கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் நாள்களிலும், பிரசவ நேரத்திலும் விடுப்பு; கேரள அமைச்சர் அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (CUSAT) மாணவிகளுக்கு மாதவிடாய் நாள்களில் விடுப்பு எடுக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. வழக்கமாகப் பல்கலைக்கழகங்களில் தேர்வு எழுத ஒரு செமஸ்டருக்கு 75% வருகைப்பதிவு இருக்க வேண்டும். மாதவிடாய் நாள்களில் மாணவிகள் அனுபவிக்கும் கஷ்டத்தைக் கருத்தில் கொண்டு விடுப்பு எடுத்துக்கொள்ள வசதியாக வருகைப்பதிவில் 2% தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 73% வருகைப்பதிவு இருந்தாலே மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனக் கொச்சி பல்கலைக்கழகம் அறிவித்தது.

இந்த நிலையில், இதை கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளிலும் செயல்படுத்த, மாணவிகள் மாதவிடாய் நாள்களில் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து அறிவித்துள்ளார்.

கல்லூரி மாணவிகளுக்கு விடுப்பு அறிவித்து அமைச்சரின் அறிவிப்பு

இதுகுறித்து கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து கூறுகையில், ``மாநிலத்தில் உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கல்லூரிகளில் மாணவிகளுக்கு மாதவிடாய் நாள்களிலும், பிரசவ காலத்திலும் விடுமுறையை அனுமதித்து உத்தரவிட்டுள்ளேன். மாணவிகள் தேர்வு எழுத 73% வருகைப்பதிவு இருந்தால்போதும். அதுபோல 18 வயதுக்கு மேல் உள்ள மாணவிகளுக்கு 60 நாள்கள் வரை பிரசவ விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கொச்சி பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு மாதவிடாய் நாள்களில் விடுப்பு அனுமதிக்கப்பட்டது. அந்த அனுமதியை அனைத்து பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவிகளுக்கும் வழங்க தீர்மானித்துள்ளோம். பல்கலைக்கழக விதிமுறையில் இதற்கான சட்ட திருத்தம் ஏற்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/0eLs3KX

Post a Comment

0 Comments