கர்நாடக மாநிலம், மைசூர் டி.நரசிபுரம் தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில், கடந்த மூன்று மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதம் குடியிருப்புகளுக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, நாய், ஆட்டுக்குட்டி உள்ளிட்ட உயிரினங்களை கொன்றது. வனத்துறை கண்காணிப்பு மேற்கொண்டிருந்த நிலையில் டிசம்பர், 1ம் தேதி, கெப்பேஹண்டி கிராமத்தைச் சேர்ந்த அரசுக் கல்லுாரி இறுதியாண்டு மாணவி மேகனாவை (20) தாக்கி கொன்றது.
அதன்பின் கடந்த வாரம், இரண்டு நாள்கள் இடைவெளியில், மேகனா வீட்டிலிருந்து, நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கன்னையாகனஹள்ளியில், சித்தம்மா என்பவரையும், ஹோரலஹள்ளி கிராமத்தை சேர்ந்த, 11 வயது சிறுவன் ஜெயந்த் என்வரையும் தாக்கி கொன்றது. நான்கு மாதங்களுக்குள் நான்கு பேர் சிறுத்தை தாக்கி இறந்ததால், வெகுண்டெழுந்த மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் அப்பகுதியில், ஒன்பது இடங்களுக்கு மேல் கூண்டு வைத்து, 110 பணியாளர்களை கண்காணிப்பு பணியில் களமிறக்கினர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, சிறுவன் ஜெயந்த் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகே, கூண்டில் சிறுத்தை சிக்கியது.
இதுவரை, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான, சிறுத்தையின் உடலமைப்பு, உடலிலுள்ள கோடுகள் ஒரே மாதிரியாக இருந்ததால், நால்வரை கொன்றது இந்த சிறுத்தை தான் என கண்டறியப்பட்டது.
இது குறித்து மைசூர் வனக்கோட்ட வன உயிரின பாதுகாவலர் மாலதி பிரியா நிருபர்களிடம், ‘‘இறந்தவர்களின் உடலில் கிடைத்த சிறுத்தையின் டி.என்.ஏ மற்றும் பிடிபட்ட சிறுத்தையின் டி.என்.ஏ மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வந்தால் தான் அதே சிறுத்தையா என்பது தெரியவரும். ஆனாலும், உடலமைப்பில் சிறுத்தைகளின் அனைத்து படங்களும், பிடிபட்ட சிறுத்தையுடன் ஒத்துப்போகிறது. பிடிபட்ட சிறுத்தையை பெங்களூரில் உள்ள பென்னர்கட்டா தேசிய பூங்காவில் வைத்து பராமரிக்கவுள்ளோம். மீதமுள்ள கூண்டுகள் அகற்றப்படவில்லை, மற்ற சிறுத்தைகள் பிடிபடுகிறதா என கண்காணிக்கிறோம்,’’ என்றார்.
முதல்வர் பவசராஜ் பொம்மை நிருபர்களிடம், ‘‘கடுமையாக உழைத்து சிறுத்தையை பிடித்த வனத்துறை ஊழியர்களின் முயற்சி பாராட்டிற்குறியது. கர்நாடக மாநிலம் முழுவதிலும் சிறுத்தை – மனித மோதலை தடுக்க, வனத்துறையினர் புதிதாக பிரத்தியேக கண்காணிப்பு குழு அமைக்கப்படும். மேலும், இதற்கென பிரத்தியேக பயிற்சிகள் கொடுக்கப்படுவதுடன், நிதியும் ஒதுக்கப்படும்,’’ என்றார்.
சிறுத்தை பிடிபட்டதால் மைசூர் சுற்றுப்பகுதியிலுள்ள மக்கள் நிம்மதியடைந்து உள்ளதுடன், சிறுத்தை பிடிபட்டதை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/vqn2Z7W
0 Comments