பெண்ணைத் தொட்டுப் பேசக்கூடாதென சட்டக் கல்லூரி மாணவனுக்குத் தெரியாதா? - அபர்ணா; விழாவில் நடந்ததென்ன?

கேரளாவைச் சேர்ந்த நடிகை அபர்ணா பாலமுரளி மலையாளம் மட்டுமல்லாது தமிழ் உள்ளிட்ட பிறமொழி சினிமாக்களிலும் நடித்துள்ளார். `சூரரைப் போற்று' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நடிகை அபர்ணா நடித்த `தங்கம்' என்ற மலையாள சினிமாவின் புரமோஷன் நிகழ்ச்சி மற்றும் மாணவர் சங்க திறப்புவிழா ஆகிய நிகழ்ச்சிகள் கடந்த 18-ம் தேதி எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் நடிகை அபர்ணா பாலமுரளி, நடிகர் வினீத் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார். மேடையில் இருந்த நடிகையை வரவேற்கும் விதமாகப் பூங்கொத்து கொடுத்த கல்லூரி மாணவர் ஒருவர் நடிகை அபர்ணா பாலமுரளியின் கைகளைப் பிடித்து இழுத்து இருக்கையில் இருந்து எழுப்பினார். மேலும் அவரை மேடைக்கு முன் பக்கம் அழைத்து வந்து தோளில் கைபோட்டபடி செஃபி எடுக்க முயன்றார். ஆனால், நடிகை அபர்ணா மாணவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, "என்னடா இது சட்டக்கல்லூரி இல்லையா" எனக்கேட்டபடி மீண்டும் இருக்கையில் அமர்ந்தார். மேடைக்கு வந்த அந்த மாணவனின் செயலால் அபர்ணா பாலமுரளி அதிர்ச்சியடைந்தார். மேடையில் இருந்தவர்களும் எதுவும் சொல்லமுடியாத அவஸ்தையில் அமர்ந்திருந்தனர்.

நடிகை அபர்ணா கையை பிடித்த கல்லூரி மாணவன்

இதையடுத்து நிகழ்ச்சி நடக்கும்போதே மீண்டும் மேடைக்கு வந்த அந்த மாணவன், "நான் வேறு எண்ணத்தில் அப்படி நடந்துகொள்ளவில்லை. நான் உங்கள் ஃபேன் என்பதால் போட்டோ எடுக்க முயன்றேன்" எனக்கூறி வருத்தம் தெரிவித்ததுடன் அபர்ணாவிடம் மீண்டும் கைகுலுக்க முயன்றார். ஆனால் அபர்ணா கை கொடுக்காமல் தவிர்த்தார். அடுத்ததாக நடிகர் வினீத் சீனிவாசனுக்கு கைகொடுத்தார் மாணவர், "ஒன்றும் பிரச்னை இல்லை போ" என கூறி அவரும் கை குலுக்க மறுத்துவிட்டார். எர்ணாகுளம் சட்டக்கல்லூரியில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலானது.

இதுகுறித்து நடிகை அபர்ணா பாலமுரளி கூறுகையில், "எர்ணாகுளம் சட்டக்கல்லூரியில் ஒரு மாணவர் என்னிடம் மோசமாக நடந்துகொண்டது வேதனையாக உள்ளது. ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவரைத் தொடுவது சரியல்ல என்ற புரிதல் சட்டக்கல்லூரி மாணவனுக்கு இல்லாதது வேதனைக்குரியது. கையைப் பிடித்திழுத்தது, பின்னர் உடலில் கைவைத்து நிற்க வைக்க முயன்றது எல்லாம் ஒரு பெண்ணிடம் காட்டவேண்டிய மரியாதையல்ல. அந்த விவகாரத்தின் பின்னால் செல்ல நேரம் இல்லை என்பதால் நான் புகார் அளிக்கவில்லை. எனது எதிர்ப்புதான் எனது பதில்" எனத் தெரிவித்தார்.

அபர்ணா பாலமுரளி

இதையடுத்து அரசு சட்ட கல்லூரியில் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது மாணவர் சங்கம். அந்த அறிக்கையில், "எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் நடந்த யூனியன் திறப்புவிழா நிகழ்ச்சியில், ஒரு மாணவன் நடிகையிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. கல்லூரி மாணவர்சங்க நிர்வாகிகள் அதை தடுக்க.முயன்றதுடன் மன்னிப்பும் கேட்டுக்கொண்டோம். இந்த நிகழ்வை மிகவும் தீவிரமாகப் பார்க்கிறோம். நடிகைக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு கல்லூரி மாணவர் சங்கம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது" என கூறப்பட்டுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/w0DGOpv

Post a Comment

0 Comments