உத்தரப்பிரதேச மாநிலம், முசார்ஃபர் நகரைச் சேர்ந்தவர் ஹர்பீர் சிங். இவர் அந்தப் பகுதியில் நீண்ட காலமாக பால் வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில், ஹர்பீர் சிங் விற்பனை செய்துவந்த பாலில் கலப்படம் இருப்பதாக 1990-ம் ஆண்டு புகார் எழுந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, அப்போதைய உணவு ஆய்வாளர் சுரேஷ் சந்த் என்பவர், ஹர்பீர் சிங்கின் பாலை ஆய்வு செய்திருக்கிறார். அப்போது பால் கலப்படம் செய்யப்பட்டிருந்தது உறுதியானது. அதைத் தொடர்ந்து, அவர் மீது ஏப்ரல் 21, 1990 அன்று நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
இந்த விவகாரத்தில் புகார் பதிவுசெய்யப்பட்டு 32 ஆண்டுகளுக்கும் மேலாக, கலப்பட பால் விற்பனை செய்த நபர் மீதான விசாரணை நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பால் விற்பனையாளர் ஹர்பீர் சிங்கைக் குற்றவாளியென உறுதிசெய்த, கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்டிரேட் பிரசாந்த் குமார், ஹர்பீர் சிங்குக்கு ரூ.5,000 அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டார்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அரசு துறை அதிகாரி ராமவதார் சிங், ``1990-ம் ஆண்டு ஹர்பீர் சிங்கின் விற்பனை செய்த பாலின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டபோது அதில் கலப்படம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அப்போதே உணவு ஆய்வாளர் சுரேஷ் சந்த், நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அந்த வழக்கில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு, கலப்படம் செய்யப்பட்ட பாலை விற்ற நபருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/WewXdFE
0 Comments