுகிறேன்”

அதிமுக பொதுக்குழு

“இந்த தேர்தலில் சிறுபான்மையினர் வாக்கு பெறுவதற்காக பா.ஜ.க-வை விட்டு விலகி நிற்பது போன்ற ஒரு தோற்றத்தை எடப்பாடி உருவாக்கியிருக்கிறார் என்கிறார்களே?”

``முதலில் எங்களுக்கு எங்கள் கொள்கை முக்கியம். இரண்டாவது எங்கள் கட்சியின் தன்மானம் முக்கியம். இது இரண்டுக்கும் யாரால் பங்கம் ஏற்படும் என்று சொன்னால் அவர்களை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதேநேரத்தில் எங்கள் மீது பாசமும், பற்றும் உடையவர்கள் அல்லது சிறிய கட்சியாக இருந்தாலும் சரி, பெரிய கட்சியாக இருந்தாலும் சரி அவர்களுக்கு உரிய மரியாதையையும், கௌரவத்தையும் கொடுக்கக் கூடிய இயக்கம் அ.தி.மு.க. எனவே இதெல்லாம் எங்கள் கூட்டணியை பலவீனப்படுத்துவதற்கு வேலையற்றவர்கள் சொல்லும் விமர்சனம்”

``அப்படி என்றால், ‘கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் போன்றோர் பா.ஜ.க-கூட்டணியிலிருந்து அ.தி.மு.க விலக வேண்டும் என்று சொல்கிறார்கள்' என வரும் செய்திகள் எல்லாம்?”

“அரசியல் விமர்சகர்கள், எங்களை பிடிக்காதவர்கள் இது போன்ற சில விஷயங்களை சொல்லலாம். எங்களை பொறுத்தவரை கழகத்தின் பொதுச்செயலாளர் என்ன சிந்திக்கிறாரோ அதன் அடிப்படையில் எங்கள் வெளிபாடுகள் இருக்கும். எங்களுக்கு என்று தனி கருத்துக் கிடையாது. குறிப்பாக எனக்கு என்று தனி கருத்துக் கிடையாது. கழகமும், கழகத்தின் பொதுச்செயலாளரும் எடுக்கிற முடிவுகளுக்கு கட்டுப்பட்டு அதற்கு செயல்படக்கூடிய சாதாரண தொண்டன். எனக்கென்று தனிப்பட்ட கருத்து கிடையாது. அடுத்து, சி.வி.சண்முகத்துக்கும் எனக்கும் பிரச்னை என்கிறார்கள். அவர் மீது கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான எண்ணம் எந்த சூழ்நிலையிலும் எனக்கு வராது. நான் வயதில், அனுபவத்தில் மூத்தவன். என்னைப்போலவே உணர்வுள்ள உணர்ச்சிமிக்க தொண்டன் தம்பி சி.வி.சண்முகம். இந்த இயக்கத்துக்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் குடும்பம் அவரின் குடும்பம். எப்படியாவது, இந்த இயக்கத்தினுடைய வேகத்தையும், மீண்டும் ஆட்சி அமைப்பதையும் தடுக்க விஷமிகள் சித்து விளையாட்டு இது”

அண்ணாமலை, கே.பி.முனுசாமி

“பாரம்பரிய கட்சியான அ.தி.மு.க-வின் உள் விவகாரங்களில் பா.ஜ.க தலையிட்டு பஞ்சாயத்து செய்வதை ஒரு மூத்த தலைவராக எப்படி ஏற்கிறீர்கள்?”

“பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இது குறித்து வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். எனவே அதை பற்றி விமர்சனம் செய்வதற்கு ஒன்றுமில்லை”



from India News https://ift.tt/Is3Ktk0

Post a Comment

0 Comments